• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசி சுவடு! - 6

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 6

திசையறியா சந்திப்பு!

சுற்றிலும் பேரமைதி சூழ்ந்திருந்தது. அடர்ந்த மரக்கிளைகளை ஊடுருவி வந்த அரைகுறை வெயில், காட்டின் ஈரப்பதம் நிறைந்த தரையில் விசித்திரமான நிழல் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தது. காட்டுப்பன்றி ஓடிய திசையில் சருகுகள் அசையும் சத்தம் மெல்ல அடங்க, சுனையாழியின் படபடப்பான மூச்சுக்காற்று மட்டுமே அந்த இடத்தில் தெளிவாகக் கேட்டது.

முகில்வர்மனும் இளமாறனும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட விதத்தைக் கேட்ட சுனையாழி, லேசாகத் தலை அசைத்தபடி அவர்களிடம் இருந்த அச்சத்தை மெல்ல விலக்கிக்கொண்டாள்.

இருப்பினும், அவளது மனதிற்குள் ஒரு மெல்லிய வியப்பு பூத்தது.

சென்னையைச் சேர்ந்த பிசினஸ் மேனான முகில்வர்மனுக்கும், திருநெல்வேலியில் டிராவல்ஸ் நடத்தும் இளமாறனுக்கும் இடையே என்ன சம்பந்தம்?

இளமாறன் தன் சட்டையில் ஒட்டியிருந்த காட்டுச் சருகுகளையும் மண்ணையும் தட்டியபடி, "டாக்டர் மேடம்... காட்டுப்பன்றி எந்த நேரமும் திரும்ப வரலாம். இந்த மாதிரி மிருகங்கள் நடமாடுற இடத்துல நின்னு பேசிட்டு இருக்கிறது ஆபத்து. நாம மெல்ல வழி பார்த்து நகருவோம்," என்றான், சுற்றிலும் தன் கூர்மையான பார்வையைச் சுழலவிட்டபடி.

"ஆமா, அதுதான் சரி," என்றான் முகில்வர்மன். அவனது கம்பீரமான பார்வையில் ஒரு மெல்லிய அக்கறை மின்னியது.

சுனையாழியின் கால்களை நோக்கி, "உங்களுக்கு அடி எதுவும் பலமா படலையே? நடக்க முடியுமா?" என்றான்.

சுனையாழி தன் ஆடையில் படிந்திருந்த தூசியைத் தட்டிச் சரிசெய்துகொண்டு, "அடிலாம் ஒன்னும் இல்ல... சடனா காட்டு மிருகத்தைப் பார்த்த அதிர்ச்சியில நிலைதடுமாறி கீழ விழுந்ததுதான். என்னால நடக்க முடியும்," என்றவாறே தன் தோள்பையின் பட்டையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

"நீங்க எந்த மாதிரி மூலிகையைத் தேடி வந்தீங்க?" என்று நடந்தபடியே கேட்டான் முகில்வர்மன்.

"பெயர் தெரியல... ஆனா எங்க தாத்தாட்ட பழைய ஏட்டுச் சுவடி ஒன்னு இருந்தது. அதுல சில அடையாளங்கள் மட்டும் இருந்தது. சூரிய வெளிச்சத்துல மஞ்சள் நிறமாய் மின்னும் அரிய இலைகள், மஞ்சள் நிற நரம்புகள் கொண்ட தண்டு... இப்படி தாத்தாட்ட இருந்த குறிப்புகள்ல இருந்தது. இந்த மலைத்தொடர்ல அது கிடைக்கும்ங்கிற விபரம் இப்பதான் தெரிய வந்துச்சு. லீவ் கிடைச்சதும் தேடி வந்தேன்," என்றாள் சுனையாழி.

முகில்வர்மன் யோசனையுடன் புருவத்தை உயர்த்தினான்.

"அப்படியா?... இப்படி ஒரு மூலிகையைப் பற்றி இப்பதான் கேள்விப்படறேன்!" என்றவன், இளமாறனைப் பார்த்தான்.

இளமாறன் முகிலின் பார்வைக்கு விளக்கமாக, "நானும் இப்போதான் சார் கேள்விப்படறேன்... நானும் இந்தக் காட்டை முழுமையா சுற்றிப் பார்த்தவன் கிடையாது. நிறைய முறை வந்து இருந்தாலும், அதிகமா உட்புறம் போனது இல்ல... இருபது, முப்பது கிலோமீட்டரோட சரி. கடைசியா வந்ததே ஒரு நாலு, அஞ்சு வருஷம் இருக்கும். நீங்க இப்படின்னு கேட்கவும் டிரைவரை அனுப்பாம நானே வந்துட்டேன்," என்றவன்,

சுனையாழியிடம் திரும்பி, "எனக்கும் நோ ஐடியா, டாக்டர் மேடம்... இங்க ஒரு அருவி இருக்கு. சார் ட்ரெக்கிங்ன்னு சொல்லும் அந்த இடத்துக்குப் போலாமேன்னு முடிவு எங்களோடது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா எங்களோட வாங்க... அங்க உங்களுக்கு ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க," என்று சொல்லிக்கொண்டே வந்தவன், முகில்வர்மன் என்ன நினைப்பானோ என்று அவன் முகத்தைப் பார்த்தான்.

"சார், உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க. இல்லைனாலும் நாம இவங்களை ரோட்டுவரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு நாம ட்ரெக் பண்ணுவோம்," எனவும் கூறினான்.

முகில்வர்மன் சுனையாழியைப் பார்த்து, "உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்களோட ஜாய்ன் பண்ணிக்கோங்க. வேணாம்னா இளமாறன் சொன்னது போல உங்களை விட்டுட்டு எங்க பயணம் தொடரும். இல்ல, நீங்க தனியா காட்டுக்குள்ள சுத்தப்போறீங்கன்னா அது ஆபத்து," என்றான்.

"நிச்சயமா... எனக்கு இந்தக் காட்டுப் பாதை தெரியாதுங்கிறதுதான் உண்மை. உங்க கூட வர்றது எனக்குப் ஜாய்ன் பண்ணறதுல எந்த சங்கடமும் இல்ல. ரொம்ப தேங்க்ஸ்," என்றாள் சுனையாழி நன்றியுடன்.

"சரி, அப்போ பாதையை கவனமா பார்த்து என் கூடவே வாங்க," என்று இளமாறன் முன்னால் நின்று வழிகாட்டத் தொடங்கினான்.

அவனுக்குப் பின்னால் முகிலும், அவனைத் தொடர்ந்து சுனையாழியும் பாதுகாப்பாக நடக்கத் தொடங்கினர்.


---

அதே நேரம்...

அவர்களுக்குச் சற்றுத் தள்ளி, பிரம்மாண்டமான மரங்களின் அடர்ந்த நிழல்களுக்கு நடுவே, ஒரு வேட்டைக்காரனின் நரித்தனத்தோடு நகர்ந்துகொண்டிருந்தான் வசீகரன்ராஜ்.

அவனது லேட்டஸ்ட் ஆப்பிள் போன் லேசாக அதிர்ந்தது. திரையில் 'தீரன்' என்ற பெயர் மின்னியது.

அழைப்பை ஏற்று காதில் வைத்த வசீகரன், "சொல்லு தீரன்..." என்றான் ரகசியக் குரலில்.

"பைய்யா... நீங்க அனுப்புன போட்டோவை வச்சு விபரம் விசாரிச்சுட்டேன்.

அந்தப் பொண்ணு பேரு சுனையாழி. திருச்செந்தூர்ல டாக்டரா இருக்கா.

கூட இருக்குறவன் இளமாறன். லோக்கல்... அதாவது திருநெல்வேலியிலேயே 'சின்னதா' டிராவல்ஸ் வச்சு நடத்துறவன். இந்த ஊர் என்பதால அந்தக் காட்டுப் பகுதி கொஞ்சம் பரிச்சயம் போல," என்று சொல்லிக்கொண்டே வந்தவன்,

சிறு தயக்கத்திற்குப் பிறகு, "இன்னொருத்தன் பேரு முகில்வர்மன்... அவன் சென்னையில பெரிய கார்ப்பரேட் பிசினஸ் நெட்வொர்க் வச்சிருக்கான். கோடீஸ்வரன். ஆனா திடீர்னு எதுக்கு இந்த மலைக்காட்டுக்கு வந்தான்னு தெரியல," என்றான் தீரன்.

வசீகரன் தன் சட்டைப் பையிலிருந்த அந்தப் பழமையான வரைபடத்தை மெல்ல வெளியே எடுத்துப் பார்த்தான். அதில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஏதோ ஒரு பெரிய ரகசியமோ அல்லது புதையலோ அந்த இடத்தில் இருப்பதாகப் பழங்காலக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், இந்தப் பிரம்மாண்டமான காட்டின் எந்தப் பகுதியில் அந்த இடம் அமைந்திருக்கிறது அல்லது அங்கே நிஜமாகவே என்ன இருக்கிறது என்பது வசீகரனுக்கே இன்னும் பிடிபடாமல் இருந்தது!

வசீகரன் உதட்டோரம் ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தான்.

"கார்ப்பரேட் முதலாளியா?" ... நல்லது. என் கையில இருக்குற இந்த மேப்ல ஏதோ ஒரு பெரிய ரகசியம் ஒளிஞ்சிருக்குன்னு தெரியும். ஆனா, அது எந்த இடத்தைக் குறிக்குதுன்னு தெரியாம இத்தனை நாளா காட்டுக்குள்ள முட்டி மோதிட்டு இருந்தேன்.

ஆனா, இந்த லோக்கல் டிரைவருக்கு இந்தக் காட்டுப் பாதை நல்லாத் தெரிஞ்சிருக்கும் போல. இங்க அருவி இருக்குன்றது போல சொல்லறான். நான் இங்க வரும்போதெல்லாம் அருவின்னு ஒன்னு பாக்கவே இல்ல...

அவனுங்க போற பாதை ஒருவேளை எனக்கு என் மேப்ல இருக்குற அந்த இடத்துக்கான வழியைக் காட்டுமோ என்னவோ... இவங்களைப் பின்தொடர்ந்தா ஏதாவது ஒரு வழி கிடைக்கும்! அதுக்கப்புறம் அங்க என்னதான் இருக்குன்னு நாம பார்த்துக்கலாம்," என்று எண்ணமிட்டபடியே...

"அவனுங்க முன்னாடி போகட்டும். அந்த இடம் எதுன்னு எனக்குத் துல்லியமா தெரியுற வரைக்கும், அவனுங்களுக்குச் சந்தேகமே வராதபடி நிழல் போலப் பின்னாடியே போவோம்!"

வசீகரன் தன் கையில் இருந்த வரைபடத்தைப் பத்திரமாகப் பைக்குள் வைத்துவிட்டு, தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியைச் சரிசெய்தான்.

இளமாறன் வழிகாட்ட... முகிலும், சுனையாழியும் அவன் காலடியைப் பின்பற்றி செல்லச் செல்ல, அடர்ந்த மரங்களின் மறைவில் அவர்களைப் பின்தொடரத் தொடங்கினான் வசீகரன்ராஜ்.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya