அத்தியாயம் – 8
அருவியும்! ஏமாற்றமும்!
அந்த விறகு உடைந்த கூர்மையான “டக்!” என்ற சத்தம், அடர்ந்த காட்டின் அமைதியை ஒரு நொடியில் உலுக்கி எடுத்தது. சலசலக்கும் இலைகளின் நடுவே எழுந்த அந்த ஒற்றைச் சத்தம், ஏதோ ஒரு ஆபத்து தங்களை அணுஅணுவாக நெருங்குகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.
நடந்து கொண்டிருந்த முகில்வர்மன் சட்டெனத் தன் நடையை நிறுத்தினான். அவனது தோள்கள் சட்டென ஒரு விரைப்பு நிலைக்கு வர, நிமிர்ந்தவனின் பார்வை இரவிலும் தன் இரையைத் துல்லியமாக வேட்டையாடும் சிறுத்தையின் பார்வையைப் போல இருந்தது. மெதுவாகப் பின்புறம் திரும்பினான். அவனது உடலின் ஒவ்வொரு நரம்பும், காட்டின் இயல்புக்கு மாறான அந்த நகர்வை உணர்ந்து விழித்துக் கொண்டது.
சுனையாழி சாக்லேட்டை வாயில் வைக்கப்போன கை அப்படியே அந்தரத்தில் நிற்க, திடுக்கிட்டுப் பின்னால் பார்த்தாள்.
“என்ன ஆச்சு சார்?” என்று லேசான நடுக்கத்தோடு குரலைத் தாழ்த்தி மெல்லக் கேட்டாள்.
இளமாறனும் தன் கையிலிருந்த தடியை இறுக்கிப் பிடித்தபடி, சுற்றிலும் இருந்த புதர்களை நோட்டமிட்டவாறே பின்னால் திரும்பினான்.
“யாரோ நம்மளைத் தொடர்ந்து வர்றாங்க...” முகிலின் குரலில் அத்தனை எச்சரிக்கையும் தீவிரத்தன்மையும் கலந்திருந்தது.
“இங்க நம்மையும் தாண்டி யாராவது இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா, இல்ல மிருகம் ஏதாச்சும் இருக்குமோ சார்?” என்று மாறன் குரலை மெலிதாக்கிக் கேட்க,
“இல்லை மாறன்... ஒரு மிருகத்தோட தறிகெட்ட நகர்வுக்கும், தன் காலடிச் சத்தம் கேட்கக் கூடாதுன்னு ரொம்ப கவனமா பார்த்துப் பார்த்து அடியெடுத்து வைக்கும் மனிதனோட நரித்தனமான நடைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு,” என்றவாறே முகில் மெதுவாகப் பின்னோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தான். அவனது கூர்மையான கண்கள் மரங்களின் நிழல்களையும், அடர்ந்த புதர்களையும் அணுவணுவாக ஆராய்ந்தன.
சில நூறு அடிகள் தள்ளி, மிகப் பிரம்மாண்டமான மரத்தின் தடிமனான உடலுக்குப் பின்னே தன் மூச்சைக் கூடக் கட்டுப்படுத்திக் கொண்டு, மரத்தோடு மரமாக ஒட்டியது போல நின்றிருந்தான் வசீகரன். நெற்றியில் அரும்பிய வியர்வைத்துளியைத் துடைத்தபடி, “சீட்! சின்னக் கவனக்குறைவு...” என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை மட்டும் முகில்வர்மனிடமே இருந்தது.
“பிஸினஸ்மேனாச்சே... இந்த அளவுக்குக்கூட எச்சரிக்கையா இல்லைன்னா எப்படி?” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.
அவனது வலது கை மெதுவாக இடுப்பிலிருந்த நவீனத் துப்பாக்கியின் மரப்பிடியை இறுக்கமாகப் பற்றியது.
முகில்வர்மன் அந்த மரங்களின் நிழல்கள் அடர்ந்த பகுதியை நோக்கிச் சில வினாடிகள் உற்றுப் பார்த்தான். காற்று வீசியதில் காய்ந்த சருகுகள் மட்டும் லேசாக அசைந்து ஓய்ந்தன. வேறு எந்த உருவமும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
“யாருன்னு தெளிவா தெரியல... ஆனா காடு நமக்குக் கொடுக்கிற இந்த அமைதி இயல்பானது இல்லை. நாம கவனமா இருக்கிறது நல்லது. மாறன், நீங்க சொன்ன அருவி இன்னும் எவ்வளவு தூரம்?”
“இதோ இந்த மேட்டைத் தாண்டுனா அருவி வந்துடும் சார்... வாங்க, வேகமா போயிடலாம்!” என்று மாறன் கையில் இருந்த தடியால் பாதையைச் சுத்தம் செய்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினான். சுனையாழியும் முகிலும் அவனைத் தொடர்ந்து விரைந்தனர்.
---
சுமார் அரைமணி நேரக் கடினமான, மூச்சிரைக்க வைக்கும் மலை ஏற்றத்திற்குப் பிறகு...
காட்டின் அடர்த்தி மெல்லக் குறைந்து, பிரம்மாண்டமான கரும்பாறைச் சுவர்கள் வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்பது போலத் தென்படத் தொடங்கின. காதைப் பிளக்கும் இரைச்சலுடன், பாறைகளில் மோதி பொங்கி வழியும் நீரோடையின் சத்தம் காட்டை நிறைத்தது.
“வந்துட்டோம் நாம... இதான் நான் சொன்ன அருவி!” என்று இளமாறன் மூச்சிரைக்கத் தன் கையை மேலே உயர்த்திக் காட்டிச் சொன்னான்.
அங்கே...
இயற்கையின் பேரழகு, பிரம்மாண்டமான இரு கருங்கல் பாறை இடுக்குகளுக்கு நடுவே, பாலாடை போலப் பொங்கி வழிந்தது அந்த அடர்ந்த காட்டு அருவி!
அருவியைச் சுற்றி எழுந்த மெல்லிய நீர்மேகம், சுற்றிலும் இருந்த பாறைகளிலும் பச்சைப் பாசிகளிலும் பனித்துளிகளாய்ப் படிந்திருந்தது.
சுனையாழி இப்படி ஒரு அழகை எதிர்பார்க்கவில்லை.
“ரொம்ப அழகா இருக்கு, மாறன் சார்!” என்றாள் பேரழகைப் பார்த்த ஆச்சரியத்தோடு.
முகில்வர்மனும் அந்த அருவியைப் பார்த்தபடி, “இவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை... அதுவும் இந்தக் காட்டுக்குள்ள!” என்றான்.
மாறன் சொல்லும்போது ஏதோ சின்னதா இருக்கும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால், இவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியை அவனும் எதிர்பார்க்கவில்லை.
மாறன் இருவரையும் புன்னகையோடு பார்த்தான்.
அப்போது சுனையாழிக்கு திடீரெனத் தன் தேடல் நினைவுக்கு வந்தது. உடனே ஓடிச் சென்று, அருவியின் பாறை இடுக்குகளில் ஈரப்பதத்தோடு வளர்ந்திருந்த தாவரங்களைப் பார்த்தாள். தன் தோள்பையிலிருந்து தாத்தாவின் பழைய ஏட்டுச் சுவடிக் குறிப்புகள் அடங்கிய நோட்டை எடுத்து, அதில் வரையப்பட்டிருந்த வரைபடத்தையும், இலைகளின் நரம்பு அமைப்பையும் ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்தாள்.
ஆனால்...
அடுத்த நொடியே அவளது முகத்தில் இருந்த ஆவலும் உற்சாகமும் முற்றிலும் வடிந்து, தாங்க முடியாத ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“சே! இது... இது அது இல்லவே இல்லை...” என்று சலிப்புடன் தன் கையிலிருந்த நோட்டை மூடிப் பெருமூச்சு விட்டாள்.
“என்ன ஆச்சு டாக்டர்? நீங்க எதிர்பார்த்த செடி இது இல்லையா?” என்று முகில் பரிவாகக் கேட்க, மாறனின் முகத்திலும் அதே கேள்விதான் தெரிந்தது.
“இல்லை, முகில் சார்... தண்டுல நரம்புகள் இருக்குத்தான். ஆனா வெயில் பட்டதும் ஒருவித மஞ்சள் நிறப் பளபளப்பு இல்லை. இலைகளோட வடிவமும், அதன் அமைப்பும் முற்றிலும் வேற மாதிரி இருக்கு. இது வெறும் சாதாரணக் காட்டுச் செடிதான்... எங்க தாத்தா குறிப்புகள்ல சொன்ன அந்த மூலிகைச் செடி மாதிரி தெரியல,” என்றாள் சுனையாழி சோகத்துடன், அருகில் இருந்த பாறையின் மீது அமர்ந்தபடி.
முகில்வர்மன் மெதுவாக அவளருகே வந்து நின்றான்.
“அவசரப்பட்டு மனசைத் தளரவிடாதீங்க, சுனையாழி... காடுகள்ல பல மூலிகைகள் ஒரே மாதிரி போலியா உருமாறி வளருறது இயற்கைதான். நிஜமான மூலிகைச் செடிலாம் அவ்வளவு சுலபமா யார் கண்ணுலயும் படாது. உங்ககூட நாங்களும் கண்டிப்பா தேடிப் பார்க்கிறோம்,” என்றான்.
அதே நேரம்...
அவர்களுக்குச் சற்றுத் தள்ளி, அடர்ந்த புதரின் மறைவிலிருந்து வசீகரன் தன் கையிலிருந்த பழமையான மஞ்சள் நிற வரைபடத்தையும், எதிரே பொங்கி வழியும் அந்த அருவியையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவனது கண்ணிமைகள் சுருங்கின.
அவனது முகத்தில் இருந்த பேராசையின் துடிப்பு, திடீரென்று கோபமாகவும் குழப்பமாகவும் மாறத் தொடங்கியது!
வரைபடத்தின் ஓரத்தில் பொறிக்கப்பட்டிருந்த இலை வடிவமோ, அல்லது மூன்று அடுக்குக் கல் அடுக்குகளோ, இந்த அருவிப் பாறையில் எங்குமே இல்லை!
வரைபடம் காட்டும் பாதை இந்த அருவியைக் குறிக்கவே இல்லை... மாறாக, இந்த அருவியையும் தாண்டி காட்டின் இன்னும் ஏதோ ஒரு இருண்ட, ஆபத்தான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைத் தொல்லியலாளனான வசீகரன் உணர்ந்தான்.
“நாசமாப் போச்சு! இவனுங்க பேசினதை வச்சு இந்த அருவிதான்னு நினைச்சு ஏமாந்துட்டேனே... அப்போ நான் என்னன்னே தெரியாம தேடுற அந்த ரகசியம் இருக்குற இடம் இது இல்லையா? இந்த மேப் இன்னும் காட்டின் எந்த இருட்டான பகுதிக்குள்ள வழிகாட்டுது?” என்று வரைபடத்தை விரல்களால் இறுக்கிப் பிடித்தபடி பற்களைக் கடித்தான் வசீகரன்.
அதே நேரம்...
சோர்ந்து அமர்ந்திருந்த சுனையாழியின் ஏமாற்றத்தைப் பார்த்த முகில்வர்மன், அருவிக்கு மேலே அடர்ந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்த மற்றொரு குறுகிய, கரடுமுரடான ஒற்றையடிப் பாதையைக் கூர்ந்து நோட்டமிட்டான்!
தொடரும்...