• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 41

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 41

நினைவுகளின் நடுவில்...

அருவியின் பேரிரைச்சல் மட்டுமே அந்த அமைதியை நிறைத்துக்கொண்டிருந்தது.

இளமாறன், முகில்வர்மன், சுனையாழி, வசீகரன்... என்று யாரிடமும் சிறு அசைவும் இல்லை. உயிருள்ள சிலைகளைப் போல நின்றிருந்தார்கள்.

காரணம், இளமாறனின்,

“நம்முடைய கடைசிச் சுவடுகள் பதிந்த இடம்.”

என்ற அவனது வார்த்தைகளிலேயே இளமாறன் உட்பட அனைவரும் உறைந்துபோனார்கள்.

ஆனால்... சுற்றுப்புறத்தில் நிலவிய அமைதி அவர்களுடைய மனதுக்கு இல்லை.

இளமாறனின் நினைவுகளில் இன்னும் அந்தப் பழைய காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

அதே நேரம்...

“அம்மா...”

என்ற யாழ்வேந்தனின் தூக்கக் கலக்கக் குரல், இளமாறனின் நினைவையும்... அங்கே சூழ்ந்திருந்த அமைதியையும் கலைத்தது.

மரத்தின் அடியில் படுத்திருந்தவன் ஒருபுறமாகத் திரும்பிப் படுக்கும்போது, கீழே கிடந்த மரத்தின் சிறிது தடிமனான குச்சி அவன் முதுகைப் பதம் பார்த்திருந்தது.

குச்சி குத்திய இடத்தை ஒரு கையால் தேய்த்துவிட்டபடியே, மறுகையால் கண்களைத் தேய்த்துக்கொண்டே எழுந்து அமர்ந்தான்.

“அய்யய்யோ...”

என்று மறுபடியும் ஒரு அலறல்.

இப்போது உட்காரும் இடமும் புண்ணாகி இருக்க...

“என்னடா இது யாழ்வேந்தனுக்கு வந்த சோதனை...”

என்று மெதுவாக எழுந்து நின்றான்.

முடிந்த மட்டும் முதுகைத் திரும்பிப் பார்த்தான்.

பின்னர், உட்கார்ந்த இடத்தைத் தடவிப் பார்த்தான்.

“அவுச்...”

என்று முகத்தைச் சுளித்துக்கொண்டான்.

“அவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள இருந்துட்டு, டயர்ட்ல தூங்கினது ஒரு குத்தமாடா?”

என்று தன் முதுகைத் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்தவன், அவனையே பார்த்தபடி அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்த மற்ற நால்வரையும் பார்த்தான்.

“என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? என்னைய பார்த்தா ஏதோ காமெடி பண்ணது போலவா இருக்கு? ஒரு மனுஷன் தூங்கறானே... அவன் திரும்பிப் படுக்கும்போது கம்பர்ட்டா இருக்குதான்னு பார்க்கிறத விட்டுட்டு, அடிபட்டதும் அதை பார்த்து சிரிச்சுட்டு நிக்கறீங்க!”

என்றான் கோபம் போல.

யாரும் பதில் சொல்லாததைக் கவனித்தவன்...

அப்போதுதான் கவனித்தான்.

நால்வரும் அவ்வளவு நேரமாக நின்றுகொண்டிருப்பதை!

“நான் மட்டும் நல்லா தூங்கி எழுந்துட்டேன் போல... நீங்க இன்னும் பேசிட்டுத்தான் இருக்கீங்களா? ரெஸ்டே எடுக்காம... நீங்களாம் மனுஷங்க தானே!”

என்றவன், அடுத்த நொடியே தன் முதுகைப் பிடித்துக்கொண்டான்.

“இதுவேற உடம்பெல்லாம் வலிக்கிறது இல்லாம, குச்சி குத்தின இடம் வேற வலிக்குது...”

என்றபடி வலிக்கிற இடத்தைத் தேய்த்துவிட...

சுனையாழியின் முகத்தில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.

அதைப் பார்த்த யாழ்வேந்தன் உடனே அவளை நோக்கி விரலை நீட்டினான்.

“என்ன சிரிக்கிற?”

“ஒண்ணுமில்ல.”

“ஒண்ணுமில்லையா?”

யாழ்வேந்தன் தன் கையை இடுப்பில் வைத்துக்கொண்டான்.

“எனக்கு இங்க எழுந்து நிக்கவே கஷ்டமா இருக்கு. நீ என்னன்னா சிரிச்சுட்டு இருக்க.”

பின்னர் முகில்வர்மனைப் பார்த்தான்.

“முகில் சார்...”

என்றவனைப் பார்த்து,

“ம்?”

என்றான்.

“உங்களுக்கு உடம்புல வலி இல்லையா?”

என்ற அவனது கேள்விக்கு,

“கொஞ்சம் இருக்கு.”

என்றான் முகில்வர்மன்.

“கொஞ்சமா?”

யாழ்வேந்தன் கண்களை விரித்தான்.

“நான் தண்ணிக்குள்ள இருந்த நேரத்தைவிட, நீங்கதானே முங்கு நீச்சல்லாம் அடிச்சபடி அதிக நேரம் இருந்தீங்க?”

எனவும்,

முகில்வர்மன் அமைதியாக அவனைப் பார்த்தபடி,

“ஆமா, இருந்தேன்.”

என்றான்.

“அப்புறம் எப்படிங்க கொஞ்சமா உடம்பு வலிக்கும்?”

முகில்வர்மன் பதில் சொல்லவில்லை.

யாழ்வேந்தன் தன் தலையைச் சொறிந்துகொள்வதைப் பார்த்தவன்,

“நான் சீரியஸா கேக்கிறேன்... நீங்க என்னடான்னா தலையச் சொறியறீங்க!”

என்றபடி நால்வரையும் பார்த்தான்.

“நீங்க எல்லாம் மனுஷங்கதானா?”

அந்தக் கேள்வியில் இளமாறனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

சுனையாழியின் புன்னகை இப்போது சிரிப்பாக மாறியது.

யாழ்வேந்தன் அதைக் கவனித்ததும் இன்னும் எரிச்சலானான்.

“என்ன சிரிப்பு?”

“ஒண்ணுமில்லை யாழ்.”

“இல்ல... ஏதோ இருக்கு.”

அவன் நால்வரையும் சந்தேகமாகப் பார்த்தான்.

“நான் மட்டும் இங்க உடம்பு வலிக்குது, கால் வலிக்குது, முதுகு வலிக்குது என்று புலம்பிக்கிட்டு இருக்கேன்.”

“நீங்க நாலு பேரும் என்னன்னா...”

என்றவன் மெல்ல குரலைத் தாழ்த்தினான்.

“என்னைய விட்டுட்டு, நான் தூங்கும்போது ஏதையாவது சாப்பிட்டீங்களா?”

என்றவன் சுனையாழியைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“சுனை... நான் உன்னோட அண்ணன் தானே... என்னையும் எழுப்பி இருக்கலாம் இல்ல!”

என்றான் பாவம் போல.

“அடேய் அண்ணா! உன்னை நீயே காமெடி பீஸா மாத்திட்டு இருக்க... நாங்க பேசிட்டு இருந்தோம் டா இந்த இடத்தைப் பத்தி!”

என்றாள் சுனையாழி பல்லைக் கடித்தபடி.

“நிஜமாவா?”

“நிஜமாத்தான்.”

என்றபடி இளமாறனைச் சுட்டிக்காட்டி,

“இவர்கிட்ட வேணா கேளேன்.”

என்றாள்.

“ஆமாம்.”

என்று இளமாறனும் தலையசைக்க...

ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு,

“நீங்க சொல்லறதால நம்பறேன்... எனக்குப் பசிக்கிறதுபோல இருக்கு. இந்த டீவிலாம் காட்டுக்குள்ள பழம்லாம் கிடைக்கறது போலக் காட்டறாங்களே... அப்படி ஏதாவது இங்க கிடைக்குமா? நீங்கதான் அதிகமா காடு, மலைலாம் சுத்தறவங்களாச்சே...”

என்றான் முகிலையும் மாறனையும் பார்த்து.

இளமாறனோடு சேர்ந்து இப்போது முகில்வர்மனும் சிரித்துவிட்டான்.

“டாக்டர், நீங்க அமேசிங் தெரியுமா!”

அவ்வளவு நேரமாக இருந்த இறுக்கம், யாழ்வேந்தன் பண்ணிய அலப்பறையில் தளர்ந்தது.

யாழ்வேந்தனிடம் பேசிக்கொண்டே அருகிலிருந்த பாறையில் அமர்ந்தான் முகில்வர்மன்.

சில நொடிகள் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தவன்,

“ஒரு அரைமணி நேரம் நான் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன். அதுக்குள்ள நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க... இங்க பார்க்கிற மாதிரி வேற இடம் இருக்கான்னு.”

என்று சொல்லிவிட்டு மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டான்.

அவனைப்போலவே யாழ்வேந்தனும் இப்போது கவனமாக அவன் படுக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து படுத்துக்கொண்டு,

“நீங்க எழுந்திருக்கும் போது என்னையும் எழுப்பிவிடுங்க முகில்.”

என்றவனுக்குத் தெரியாது...

அவன் அருகில் அமர்ந்திருப்பவர்களின் மனதுக்குள் இப்போது பல நூற்றாண்டுகளாக மூடிக்கிடந்த கதவுகள் மொத்தமாகத் திறந்திருப்பது.

அவனுக்கு அது தேவையுமில்லை.

அவன் இந்தப் பயணத்தில் வந்தது...

தன் தங்கைக்காக.

தன் தாத்தாவிடம் இருந்து வந்த மூலிகை ஆர்வத்திற்காக.

அதற்கு மேல்...

அவனுக்கு வேறெதுவும் தேவையும் இல்லை.


யாழ்வேந்தன் மீண்டும் அமைதியாகப் படுத்ததும்...

இளமாறன் மெதுவாக முகில்வர்மன் அருகே வந்து, சிறிது இடைவெளிவிட்டு கண்களை மூடி அமரவும்...

சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை.

பின்னர் முகில்வர்மன் மெதுவாக, வாய் அசைப்பதே தெரியாமல்,

“இளமாறா...”

என்றான்.

“ம்?”

என்றான் அவனும், அந்தக் குரலுக்குப் பழக்கப்பட்டவனாக.

“வசீகரன் நம்மளைப் பார்த்துக்கிட்டே இருக்கிறதைப் போல இருப்பதை கவனிச்சியா?”

இளமாறன் உடனடியாக பதில் சொல்லாமல், சிறு மௌனத்திற்குப் பிறகு,

“வசீகரன்... இந்தக் காட்டுக்குப் புதுசு கிடையாது முகில் சார். போன முறை இங்க ஒரு காரைப் பார்த்து... அந்தக் கார் வச்சிருந்தது வசீகரன்னு நீங்க சொன்னீங்க. ஞாபகம் இருக்கு தானே? இப்ப அவரோட பேச்சையும்கூட கேட்டீங்க தானே? நாம இன்னும் அவரிடம் கவனமா இருக்கணும். முக்கியமா நீங்க...”

என்றான் மெல்லிய குரலில், கண்களைத் திருப்பாமலேயே.

அப்போது வசீகரனும் அவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“உங்களுக்கு ஏதாவது நினைவு வந்திருக்கணும்னு எதை வைச்சு அவன்கிட்ட நீ கேட்ட, மாறன்?”

என்றான் முகில்வர்மன்.

இளமாறன் சிறிது அமைதிக்குப் பிறகு,

“உங்களுக்கு மெல்லத் தெரியவரும் முகில் சார்... அதுவரை கொஞ்சம் கவனமா இருங்க.”

என்றவனின் பார்வை இப்போது வசீகரனைப் பார்த்தபடியே இருந்தது.

“ஆனா...”

என்ற முகில்வர்மன், இப்போது இன்னும் குரலைத் தாழ்த்தி மிக மிக மெதுவாகச் சொன்னான்.

“அவரைப் பார்க்கும்போது எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வருது.”

என்றதும் இளமாறனின் முகம் இறுகியது.

அவன் பார்த்த காட்சிகளினால்...

“எப்படி வராமல் போகும்? அவர் உங்களுக்கு அண்ணன் ஆயிற்றே...”

என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு,

“எனக்குத் தெரியல... உங்களுக்கு ஏன் அப்படி வருதுன்னு.”

என்றபடி இளமாறன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டான்.

“எனக்கு வந்த நினைவுகள் இனிமையானவை இல்ல.”

இதை என்னவென்று இவரிடம் சொல்வது என்று அமைதியாகிவிட்டான்.

சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

பின்னர் இளமாறன் குரலைத் தாழ்த்தினான்.

“நீங்க இன்னும் கொஞ்சம் கவனமா உங்களைப் பார்த்துக்கோ.”

முகில்வர்மன் அவனைப் பார்த்தான்.

“ஏன்?”

“எனக்குத் தெரியல.”

இளமாறனின் பார்வை வசீகரனிடமே இருந்தது.

“ஆனா...”

ஒரு கணம் தயங்கிவிட்டு,

“நீங்க எங்கேயும் அவரோட தனியா போகாதீங்க.”

என்றான்.

முகில்வர்மன் சில நொடிகள் அவனைப் பார்த்தான்.

“அவ்வளவு சந்தேகமா?”

என்றான்.

“சந்தேகம் இல்ல... உண்மை.”

என்று இளமாறன் மெதுவாகச் சொன்னான்.

“உண்மையா?”

என்றபடி முகில்வர்மன் அமைதியாகத் தலையசைத்தான்.

“சரி.”

அதே நேரத்தில்...

வசீகரனின் கைப்பேசி ஒலித்தது.

அவன் திரையைப் பார்த்தான்.

மதன்.

அவன் உடனடியாக அழைப்பை ஏற்றான்.

“சொல்லு.”

அந்தப் பக்கத்திலிருந்து மதனின் குரல் கேட்டது.

“சார்... நாங்க காட்டுக்குள்ள வந்துட்டோம்.”

வசீகரன் உடனே எழுந்து நின்றான்.

“லொகேஷன் சரியா கிடைச்சுதா?”

“கிடைச்சிருக்கு சார். நீங்க அனுப்பின இடத்துலதான் இருக்கோம்.”

“எவ்வளவு தூரம்?”

“இன்னும் கொஞ்ச தூரம்தான் சார். உங்களைச் சீக்கிரம் ரீச் ஆகிடுவோம்.”

எனவும்...

வசீகரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பின்னர்,

“சரி. கவனமா வாங்க. எங்களோட கண் பார்வைக்கு வராம கவனமா இருக்கணும்.”

என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அவன் கைப்பேசியை மெதுவாகத் தன் சட்டைப் பையில் வைத்தான்.

அவனுடைய பார்வை மீண்டும் முகில்வர்மன் மீது சென்றது.

அந்தப் பார்வையை இளமாறன் கவனித்தான்.

அவன் முகில்வர்மனை நோக்கித் திரும்பினான்.

இருவரின் கண்களும் ஒரு கணம் சந்தித்தன.

அந்த ஒரு பார்வையிலேயே...

இளமாறன் சொல்லிய எச்சரிக்கை மீண்டும் முகில்வர்மனின் நினைவுக்கு வந்தது.

“எங்கேயும் அவரோட தனியா போகாதீங்க.”

அதே நேரத்தில்...

அடர்ந்த காட்டுக்குள், மதன் தனது ஆட்களுடன் இன்னும் ஆழமாக முன்னேறிக்கொண்டிருந்தான்.

அவனுடைய கைப்பேசியில்...

வசீகரன் அனுப்பியிருந்த அதே இடத்தின் குறியீடு இன்னும் திறந்திருந்தது.

அவர்களை நெருங்குவதற்கு...

இனி அதிக தூரமில்லை.

அதே வேளையில்...

மும்பையிலிருந்து கிளம்பியிருந்த தீரனும் காட்டை நோக்கிய பயணத்தில் இருந்தான்.

வசீகரன் அனுப்பியிருந்த காட்டின் இருப்பிடமும் அவனிடம் இருந்தது.

“நான் காட்டுக்குள்ள போயிட்டேன். நீயும் கிளம்பு.”

என்று வசீகரன் அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான்.

தீரனும்...

அந்த அழைப்பை ஏற்று புறப்பட்டிருந்தான்.

காட்டுக்குள்...

நால்வரின் கடந்தகாலம் விழித்துக்கொண்டிருந்தது.

வெளியில் இருந்து...

புதிய மனிதர்கள் அந்தக் காட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால்...

அங்கே காத்திருந்தது புதையலோ...

மூலிகையோ...

மட்டும் அல்ல.

அவர்கள் அறியாத இன்னொரு மோதலும்...

அவர்களுக்கே தெரியாத இன்னொரு காதலும்...

அந்தக் காட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya