• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு!

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 31


அறியாத திருப்புமுனை!


இரவின் கனத்த யோசனைகளும், விடை தெரியாத வினாக்களும் அந்த விடியலின் மெல்லிய வெயிலில் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.


நெல்லை நகரின் விடியல் எப்போதும் போலத் தன் அமைதியான அழகோடு புலர்ந்தது. மரங்களின் இலைகளில் படிந்திருந்த பனித்துளிகள், விடியற்காலைச் சூரியனின் மெல்லிய ஒளிக்கதிர்கள் பட்டதும் வைரங்களைப் போல ஜொலித்தன.


சுனையாழியின் அறையில், இரவு முழுவதும் சரியாகத் தூங்காததால் அவளது விழிகளில் லேசான அயர்ச்சியும் சோர்வும் தெரிந்தாலும், புதிய பயணத்தின் ஆர்வம் அவளது முகத்தில் பளிச்சிட்டது.


மனதிற்குள் எழுந்த வசீகரன் பற்றிய வெறுப்பும், முகில்வர்மன் பற்றிய விடை தெரியாத குழப்பங்களும் அவளைப் பின்தொடர்ந்தாலும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னைப் பயணத்திற்குத் தயார்படுத்திக் கொண்டாள்.


யாழ்வேந்தனும் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் நேர்த்தியாகப் பைகளில் அடுக்கி வைத்துவிட்டு, சுனையாழியை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.


"யாழி... மைண்ட் ரிலாக்ஸா விடு. காட்டுக்குள்ள போகப்போறோம். மனசுல எந்தக் குழப்பத்தையும் வச்சுக்காத..." என்று தங்கைக்கு மெல்லிய குரலில் அறிவுரை கூறியபடியே நடந்தான்.


அதே ஹோட்டலில் தங்கியிருந்த முகில்வர்மனும் தன் அறையிலிருந்து தயாராகி வெளியே வந்தான்.


இரவில் அவனுக்குள் எழுந்திருந்த பலநூறு எண்ண அலைகளும் அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தன. ஆனால், எதிரே வந்த சுனையாழியைப் பார்த்த அந்த நொடியிலேயே அவனுள் ஒரு அமைதியான தெளிவு பிறந்தது.


அவளுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பதே தன் முதல் கடமை என்ற எண்ணம் அவனுக்குள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய அதே நேரத்தில்..


"ஹலோ முகில் சார்... மார்னிங்!" என்று யாழ்வேந்தனின் குரல் அவனை எட்டவும், தன் நினைவிலிருந்து மீண்டான்.


"மார்னிங் வேந்தன்... ட்ரெக்கிங்குக்கு ரெடியாகிட்டீங்க போல... மார்னிங் டாக்டர்..." என்று யாழ்வேந்தனில் தொடங்கி சுனையாழியிடம் முடித்தான்.


அதே நேரம், அதிகாலையிலேயே தன் வீட்டிலிருந்து அந்தப் பழமையான ஓலைச்சுவடிப் பெட்டியோடு கிளம்பி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்த இளமாறனின் பார்வையில், ட்ரெக்கிங் பற்றிப் பேசிக்கொண்டே வந்த அந்த மூவரும் பட்டனர்.


"அட... நீங்க மூணு பேரும் ஒண்ணா வர்றீங்களா? நல்லதாப் போச்சு. இல்லன்னா தனித்தனியா கால் பண்ணி இருக்கணும். வாங்க... எல்லாரும் கீழே போய் ஒரு காபி குடிச்சுட்டுப் புறப்படலாம்..." என்று அவர்களைப் பார்த்துச் சொன்னான்.


"மார்னிங் மாறன்... இவ்வளவு காலையிலேயே உங்களை எதிர்பார்க்கல..." என்று முகில்வர்மன் சொல்லியபடியே அவனோடு நடக்க, யாழியும் வேந்தனும் அவர்களுடன் இணைந்து நடந்தனர்.


நால்வரும் டைனிங் ஏரியாவில் அமர்ந்து காலைக் காபியைப் பருகத் தொடங்கினர். காபியின் சூடான புகையோடு, அவர்களின் பயணத்தைப் பற்றிய உரையாடலும் மெல்லத் தொடங்கியது.


அப்போது இளமாறன், தான் கொண்டு வந்திருந்த பழைய மரப்பெட்டியை மேஜையின் மீது வைத்தான்.


"டாக்டர் மேடம்... உங்களோட ஓலைச்சுவடியை பத்திரமா உங்ககிட்டயே கொடுத்துட்டேன். இந்தாங்க, வச்சுக்கோங்க! மறுபடியும் எங்கேயும் மறந்து விட்டுடாதீங்க... பத்திரமா வச்சுக்கோங்க!" என்று லேசான சிரிப்போடு, கிண்டலும் மரியாதையும் கலந்த குரலில் கூறியபடி அந்தப் பெட்டியை அவளிடம் நீட்டினான்.


சுனையாழி தன் இரு கைகளையும் நீட்டி, இளமாறனிடமிருந்து அந்தச் சுவடிப் பெட்டியைப் பெற்றுக்கொண்டாள்.


அடுத்த நொடி—


எப்போதும் தொட்டுப் பழகிய அதே மரப்பெட்டிதான்.


சிறுவயதிலிருந்தே தாத்தாவின் அறையில் பார்த்து, பலமுறை தன் கைகளால் எடுத்து வைத்த அதே பாரம்பரியப் பெட்டிதான்.


ஆனால், அவளது விரல்கள் அந்தப் பெட்டியைத் தொட்ட அந்த ஒரு கணத்தில், உடலெங்கும் ஒரு புதிய உணர்வு... விவரிக்க முடியாத ஒரு சில்லென்ற சிலிர்ப்பு பாய்ந்தது!


உடலின் நரம்புகளெல்லாம் ஒரு கணம் ஒடுங்கி, உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஒரு மின்னல் தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது.


'என்ன இது... நம்ம தாத்தா பெட்டிதானே இது? கொஞ்ச நாள் நம்மகிட்ட இல்லாமப் பிரிஞ்சு இருந்ததுக்கே இப்படி ஒரு புது அனுபவமும் உணர்வும் வருமா? இதுவரையிலும் இல்லாத அளவுக்கு உடம்பெல்லாம் ஏன் இப்படி சில்லுன்னு பரவுது?'


என்று ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எண்ணியவள், அந்த மரப்பெட்டியின் பூட்டை மெதுவாகத் திறந்தாள்.


அதற்குள் தாத்தாவின் பரம்பரை ஓலைச்சுவடி கயிறால் கட்டப்பட்டுப் பத்திரமாக இருந்தது.


ஆனால், அதற்கு நடுவே முற்றிலும் வித்தியாசமான, சிறிய அளவிலான, எண்ணெய்ப் பசையோடு கூடிய மிகப் பழமையான மற்றொரு ஓலைச்சுவடி புதிதாக அந்தப் பெட்டியில் இடம்பிடித்திருந்தது!


அதைப் பார்த்ததும் சுனையாழி திகைத்துப்போய், உடனே நிமிர்ந்து இளமாறனைப் பார்த்தாள்.


"மாறன்... இது என்ன? எங்க தாத்தாவோட சுவடியைத் தவிர இன்னொன்னு புதுசா ஒரு ஓலைச்சுவடி இருக்குதே? இது எப்படி இங்க வந்தது?" என்று கேட்டாள்.


இளமாறன் தன் தலையைத் தட்டிக்கொண்டு யோசித்தவன்,


"ப்ச்! டாக்டர்... இதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் பாருங்க..." என்றான் மிகவும் இயல்பான சிரிப்புடன்.


"லாஸ்ட் டைம் நாம சந்திச்ச காட்டுக்கு... அதுக்கு முன்னாடியே சில பசங்களோட ட்ரெக்கிங்குக்கு அதே காட்டுப் பகுதிக்குப் போனப்போ, எனக்கு இந்த ஓலைச்சுவடி கிடைச்சது.


அது என்ன, ஏது என்று எனக்குத் தெரியல. சும்மா எடுத்துட்டு வந்து என் வீட்டுல போட்டு வச்சிருந்தேன்.


அப்புறம் உங்க தாத்தாவோட ஓலைச்சுவடியைப் பார்த்ததும், 'சரி... இதுவும் ஒரு ஓலைச்சுவடிதானே? உங்களுக்கு இது ஏதாச்சும் யூஸாகுமோ என்னவோ...'னு தோணுச்சு.


அதான் இதையும் உங்களோட பாக்ஸ்லயே வச்சுப் பூட்டி வச்சுட்டேன்.


உங்களுக்கு தேவை இருந்தா யூஸ் பண்ணிக்கோங்க. இல்லனாலும் நீங்களே வச்சுக்கோங்க... அதை வச்சு நான் என்ன பண்ணப்போறேன்?" என்று சொல்லி முடித்தான்.


அங்கே அமர்ந்திருந்த முகில்வர்மன் அதைக் கேட்டு மெலிதாகத் தலையசைத்தான்.


"ஆமா மாறன்... நீங்க என்கிட்டயும் இதை ஒரு தடவை போன்ல சொல்லியிருந்தீங்க. நான்தான் அதை அப்புறம் பார்க்கணும்னு நினைச்சு, அப்படியே மறந்துட்டேன். இப்பவும் எல்லாரும் கிளம்புற அவசரத்துல அதைப் பத்தி யோசிக்கவே இல்ல..." என்றான் முகில்வர்மன்.


அப்படிச் சொன்ன முகில்வர்மன், ஆர்வம் தாளாமல் அந்தப் பெட்டிக்குள் இருந்த புதிய ஓலைச்சுவடியை மெல்லத் தன் கையால் தொட்டு வருடி, அதை வெளியே எடுத்தான்.


அந்தக் கணத்தில்—


முகில்வர்மனுக்குள் என்னவென்று சொல்ல முடியாத அளவுக்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் ஆழ்ந்த உணர்வு உடலெங்கும் பரவியது!


அது முற்றிலும் இயல்பான ஒன்றைப் போலவே அவனுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.


ஏனெனில்...


அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவனால் எழுதப்பட்டு, அவனது ஆன்மாவோடு பிணைக்கப்பட்ட அவனுடைய சொந்த ஓலைச்சுவடி!


அந்த ஒரு ஓலைச்சுவடி கிடைக்காத காரணத்தால்தான், இத்தனை காலமாகச் சுனையாழியின் தாத்தாவால் அந்த ரகசிய மூலிகையின் மருத்துவ குணத்தையும் அதன் முழுமையான தன்மையையும் கண்டறிய முடியாமல் போயிருந்தது.


தாத்தா தேடிய தேடலுக்கான விடை, இந்த ஒரு சுவடியில்தான் ஒளிந்திருந்தது.


ஆனால், அந்தப் மாபெரும் உண்மை அங்கிருந்த யாருக்கும் அப்போது புரியவில்லை.


முகில்வர்மனுக்குக்கூட அந்த உணர்வின் ஆழத்தை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ காரணமின்றி தன்னை ஈர்க்கும் ஒரு பொருளாக மட்டுமே அதை அவன் கருதினான்.


அவர்கள் பேசி முடித்து, அந்தப் பெட்டியை மூடி மீண்டும் பைக்குள் வைக்கப் போன அந்தச் சரியான நேரத்தில், குளித்து முடித்துத் தயாராகி வசீகரன் அங்கே வந்து சேர்ந்தான்.


அவன் வந்து அவர்களுடன் இணைந்தபோதுதான், அவன் ஒருவன் இருப்பதே மற்ற நால்வருக்கும் நினைவுக்கு வந்தது.


அவர்களின் எண்ணவோட்டத்தைப் பற்றி எதுவும் அறியாதவனாக, மேஜை மீது இருந்த அந்தப் பழமையான மரப்பெட்டியைப் பார்த்துவிட்டு,


"என்ன பாக்ஸ் இது? ரொம்ப அழகாவும், வித்தியாசமான வேலைப்பாடுகளோடும் இருக்கே?" என்று இயல்பாக வினவினான் வசீகரன்.


அடுத்த நொடியே அவனது தொல்லியல் சார்ந்த ஆர்வம் விழித்துக்கொண்டது.


அந்தப் பெட்டகத்தை அவன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.


சுனையாழிக்கு வசீகரனின் கேள்விக்குப் பதிலளிக்க விருப்பமில்லை. அதனால், அமைதியாகத் தன் காபியைப் பருகியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


ஆனால், யாழ்வேந்தனோ மிக இயல்பான புன்னகையுடன்,


"இது எங்க பரம்பரைச் சொத்து. எங்க தாத்தா பெரிய நாட்டு வைத்தியர். அவர் அந்தக் காலத்துல பல அரிய மூலிகைகளைப் பத்தியும், வைத்திய முறைகளைப் பத்தியும் எழுதி வச்ச ஓலைச்சுவடிப் பெட்டி இது..." என்றான்.


"ஓ... அப்படியா! ஆனா சுனையாழியும் நீங்களும் ஆங்கில மருத்துவம்... Allopathy தானே படிச்சிருக்கீங்க? அப்புறம் எப்படி நாட்டு வைத்தியத்துல ஆர்வம்?" என்று லேசான ஆச்சரியத்தோடும் கூர்மையான பார்வையோடும் கேட்டான் வசீகரன்.


"படிச்சது ஆங்கில மருத்துவம்தான். ஆனா தாத்தா வழி நாட்டு வைத்தியத்துல என் தங்கைக்கு ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் உண்டு.


இப்போ நாம போற காட்டுல, தாத்தா சுவடியில எழுதி இருக்க மாதிரி ஏதாச்சும் மூலிகைகள் கிடைச்சதுனா, அதை வச்சு ட்ரை பண்ணலாமேன்னுதான் இந்தச் சுவடியையும் கூடவே எடுத்துட்டுப் போறோம்..." என்று யாழ்வேந்தன் தெளிவாக விளக்கினான்.


"சூப்பர்... ரொம்ப நல்ல விஷயம்தான்!" என்று வசீகரன் மெலிதாகச் சிரித்தான்.


ஆனால், அவனது பார்வைக்குப் பின்னால் ஏதோ ஒரு கணிப்பு ஓடிக்கொண்டிருந்தது.


காலைச் சிற்றுண்டியும் காபியும் முடிந்தது.


அனைவரும் தங்களது பயணப் பைகளை எடுத்துக்கொண்டு ஹோட்டலிலிருந்து கிளம்பி, வாகனத்தில் ஏறிக் காட்டுப் பகுதியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர்.


வாகனம் நகரத் தொடங்கியதும், நகர்ப்புறக் கட்டடங்களும் மனிதர்களின் ஆரவாரமும் மெல்ல மறைந்து, அடர்ந்த மரங்களும் குளிர்ந்த காற்றும் அவர்களைச் சூழ்ந்துகொண்டன.


பாதை செல்லச் செல்ல, அமைதியும் அடர்ந்துகொண்டே வந்தது.


காட்டின் நுழைவாயிலை அடையும் முன்பாக, வாகனம் ஒரு கணம் மெதுவாக நகர்ந்தபோது, வசீகரன் யாருக்கும் தெரியாமல் மதனுக்கு ரகசியமாக ஒரு தகவலைத் தட்டச்சு செய்து அனுப்பினான்.


'மதன்... இந்தச் சுனையாழியைப் பத்தி எனக்கு உடனடியா முழு டீட்டெயில்ஸும் வேணும். அவளைப் பத்தின அத்தனை விபரங்களையும், குடும்பப் பின்னணியையும் ரகசியமா விசாரிச்சு எனக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பு!'


காட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக வசீகரன் எறிந்த அந்த ரகசியக் காய், அடுத்தடுத்து வரப்போகும் பெரும் புயலுக்கு அஸ்திவாரம் போட்டது.


சுனையாழியின் பின்னணியும், முகில்வர்மனின் அந்த ஓலைச்சுவடியும்... அதன் ரகசியமும்... அந்த அடர்ந்த காட்டின் மடிக்குள் அவர்களை மெல்ல இழுத்துக்கொண்டிருந்தன.


அவர்களுக்குத் தெரியாமலேயே...


இதுவரை அவர்கள் அறியாத அவர்களுடைய கடைசிச் சுவட்டைத் தேடிப் பார்க்கப் போகிறார்கள்.


தொடரும்.....
 
Back
Top
Developed and maintained by – Akeshya