• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 40

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 40

நினைவுகள் பேசத் தொடங்கியபோது...!

“வேள்வியாளா!”

என்று அலறியபடி தூக்கத்திலிருந்து எழுந்த இளமாறன், இன்னும் அந்தக் காட்சியிலிருந்து முழுமையாக மீள முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

அவனது நெஞ்சு வேகமாக ஏறி இறங்கியது.

உடல் முழுவதும் வியர்வைத் துளிகள்.

கண்களில் அதிர்ச்சி.

மனதிற்குள் மட்டும்...

பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த நினைவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் உயிர்பெற்று எழுந்திருந்தன.

அவனுக்கு முன்னால் இருந்த அருவி...

அவன் அமர்ந்திருந்த பாறைகள்...

அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் அவனுடையவை.

அவனுடைய ஏதோ ஒரு ஜென்மத்தின் காலச்சுவடு.

அவனுடைய உயிரோடு ஒருகாலத்தில் கலந்திருந்த ஒரு வாழ்க்கை.

“நம்பியான்...”

அவன் உதடுகள் தன்னையறியாமல் அந்தப் பெயரை உச்சரித்தன.

அந்தப் பெயர் வெளியே வந்த நொடியில், அவனது உடல் சிலிர்த்தது.

அவனுக்கு எதிரே, கண்களை மூடி பாறையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த முகில்வர்மனைப் பார்த்தான்.

அவனுடைய பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் இருந்தது.

இதுவரை முகில்வர்மனை அவன் வாடிக்கையாளராக... சில நேரங்களில் நெருக்கமான ஒருவனாக மட்டுமே பார்த்திருந்தான்.

ஆனால் இப்போது...

அந்த முகத்திற்குப் பின்னால் இன்னொரு முகம் தெரிந்தது.

அரச குலத்தின் கம்பீரத்தோடு புரவியின் மீது அமர்ந்திருந்த அந்த இளவரசன்...

வேள்வியாளன்.

“நம்பியா...” என்ற வேள்வியாளனின் குரலும், இப்போது முகில்வர்மனின் முகமும்...

அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க வைத்தது.

“வேள்வியாளரே...” என்ற இளமாறனின் குரல் கேட்டதும் முகில்வர்மன் கண்களை மெல்லத் திறந்தான்.

இளமாறனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டவனது புருவங்கள் சற்றே சுருங்கின.

“என்னாச்சு மாறன்? மறுபடி தலைவலிக்க ஆரம்பிச்சுடுச்சா?” என்றான் எப்போதும் போல இயல்பாக.

முகில்வர்மன் அவ்வாறு கேட்ட மாத்திரத்தில், இளமாறன் திடீரென அவன் அருகே சென்று அவனது தோள்களைப் பற்றி தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.

அவனது குரல் நடுங்கியது.

“நீ... நீங்க என்னோட வேள்வியாளர்...” என்றான் திணறலாக.

முகில்வர்மன் புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படற? வேற என்னவோ பேரைச் சொல்லறியே... யாரைச் சொல்லற? இல்ல... யாரைத் தேடற?” என்றான்.

“நீ...”

இளமாறனின் கண்களில் கண்ணீர் திரண்டது.

“நானா?” என்றான் அவனது அணைப்பில் இருந்தபடியே.

“ஆமா... நீ என்னோட வேள்வியாளன் தான்.”

என்றவனது குரலில் இருந்த நடுக்கமெல்லாம் மறைந்து, இப்போது உறுதியாக ஒலித்தது.

அந்தப் பெயர் காற்றில் ஒலித்த அடுத்த நொடி...

முகில்வர்மனின் உடல் முழுவதும் மெல்ல ஒரு சிலிர்ப்பு ஓடியதை உணர்ந்தான்.

அடுத்த நொடியில்...

அவனது மனக்கண்ணில் ஒரு காட்சி மின்னியது.

காட்டுப்பாதை.

குதிரையின் வேகமான குளம்பொலி...

“நீங்கள் இருவரும் எப்பொழுதுதான் நான் கூறுவதை அச்சுப்பிசகாமல் பின்பற்றப் போகிறீர்களோ...” என்ற அவனது குரலும்...

“தங்கள் கவனம் எப்பொழுது என் பக்கம் திரும்பும், இளவரசே?” என்ற ஒரு பெண்ணின் குரலும்...

“தாங்கள் என்னை மன்னனிடமும் தங்கள் தமையனிடமும் தண்டனை வாங்கித்தராமல் ஓயமாட்டீர்களா, இளவரசே?” என்ற ஒரு ஆணின் குரலும் கேட்க...

அதைத் தொடர்ந்து,

“இருவரும் புகார் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று சிரித்தபடி கூறிய அவன் குரலும்...

மாறி மாறி ஒலித்தன.

முகில்வர்மன் தலையை உலுக்கிக்கொண்டான்.

மூச்சு சற்றுத் தடுமாறியது.

“இந்தக் குரல்...”

அவன் தன் நெற்றியை அழுத்திக்கொண்டான்.

“இந்தக் குரல்கள்...”

என்றான்.

இளமாறனின் கண்கள் விரிந்தன.

“என்ன... என்ன குரல்கள்?” என்றான் பரபரப்பாக.

முகில்வர்மன் பதில் சொல்லவில்லை.

அவனது பார்வை மட்டும் இளமாறனின் முகத்தில் நிலைத்திருந்தது.

அந்தப் பார்வையில்...

அவனை அறியாமலேயே ஒரு சொந்தம் இருந்தது.

பல பிறவிகளைக் கடந்தும் அழியாமல் தொடர்ந்திருந்த ஒரு பந்தம் இருந்தது.

“நம்பியான்...”

என்று முகில்வர்மனின் உதடுகள் மெல்ல அசைந்தன.

அந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது.

இளமாறனின் கண்களில் கண்ணீர் வழிய...

“ஆம்...” என்று கண்களில் கண்ணீரும், உதட்டில் சிரிப்புமாய் அவன் தலையசைத்தான்.

அருகில் இருந்த சுனையாழி அந்த இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

அவளுக்குள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலி இன்னும் இன்னும் ஆழமாகியபடியே இருந்தது.

எதற்கென்று அவளுக்குப் புரியவில்லை.

இளமாறன் முகில்வர்மனைப் பார்த்த விதமும்...

முகில்வர்மன் இளமாறனை அழைத்த விதமும்...

அவளுடைய நெஞ்சுக்குள் விளக்கமறியாத ஒரு உணர்வை எழுப்பியது.

அவளது பார்வை அவளையும் மீறி முகில்வர்மனின் மீது சென்றது.

அவனோ இன்னும் இளமாறனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ என்னையா வேள்வியாளன்னு கூப்பிட்ட?” என்றான் மெல்ல.

இளமாறன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“ம்ம்ம்... உங்களைப் பார்த்துதான் அப்படிக் கூப்பிட்டேன். உங்களோட பெயர் தான் வேள்வியாளன். எனக்கு என் முன்ஜென்ம நினைவுகள் ஞாபகம் வந்திருக்குன்னா, நிச்சயம் உங்களுக்கும் வரும்...” என்றான் அழுத்தம் திருத்தமாக இளமாறன்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், மூவரையும் பார்த்தபடி நின்றிருந்த வசீகரனின் முகம் மாறியது.

அவன் இதுவரை அமைதியாக இருப்பது போல இருந்தாலும், சூறைக்காற்றாய் சுழன்றபடி இருந்தன அவனது முன்ஜென்ம நினைவுகள்.

இளமாறனின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனிக்காததைப் போல, உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.

“முன்ஜென்மமா?”

என்று அவன் மிக மெதுவாகக் கேட்டான்.

இளமாறன் அவனை நோக்கி முகத்தை மட்டும் திருப்பினான்.

அந்தப் பார்வை...

வசீகரனின் உள்ளத்தை ஒருகணம் உறைய வைத்தது.

“ஆம்.”

இளமாறன் அவனைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“உங்களுக்கு ஏதும் ஞாபகம் வரவில்லையா என்ன?” என்றவனின் பார்வை கூர்வாளைப் போல அவனைக் குத்தியது.

வசீகரனின் விரல் நகங்கள் அவனது உள்ளங்கையை இறுக்கின.

“எனக்கு என்ன ஞாபகம் வரும்?” என்றான்.

அவன் குரலில் பதற்றம் இருந்தது.

இளமாறன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

அவன் பார்த்த காட்சிகள் மீண்டும் அவனது மனதில் சுழன்றன.

அரியணை...

நிலப்பகுதிகள்...

அதிகாரம்...

பொறாமை...

கோபம்...

இறுதியில்...

குருதி.

அவன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

“நிச்சயம் ஞாபகம் வந்திருக்கும்... உங்களுக்கும், அரசே...” என்றான் அழுத்தமாக மறுபடியும்.

“என்ன அரசேவா?” என்று வசீகரன் திகைத்தது ஒரே ஒரு நொடி தான்.

“நான் ஆர்க்கியாலஜிஸ்ட். இப்போதுதான் இந்தக் காட்டுக்கே முதல் முறை வர்றேன். அப்படி இருக்க என்ன ஞாபகம் வரும் எனக்கு?” என்றான் எதுவும் அறியாதவன் போல.

இளமாறன் சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

வசீகரனை நேராகப் பார்த்தான்.

“என் முன்ஜென்ம ஞாபகங்களில் நீங்களும் இருந்தீங்க...” என்றான்.

வசீகரனைப் பின்பற்றியே இளமாறனும் அமைதியாக இருந்தான்.

அவனது உள்மனம் மட்டும்...

இவரை முகில் சார் பக்கத்துல போக விடக்கூடாது. நாமும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

என்று எச்சரித்துக்கொண்டது.

அதே நேரத்தில், அவனது உள்மனம் ஓர் திடுக்கிடலோடு காந்தள்மங்கையை நினைவுகூர்ந்தது.

வசீகரனின் முகத்தில் இருந்த நிதானம் மெல்ல மாறத் தொடங்கியது.

சுனையாழி ஓர் அதிர்வுடன் இளமாறனையும் வசீகரனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

முகில்வர்மனின் கவனம் அப்போதுதான் சுனையாழியின் மீது விழுந்தது.

அவளுக்காகவே தான் உன் பிறப்பு...

என்ற வார்த்தைகள் நிஜமோ என்று எண்ணத் தொடங்கினான்.

“நானா?” என்றான் தன்னை கட்டுக்குள் வைத்தபடியே வசீகரன்.

“ஆம்.”

இளமாறனின் குரல் இப்போது அழுத்தம் கூடியிருந்தது.

“ஆனால்...”

அவன் ஒரு கணம் தயங்கினான்.

“எனக்கு உங்களைப் பற்றிய சில நிகழ்வுகள் மட்டும்தான் தெரிஞ்சது.”

வசீகரன் சற்றுத் திகைத்தான்.

“என்ன சொல்ற மாறன்?” என்றான் அவன் கேட்டதை உறுதிப்படுத்திக்கொள்ள.

“எனக்கு நினைவுக்கு வந்தது... சில காட்சிகள் மட்டுமே.”

இளமாறன் மெதுவாகச் சொன்னான்.

“அந்தக் காட்சிகளுக்குப் பின்னால் என்ன நடந்தது என்று இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.”

இப்போது வசீகரனின் திட்டம் என்னவாக இருந்தாலும், தனக்கு முழு நினைவும் திரும்பிவிட்டதை அவன் அறிந்துவிடக் கூடாது என்பதில் இளமாறன் உறுதியாக இருந்தான்.

வசீகரனின் நெஞ்சுக்குள் பதுங்கியிருந்த பதற்றம் சற்றுத் தளர்ந்தது.

ஆனால்...

அவனது கண்களில் இருந்த அந்த ஆராய்ச்சிப் பார்வை மட்டும் மறையவில்லை.

அந்த நேரத்தில்...

முகில்வர்மனை நெருங்கி நின்றிருந்த சுனையாழி தன் நெற்றியைத் தொட்டபடி சில நொடிகள் அசையாமல் நின்றாள்.

“வேள்வியாளன்...”

என்று அவள் மெல்ல முணுமுணுத்தவள், மெல்லத் தலையைத் திருப்பி முகில்வர்மனைப் பார்த்தாள்.

அப்போதுதான் அவளுக்கு உறைத்தது...

அவ்வளவு நேரமும் முகில்வர்மனும் சுனையாழியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதே.

அவனைப் பார்த்த அந்த நொடியிலேயே...

அவளது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று வெடித்தது போல இருந்தது.

மழையில் நனைந்தபடி குதிரையில் ஏறிய ஒரு இளைஞன்.

அரண்மனைத் தோரணையில், போர்களுக்காகப் பயின்ற தற்காப்புக் கலைகளினாலும் வலுவேறிய உடல்வாகுடனும் அவள் முன்னால் நின்று புன்னகைக்கும் முகம்.

“காந்தள்...”

என்று அழைக்கும் ஆண்மை ததும்பிய குரலும்...

சுனையாழியின் கண்கள் திடீரென விரிந்தன.

“வேள்வியாளரே...”

அவள் உதடுகளில் இருந்து அந்தப் பெயர் தவறி விழுந்தது.

சுனையாழியின் உடல் முழுவதும் மின்னல் பாய்ந்தது போல சிலிர்த்தது.

அவளது கண்கள் அவனை நோக்கி நிலைத்தன.

“என்ன...?”

அவளால் அந்த ஒரு வார்த்தையை மட்டுமே உச்சரிக்க முடிந்தது.

முகில்வர்மனுக்கே தான் நினைவுகள் செல்லும் பாதை புரியாமல், செயலற்று அவளைப் பார்த்தபடியே நின்றான்.

அவன் குழப்பத்தோடு சுனையாழியைப் பார்த்தான்.

“நான்...” என்றவாறே அவள் நெற்றியைப் பிடித்துக்கொண்டாள்.

சுனையாழியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

அவளது உள்மனம் அந்தப் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தது.

வேள்வியாளன்.

அந்தப் பெயர் அவளுக்கு அந்நியமானதல்ல.

அது...

தொலைந்த காலத்தில் எங்கோ அவள் அவரின் வருகைக்காகக் காத்திருந்த பெயரைப் போல இருந்தது.

இளமாறன் உள்மனம் காந்தளை நினைத்த அந்த நொடியிலிருந்து அந்த இருவரையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.

அவனது முகத்தில் மெதுவாக ஒரு உணர்வு மலர்ந்தது.

“வேள்வியாளரே...”

என்று அவன் மெல்ல அழைத்தான்.

முகில்வர்மன் அவனை நோக்கித் திரும்பினான்.

“என்ன?”

“அவள்...”

இளமாறனின் பார்வை சுனையாழியின் மீது சென்றது.

“அவள் காந்தள்மங்கை.”

சுனையாழியின் கண்களில் இருந்து ஒரு கண்ணீர்த்துளி வழிந்தது.

அவளுக்குத் தெரியவில்லை...

அந்தக் கண்ணீர் ஏன் வந்தது என்று.

அந்தப் பெயர் கேட்டதும் நெஞ்சு ஏன் இவ்வளவு வலிக்கிறது என்றும்.

ஆனால்...

அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஒரு குரல் மட்டும் ஒலித்தது.

“காத்திருக்கிறேன்... தங்களின் வருகைக்காக...”

அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அதே நேரத்தில்...

வசீகரன் திடீரென ஒரு படி பின்னால் நகர்ந்தான்.

அவனது முகத்தில் இப்போது பயம் தெளிவாகத் தெரிந்தது.

இளமாறன் அதை கவனித்தான்.

முகில்வர்மன் சுனையாழியைப் பார்த்தபடி இருக்க...

இவர்கள் நால்வரின் நிலையும், அங்கு இவ்வளவு நேரம் நடந்த உணர்வுகளின் போராட்டமும் எதுவும் அறியாமல், தன்னை மறந்து உறங்கியபடி இருந்த யாழ்வேந்தனின் மீது வசீகரனின் பார்வை பதிந்தது.

அவன் எதுவும் பேசவில்லை.

ஆனால் அவனது கண்கள் மட்டும்...

“கடந்த காலத்தின் ஏதோ ஒரு வகையில் இவனுக்கும் தொடர்பிருக்குமா?”

என்று கேட்பது போல இருந்தது.

அதையும் கவனித்த இளமாறனுக்கு தோன்றியது.

காரணம் இல்லாமல் இந்த டாக்டர் நம்மோடு வந்திருக்க வாய்ப்பில்லை. இவரின் வருகை நமக்கு நன்மையாகட்டும்...

என்று நினைத்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

அந்தக் காடும்...

அதில் என்ன நடந்தது?

வேள்வியாளனின் உயிரை யார் பறித்தது?

காந்தள்மங்கை ஏன் அவனை இழந்தாள்?

நம்பியான் ஏன் அந்த இறுதி தருணத்தைக் காண வேண்டியதாகிவிட்டது?

பெருவேள்சாத்தனின் உள்ளத்தில் எப்போது அதிகாரத்தின் தீ பற்றியது?

எதற்காக அந்த நான்கு உயிர்களும் மீண்டும் ஒரே பாதையில் பிறந்து சந்திக்க வேண்டியதாகிவிட்டது?

என்பதும் இளமாறனுக்குத் தெரிந்தது...

இப்போது அவர்கள் தேடி வந்த இந்த அருவி...

இந்தக் காட்டின் திறக்கப்படாத ஒரு பொக்கிஷத்தின் நுழைவாயிலாகப் போகிறது என்றும்...

அது...

அவர்களின் நினைவுகளை ஒவ்வொன்றாகக் காட்சிப்படுத்தப் போகிறது என்பதும்தான்.

அவன் முகில்வர்மனைப் பார்த்தான்.

பின்னர் சுனையாழியைப் பார்த்தான்.

இறுதியாக வசீகரனைப் பார்த்தான்.

“நம்மில் யாருக்கும் இனி இந்தக் காட்டிலிருந்து வெளியேறுவது அவ்வளவு எளிதாக இருக்காது...”

என்று மெதுவாக, ஆனால் மிகவும் அழுத்தமாகக் கூறினான்.

முகில்வர்மனின் பார்வை அவனை நோக்கி உயர்ந்தது.

“ஏன்?”

இளமாறன் மெதுவாகச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.

பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டிருந்த ஒரு கதவு திறக்கத் தொடங்கியதன் அச்சம் மட்டுமே இருந்தது.

“ஏனென்றால்...”

அவன் அருவியின் மறுபுறம் இருந்த அடர்ந்த காட்டைப் பார்த்தான்.

“நாம் தேடி வந்த இந்த அருவி...!”

என்று ஒரு கணம் அமைதியாக நின்றுவிட்டு...

“நம்முடைய கடைசிச் சுவடுகள் பதிந்த இடம்.”

என்றான்.

அருவியின் பேரிரைச்சல் அந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டது.

ஆனால்...

அவர்களின் நான்கு உயிர்களுக்குள் மட்டும்...

அந்த வார்த்தை ஆழமாகப் பதிந்துவிட்டது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya