• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 35

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 35

காரணம் அறியா பதட்டம்!

இளமாறன் சிறு படபடப்போடு தண்ணீரின் மேற்பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒருமுறை வலப்புறம் பார்த்தான்.

மீண்டும் இடப்புறம் பார்த்தான்.

அதற்குப் பிறகு, முகில்வர்மன் தண்ணீருக்குள் முழுகிய அந்த இடத்தையே கூர்ந்து பார்த்தான்.

தண்ணீரின் மேல் அலைகள் மட்டும் சிறு சிறு வட்டங்களாக உருவாகி, பரந்து விரிந்து, அவனையும் தொட்டு மறைந்தபடி இருந்தன...

ஆனால்...

முகில்வர்மனின் தலை மட்டும் தண்ணீரின் மேற்பரப்பில் எங்கும் தெரியவில்லை.

“முகில் சார்...”

இளமாறனின் குரல் அருவி நீரின் ஆரவாரத்துக்குள் மெல்லக் கரைந்தது.

பதில் இல்லை.

அவன் இன்னும் சில நொடிகள் காத்திருந்தான்.

‘இப்போ மேல வந்துடுவாரு...’

என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

ஆனால் அந்த நொடிகளும் கடந்துபோயின.

ஐந்து நிமிடங்கள்...

பத்து நிமிடங்கள்...

நேரம் நகர நகர, இளமாறனின் பார்வை மட்டும் அந்த முழு நீர்ப்பரப்பையும் அலசியபடி இருந்தது.

அவனின் இதயத்துடிப்பு மட்டும் தாளம் தவறித் துடிக்கத் தொடங்கியது.

முதலில் சாதாரணமாக ஆரம்பித்த அந்தத் துடிப்பு, நிமிடங்கள் கடக்கக் கடக்க பதட்டத்தில் அதிவேகமாக மாறத் தொடங்கியது.

முகில்வர்மனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல், இந்தப் பதட்டம் அடங்காது என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரியாமலும், தனக்குள் இந்தப் பதட்டமும் பயமும் ஏன் உருவாகிறது என்ற காரணம் புரியாமலும், அவன் முகில்வர்மனுக்காகத் தவிக்கத் தொடங்கினான்.

“முகில் சார்!”

இந்த முறை சற்று சத்தமாக அழைத்தான்.

பதில் இல்லை.

தண்ணீரின் மேற்பரப்பில் மீண்டும் ஒருமுறை சுற்றிலும் தேடிய அவனது கண்கள், முகில்வர்மனின் தலை எங்கேயாவது தெரிகிறதா என்று அலசியது.

“முகில் சார்!” என்று மீண்டும் அழைத்தான்.

அவனுடைய குரலில் இப்போது பதட்டம் வெளிப்படையாகத் தெரிந்தது.

சில நிமிடங்களாகவே மாறனின் பதட்டத்தை கவனித்தபடி இருந்த சுனையாழி,

“மாறன்...” என்று அழைத்து,

“என்ன தேடுறீங்க?” என்றாள்.

சட்டென அவளை நோக்கித் திரும்பிய இளமாறன்,

“முகில் சார் தண்ணிக்குள்ள போய்... ரொம்ப நேரமாச்சு. இன்னும் மேல வரவே இல்ல.”

“என்ன?” என்றவளின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

சுனையாழியின் பார்வையும் உடனடியாக அந்தத் தண்ணீரை நோக்கித் திரும்பியது.

அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி நொடியில் மறைந்து, அங்கே பதட்டம் நொடிக்கு நொடி அதிகரித்தபடியே இருந்தது.

“எவ்வளவு நேரம் ஆச்சு?”

“பத்து... பதினைந்து நிமிஷம் இருக்கும்.”

இளமாறன் சொல்லும்போதே அவன் குரல் நடுங்கியது.

“நான் முதல்ல... இரண்டு மூணு நிமிஷம்தான் நீருக்குள்ள இருப்பார்ன்னு நினைச்சேன். ஆனா...”

அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை.

சுனையாழியும் அந்த நீர்ப்பரப்பைச் சுற்றிலும் தன் பார்வையை அலசத் தொடங்கினாள்.

எங்காவது முகில்வர்மனின் தலை தெரிகிறதா என்று பார்த்தாள்.

அவளுடைய இதயத்துடிப்பும் மாறனைவிட அதிகமாகத் துடித்தது.

அவளுக்கே அவளுடைய படபடப்பு ஆச்சரியமாக இருந்தது. கூடவே பயமாகவும் இருந்தது.

‘ஏன்?’

என்ற காரணம் தெரியவில்லை.

முகில்வர்மனுக்காக எதற்காக இந்த அளவுக்குப் பதட்டப்படுகிறோம் என்று புரியவில்லை.

அல்லது...

வேறு ஏதாவது காரணமா?

அவளுக்குப் புரியவில்லை.

“மாறன்...” என்று அவள் மெதுவாக அழைக்கவும்,

“ம்?” என்றான்.

“எனக்கு... ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு.”

என்றவளைப் பார்த்த இளமாறனும்,

“எனக்கும் அப்படித்தான் தோணுது, டாக்டர்,” என்றான்.

சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“எனக்கு ஏன் இவ்வளவு பதட்டமும் படபடப்பும் வருதுனு தெரியவே இல்ல...” என்றான் இளமாறன்.

சுனையாழி எதுவும் சொல்லவில்லை.

அவளுக்கும் அதே நினைப்புதானே!

அவளுடைய பார்வை மீண்டும் தண்ணீரை நோக்கிச் சென்றது.

“முகில் சார்!” என்று இப்போது இருவரும் சேர்ந்து அழைத்தனர்.

பதில் இல்லை.

அவர்களை கவனிக்காமல் மீன்குஞ்சைப் போலத் தண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த யாழ்வேந்தனும் அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

“என்னாச்சு?”

“முகில் சார்...” என்றவனுக்கு அடுத்த பேச்சே வரவில்லை. மூச்சுதான் வேக வேகமாக வந்துகொண்டிருந்தது.

“முகில் சார்...” என்ற இளமாறனின் குரலில் இருந்த பதட்டத்தைக் கேட்டதும் யாழ்வேந்தனின் முகமும் மாறியது.

“முகிலுக்கு என்னாச்சு?” என்றவனின் பார்வையும் இப்போது முகில்வர்மனைத் தேடத் தொடங்கியது.

தேடியபடியே,

“எவ்வளவு நேரமா காணோம்?” என்றான்.

“ஒரு டீப் ப்ரத் எடுத்து நீருக்குள்ள போனார். பதினைந்து... இருபது நிமிஷம் இருக்கும். இன்னமும் மேல வரல...” என்றான் படபடப்பான குரலில்.

யாழ்வேந்தன் உடனடியாக அந்தப் பகுதியை நோக்கிப் பார்த்தான்.

“முகில் சார் முழுகிய இடம் இதுதானே?”

“ஆமா.”

மூவரும் அந்த இடத்தைச் சுற்றித் தேடத் தொடங்கினார்கள்.

யாழ்வேந்தன் தண்ணீருக்குள் மூழ்கிப் பார்த்தான்.

இளமாறன் அவனால் செல்ல முடியும் ஆழம்வரை சென்றான்.

சுனையாழி மீண்டும் மேற்பரப்பில் தேடினாள்.

ஆனால்...

எங்கும் முகில் இல்லை.


அதே நேரத்தில்...

மேலே பாறையின் மீது நின்றிருந்த வசீகரன், மதனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“சரி மதன்... நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் ஓகேதான். இன்னும் ஏதாவது தகவல் கிடைச்சாலும் உடனே எனக்குக் கால் பண்ணு.”

“சரிங்க சார்.”

மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

வசீகரன் கைப்பேசியை மெதுவாகக் கீழே இறக்கினான்.

அவனுடைய பார்வை தன்னிச்சையாக அருவியை நோக்கிச் சென்றது.

அங்கே...

இளமாறன், சுனையாழி, யாழ்வேந்தன் மூவரும் தண்ணீருக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

வசீகரனின் புருவம் சுருங்கியது.

“என்னாச்சு?” என்று மேலிருந்தபடியே கேட்டான்.

இளமாறன் உடனே அவனை நோக்கிப் பார்த்தான்.

“முகில் சார் தண்ணிக்குள்ள போனாரு... இன்னும் மேல வரல,” என்றவனின் குரலில் பதட்டம் தெரிந்தது.

வசீகரனின் முகம் ஒரு நொடி கல்லென இறுகியது.

அவன் இளமாறனைப் பார்த்தான்.

பிறகு தண்ணீரைப் பார்த்தான்.

“எவ்வளவு நேரம்?” என்றான்.

“பதினைந்து... இருபது நிமிஷம் இருக்கும்.”

அவனுடைய குரல் முடியும் முன்பே...

வசீகரன் அடுத்த நொடி வில்லென நீருக்குள் பாய்ந்திருந்தான்.

அவனுடைய நெஞ்சம் துடிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்த நொடியே அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

அவனுக்கே புரியாத ஒருவிதமான காரணம் அறியா பதட்டம்.

இப்போது நால்வருமாக முகில்வர்மன் முழுகிய இடத்தைச் சுற்றித் தேடத் தொடங்கினர்.

தண்ணீரின் அடியாழம் வரை சென்று வந்தான் வசீகரன்.

பாறைகளின் இடுக்குகளைப் பார்த்தனர்.

அருவியின் ஓட்டத்தோடு சற்றுத் தள்ளிச் சென்றிருக்கிறாரா என்றும் பார்த்தனர்.

ஆனால்...

முகில்வர்மன் இருந்ததற்கான சுவடு அங்கே இல்லை.


அதே நேரத்தில்...

நீரின் அடியில்...

முகில்வர்மன் தனியாக இருந்தான்.

அவன் தினசரி மூச்சுப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்ட மூச்சைக் கட்டுப்படுத்தும் முறையைப் பயன்படுத்தி, மூச்சை அடக்கி நீந்திக்கொண்டிருந்தான்.

அருவியின் ஆழத்தை கண்களால் அளந்தபடியே இருந்த அவனுக்குள் எந்தப் பதட்டமும் இல்லை.

எவ்வித பயமும் இல்லை.

மாறாக...

அவனுக்குள் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி பரவிக்கொண்டிருந்தது.

அந்த நீர் அவனைத் தள்ளவில்லை.

அவனை அழுத்தவில்லை.

அவனை...

தழுவிக்கொண்டது.

அவன் கைகளை விரித்தபோது, நீர் அவனைச் சுற்றி மென்மையாகச் சுழன்றது.

முகில்வர்மனுக்கு அந்த உணர்வு புதிதாக இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த நண்பனைக் கட்டித்தழுவியது போல இருந்தது.

அதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘நான் இதை...’

அவன் கண்களை மூடினான்.

‘...ஏற்கனவே உணர்ந்திருக்கிறேனா?’

என்ற எண்ணம் தோன்றியது.

அவன் இன்னும் கொஞ்சம் ஆழத்திற்குச் சென்றான்.

அங்கே இருந்த பாறைகளின் அமைப்பு...

நீரின் ஓட்டம்...

அந்த ஓட்டம் திரும்பும் விதம்...

எல்லாமே அவனுக்குப் பழக்கமானதாக இருந்தது.

அவன் கையை நீட்டியபோது, ஒரு பாறையின் விளிம்பைத் தொட்டான்.

அந்தத் தொடுதல்...

அவனுக்குள் ஏதோ ஒன்றைத் திறந்தது.

ஒரு காட்சி.

மிகச் சிறிய காட்சி.

பசுமையான மரங்கள்.

அதே அருவி.

அருவியின் அருகில் நின்றிருந்த ஒருவரின் நிழல்.

அதற்குப் பிறகு...

ஒரு பெண்ணின் குரல்.

“அரசே.”

முகில்வர்மனின் கண்கள் ஒரு நொடி மூடி திறந்தன.

அவன் சுற்றிலும் பார்த்தான்.

யாரும் இல்லை.

அந்தக் குரல் எங்கிருந்து வந்தது?

அவனுக்குத் தெரியவில்லை.

அவன் மீண்டும் கண்களை மூடினான்.

மற்றொரு காட்சி.

ஒரு பழைய பாதை.

அந்தப் பாதையில் ஓடும் குதிரையின் கால் ஓசை.

அதன் பின்னால்...

யாரோ அவனை அழைப்பது போல.

“வேள்வியாளரே...”

அவன் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அசைந்தது.

ஆனால் அந்த நினைவு முழுமையாக அவனிடம் வரவில்லை.

அது நினைவல்ல...

நினைவிற்குள் மறைந்திருந்த ஒரு நினைவு.

அவன் அதைத் தொட முயன்ற ஒவ்வொரு முறையும் அது மீண்டும் இருளுக்குள் மறைந்தது.

முகில்வர்மன் அதைப் பற்றி யோசிக்காமல் மீண்டும் நீந்தினான்.

அந்த நீர் அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றது.

அவன் முதலில் மூழ்கிய இடத்திலிருந்து நீரோட்டம் அவனை மெதுவாக எதிர்ப்புறமாகத் தள்ளிக்கொண்டிருந்தது.

அவன் அதை உணர்ந்தான்.

ஆனால் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

மாறாக...

அந்தப் பக்கம் அவனை அழைப்பது போல இருந்தது.

அவன் இன்னும் கொஞ்சம் சென்றான்.

அங்கே நீர் சற்று அமைதியாக இருந்தது.

பாறைகளுக்கிடையே ஒரு சிறிய இடைவெளி.

அதைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் தன்னிச்சையாக ஒரு புன்னகை மலர்ந்தது.

ஏன் என்று தெரியவில்லை.

ஆனால்...

அந்த இடம் அவனுக்கு மிகவும் பழக்கமானதாக இருந்தது.

அவன் அங்கே சில நொடிகள் நின்றான்.

அவனுடைய மனதுக்குள் மீண்டும் சில காட்சிகள் மின்னின.

ஒரு கல் மேடை...

அதன் அருகே வைத்திருந்த மூலிகைக் கட்டு...

தண்ணீரை நோக்கி நிற்கும் ஒரு பெண்ணின் உருவம்...

அவளுடைய முகம் மட்டும் தெளிவாகத் தெரியவில்லை.

முகில்வர்மன் அந்த உருவத்தைப் பார்க்க முயன்றான்.

அடுத்த நொடியே காட்சி மறைந்துவிட்டது.

அவன் மெதுவாக மேலே நோக்கிப் பார்த்தான்.

சூரிய ஒளி தண்ணீரின் வழியே உடைந்து அவன் முகத்தில் விழுந்தது.

அவன் மேலே நீந்தத் தொடங்கினான்.


இங்கே...

இளமாறன், சுனையாழி, யாழ்வேந்தன், வசீகரன்—

நால்வரும் இன்னும் முகில்வர்மன் முழுகிய அதே இடத்தில்தான் தேடிக்கொண்டிருந்தனர்.

“முகில் சார்!”

இளமாறன் மீண்டும் அழைத்தான்.

“முகில்!”

சுனையாழியும் குரல் கொடுத்தாள்.

யாழ்வேந்தன் சற்று ஆழமாகச் சென்று பார்த்தான்.

வசீகரன் சுற்றிலும் கண்களை ஓடவிட்டான்.

ஆனால்...

அவர்களுக்குத் தெரியாமல் நீரின் ஓட்டம் முகில்வர்மனை அந்த இடத்திலிருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றிருந்தது.

அவர்கள் தேடிய இடத்தின் எதிர்ப்புறத்தில்...

ஒரு பாறையின் பின்னால்...

முதலில் அவனுடைய தலைமுடி நீருக்கு மேலே தெரிந்தது.

பிறகு முகம்.

முகில்வர்மன் மெதுவாக மேலே வந்தான்.

அவன் முகத்தில் எவ்வித பதட்டமும் இல்லை.

மாறாக...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒன்றை அடைந்த மனதின் அமைதியான மகிழ்ச்சி இருந்தது.

அவன் தலைமுடியிலிருந்து வழிந்த தண்ணீரைக் கைகளால் ஒதுக்கிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.

சில அடிகள் தள்ளி...

நால்வரும் பதற்றத்தோடு தண்ணீரில் எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த முகில்வர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவன் சற்றுக் குழம்பியபடி அவர்களை நோக்கி நீந்தி வந்தான்.

“என்ன தேடுறீங்க?”

அந்தக் குரல் கேட்டதும்...

இளமாறன் உறைந்து நின்றான்.

சுனையாழி திடுக்கிட்டு திரும்பினாள்.

யாழ்வேந்தன் கண்களை விரித்துப் பார்த்தான்.

வசீகரனின் முகமும் சில நொடிகள் அசைவின்றி நின்றது.

அவர்கள் நால்வரும்...

ஒரே நேரத்தில் முகில்வர்மனைப் பார்த்தனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்களுடைய நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த அந்தக் காரணம் அறியா பதட்டம் இன்னும் அவர்களை விட்டுப் போகவில்லை.

ஆனால்...

அந்தப் பதட்டத்தின் காரணம் மட்டும் அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

முகில்வர்மனோ...

அவர்களின் ரியாக்ஷனைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய மனதுக்குள் மட்டும்...

அந்த அருவியின் நீர் விட்டுச் சென்றிருந்த...

மறந்துபோன ஒரு நினைவின் முதல் ஈரம்...

எந்த வழி செல்வது என்று புரியாமல், அவனைப்போலவே தேங்கி நின்றது அவனுள்...

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya