• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 43

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 43

மறைந்த சுவடுகளுக்குள் மறைந்திருக்கும் உண்மை!

“மங்கை...”

தீரனின் உதடுகள் அந்தப் பெயரை மெல்ல உச்சரித்தன.

நீர்வீழ்ச்சிக்கு அருகே நின்றிருந்த சுனையாழியை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய பார்வை எங்கோ நிலைத்திருக்க, அவளது உதடுகளிலிருந்து மீண்டும் அந்தப் பெயர் வெளிப்பட்டது.

“காந்தள்மங்கை...”

அந்தப் பெயர் அவனுடைய செவிகளை எட்டவில்லை. ஆனால், அவளுடைய உதட்டசைவைக் கவனித்த அடுத்த கணமே, அவனுக்குள் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியது.

இதுவரை அவன் இப்படியொரு உணர்வை அனுபவித்ததே இல்லை.

இந்தக் காடு...

இந்த அருவி...

இங்கே நிற்கும் இந்தப் பெண்...

அத்தனையும் அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமானவையாகத் தோன்றின.

இத்தனைக்கும், வசீகரன் இந்தக் காட்டிற்கு வரும்போதெல்லாம் தீரனும் அவனுடன் வந்திருக்கிறான்.

முதன்முதலில் சுனையாழியைப் பற்றிக் கேட்டறிந்தவனும் அவன்தான். அப்போதெல்லாம் அவனுக்குள் இப்படியொரு உணர்வு தோன்றியதே இல்லை.

இப்போது மட்டும் எப்படி?

இந்தக் கேள்வி அவனுக்குள் எழுந்த அடுத்த கணமே, நீர்வீழ்ச்சியின் ஓசையும், அதன் அருகே நின்றிருந்த காந்தள்மங்கையாகிய சுனையாழியும், அவனுக்குள் புதைந்து கிடந்த அந்தக் கோரமான உண்மையை உயிர்த்தெழச் செய்துகொண்டிருந்தன.

காந்தள்மங்கையின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த வேள்வியாளன்...

ஆம்! வேள்வியாளன்!

அந்தக் காட்சியை அன்றைய கானத்தீரனாகிய தீரனும் அறிந்திருந்தான்.

அந்தக் காட்சிகள் அவனுடைய மனத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக விரியத் தொடங்கின.

இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நினைவுக்கு வந்த காட்சிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு மெல்லத் தெளிவானது.

தான் யார் என்பதும், இந்தக் காட்டின் பின்னால் மறைந்திருக்கும் தொடர்புகளும் அவனுக்குப் புரிந்தன.

வசீகரன் இத்தனை காலமாக இந்தக் காட்டைத் தேடிக்கொண்டிருப்பதற்கான காரணத்தையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

அதேபோல், முகில்வர்மனுக்கும் இந்த இடத்திற்கும் இடையே இருந்த தொடர்பும் அவனுடைய நினைவுகளில் தெளிவாகத் தோன்றியது.

ஆனால், அவனுடைய முகத்தில் எந்தவொரு அதிர்ச்சியும் வெளிப்படவில்லை.

தொலைவில் நின்றபடியே சுனையாழியைப் பார்த்தான்.

அவனுடைய புருவங்கள் மெல்லச் சுருங்கின. கண்கள் இரத்தச் சிவப்பு நிறத்தை அடைந்தன. அடுத்தடுத்து, அவை மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பின.

அடுத்த கணமே, தன்னுடைய பார்வையை அவளிடமிருந்து விலக்கிக்கொண்டான்.

நிச்சயமாக, அவன் தன்னுடைய நினைவுகள் திரும்பியதை வெளிப்படுத்தப் போவதில்லை.

வசீகரன் சொன்னபடி, யாருடைய பார்வையிலும் படாமல் அவர்களைக் கண்காணிப்பதற்காகவே அவன் அங்கே வந்திருந்தான்.

அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய முடிவெடுத்தவன், இப்போது முன்னைவிடவும் அதிக கவனத்துடன் வசீகரனையும் சேர்த்துக் கண்காணிக்கத் தொடங்கினான்.

தன்னுடைய நினைவுகள் திரும்பியதை யாரும் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அதிலும், தன்னுடைய அண்ணனான வசீகரனுக்கு இது தெரியவே கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான்.

அதனால், தான் மறைந்திருந்த இடத்திலேயே இன்னும் எச்சரிக்கையாக நின்றுகொண்டான்.

அவனுடைய மனத்திற்குள் கடந்த காலத்தின் நினைவுகள் முழுமையாக விழித்தெழுந்திருந்தன.

ஆனால், வெளியே அவன் காட்டிக்கொண்டதெல்லாம் எதுவுமே அறியாத ஒருவனின் அமைதியை மட்டும்தான்.


அங்கே, நீர்வீழ்ச்சிக்கு அருகே நின்றிருந்த சுனையாழியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“நிச்சயம் இந்த முறை உங்களைத் தனியாகப் போராட விட்டுவிட மாட்டேன்... இளவரசே!”

என்று தனக்குள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டாள்.

அதே நேரத்தில், தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யாழ்வேந்தன் தன்னைச் சுற்றிலும் பார்வையைத் திருப்பினான்.

உச்சி வெயில் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், அந்த நீர்வீழ்ச்சியின் ஈரப்பதம் அந்த இடத்தையே குளுமையாக வைத்திருந்தது.

அதை உணர்ந்தபடியே சுனையாழியைத் தேடத் தொடங்கினான்.

இங்கே வந்ததிலிருந்து தன்னுடைய தங்கை சுனையாழி வழக்கம்போல இல்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அதனால், இன்னும் கவனமாக அவளைத் தேடியவன், அருவிக்கரையோரம் அவள் நிற்பதைக் கண்டான்.

அதே நேரத்தில், முகில்வர்மனுக்கும் தன்னுடைய நினைவுகளுக்குள் ஏதோ ஒன்று மறைந்திருப்பதை உணர முடிந்தது. ஆனால், அது என்னவென்று அவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளமாறனும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கவனித்தவன், அவனைத் தொந்தரவு செய்யாமல் பார்த்தபடியே எழுந்து அமர்ந்தான்.

சிறிது நேரம் இருவருக்கும் இடையே கனத்த அமைதி நிலவியது.

பிறகு, முகில்வர்மன் மெல்லத் தலையை உயர்த்தி இளமாறனை ஆழமாகப் பார்த்தான்.

அவனுடைய பார்வையின் வீச்சை உணர்ந்த இளமாறன் கண்களைத் திறந்து முகில்வர்மனைப் பார்த்தான்.

“என்ன, முகில் சார்?”

“இந்த இடத்துக்கு வந்ததிலிருந்து எனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கு. எதையோ நினைவுபடுத்திக்க முயற்சி பண்ற மாதிரி இருக்கு. ஆனா, என்னன்னுதான் சரிவரப் புரியலை. நீ ‘வேள்வியாளன்’னு சொல்லும்போதெல்லாம் என்னையே கூப்பிடுற மாதிரி இருக்கு.”

என்றான் முகில்வர்மன்.

இளமாறன் அவனைப் பார்த்தான்.

அந்த நேரத்தில் முகில்வர்மனின் பார்வை நீர்வீழ்ச்சியின் மீது படிந்தது.

நீரின் வேகமும், பாறைகளில் மோதி எழுந்த ஓசையும் அவனுடைய கவனத்தை ஈர்த்தன.

ஏதோவொரு பழைய காட்சி மனதின் ஓரத்தில் தோன்றுவதுபோல் இருந்தது.

ஆனால், அது முழுமையாக நினைவுக்கு வரவில்லை.

அவன் கண்களை மூடி அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முயன்றான்.

சில நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்தவன், தன்னுடைய எண்ணங்களிலிருந்து வெளியேற முடியாமல் மீண்டும் அமைதியில் ஆழ்ந்தான்.

இளமாறனும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை.

இருவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கியிருந்தனர்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, யாழ்வேந்தன் அங்கே வந்தான்.

அவனுடைய பார்வை முதலில் முகில்வர்மன் மீதும், அடுத்து இளமாறன் மீதும் விழுந்தது.

முகில்வர்மன் அவனைப் பார்த்தான்.

“என்ன, யாழ்வேந்தன்?”

“இதுக்கு மேல இந்த இடத்தைச் சுத்திப் பார்க்கப் போறோமா? இல்ல, ரூமுக்குத் திரும்பலாமா? இன்னும் நாம தேடிட்டு இருக்கிற மூலிகைச் செடி கிடைக்கல.”

என்றான் யாழ்வேந்தன்.

பிறகு, சுனையாழியின் பையிலிருந்து ஓலைச்சுவடியை எடுத்துக்கொண்டு அவளை நோக்கிச் சென்றான்.

முகில்வர்மன் மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

அவனுடைய மனம் இன்னும் அந்தக் காட்டின் மீதும், நீர்வீழ்ச்சியின் மீதும் நிலைத்திருந்தது.

தன்னுடைய வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராத ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டிருந்தது.

அது என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் வலுப்பெற்றுக்கொண்டிருந்தது.


“சுனை, இந்தா... தாத்தாவோட ஓலைச்சுவடி.”

என்று கூறியபடி யாழ்வேந்தன் ஓலைச்சுவடியை அவளிடம் நீட்டினான்.

அவனுடைய குரலைக் கேட்ட சுனையாழி திரும்பிப் பார்த்தாள்.

“ஒண்ணுமில்லை, அண்ணா. கொஞ்ச நேரம் இங்கே இருக்கணும்னு தோணுச்சு.”

யாழ்வேந்தன் அவளுடைய முகத்தைக் கவனித்தான்.

“உடம்புக்கு எதுவும் முடியலையா? ஏன் இவ்வளவு சோர்வா இருக்க?”

என்று கேட்டான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, அண்ணா.”

“சரி. எப்படி இருந்தாலும் அதிக நேரம் இங்கே நிக்காதே. களைப்பா இருந்தா கொஞ்ச நேரம் ஓய்வெடு.”

“சரிங்க, அண்ணா.”

என்று பதிலளித்த சுனையாழி, அவனுடன் அங்கிருந்து செல்லத் தயாரானாள்.

ஆனால், அவளுடைய மனம் மட்டும் அந்த நீர்வீழ்ச்சியை விட்டு அகலவில்லை.

சற்று முன்பு தனக்குள் தோன்றிய அந்த உணர்வின் காரணம் என்னவென்று அவளுக்கு இப்போது மெல்லப் புரியத் தொடங்கியது.

வேள்வியாளன்...

காந்தள்மங்கை...

அந்தப் பெயர்களைத் தன்னுடைய உதடுகள் உச்சரித்தபோது, அவளுடைய மனத்திற்குள் நெருக்கம் தோன்றியிருந்தது.

அந்தப் பெயர்களுக்கும் தனக்கும் என்ன விதமான தொடர்பு இருக்கிறது என்பது அவளுக்கு இப்போது தெள்ள தெளிவாக புரிந்துக்கொள்ள முடிந்தது

ஆனால், அந்த உணர்வு அவளுக்குள் ஏற்படுத்திய வலி இன்னும் ஆழமாகப் பதிந்திருந்தது.

உச்சி வெயில் மெல்ல மெல்ல மாலை நேரத்தை நெருங்கத் தொடங்கியது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya