• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 30

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 30

எண்ணங்களின் புயல்!

ஹோட்டலின் அந்த ஆடம்பர அறைக்குள் அமைதி பரவியிருந்தது.

சுனையாழியும் யாழ்வேந்தனும் தங்களுக்கென முன்பதிவு செய்திருந்த அந்தப் பெரிய அறையில் தங்கியிருந்தனர். உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்ததிலிருந்தே சுனையாழியின் மனம் அமைதியின்றித் தவித்துக்கொண்டிருந்தது.

ஜன்னல் அருகே நின்று, வெளியே இருளில் மூழ்கியிருந்த நெல்லை நகரின் மங்கலான விளக்குகளை வெறித்தபடி நின்றாள். அவளது சிந்தனைகள் முழுவதும் சற்று நேரத்திற்கு முன்பு உணவகத்தில் பார்த்த அந்தப் புதியவனைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்தன.

அவனைப் பார்த்த அந்த ஒரு நொடி... அவளது மனதிற்குள் ஏதோ ஒரு சுழற்புயலை ஏற்படுத்தியிருந்தது.

அவளது அமைதியான தோற்றத்தைக் கவனித்த யாழ்வேந்தன், தன் பயணப் பையிலிருந்து துணிகளை எடுத்து வைத்துக்கொண்டே அவளைப் பார்த்தபடி,

“என்ன யாழி... அறைக்கு வந்ததிலிருந்து ஒரே அமைதியா இருக்க? பயணக் களைப்பா? இல்ல... வேற எதுவுமா?” என்றான்.

சுனையாழி மெல்லத் திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.

தன் மனதிற்குள் புயலெனச் சுழன்றடிக்கும் அந்த விசித்திர உணர்வை எப்படி விவரிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“இல்லை அண்ணா... களைப்பெல்லாம் இல்லை. மனசுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி இருக்கு...” என்றாள் மெல்லிய குரலில்.

“நாளைக்கு நாம போற காட்டுல தாத்தா தேடிட்டு இருந்த மூலிகை கிடைக்கலனாலும் பரவாயில்லை. அதுக்காக ரொம்ப யோசிச்சு மண்டையைக் குழப்பிக்காத. இங்க இல்லன்னா இன்னும் ஒரு இடம் தேடலாம்... சரியா?

விடியற்காலையில மாறன் வரச் சொல்லியிருக்காரு. நேரத்தோட தூங்குனாத்தானே காலையில சுறுசுறுப்பா எழ முடியும்? சரி... நீ போய்ப் படு. நான் இந்த உடைகளை எல்லாம் எடுத்து வச்சிட்டு வந்து படுக்குறேன்,” என்று யாழ்வேந்தன் தங்கையின் மீது அக்கறையோடு கூறிவிட்டு, தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

சுனையாழி மெல்லத் தலையசைத்துவிட்டுப் படுக்கையை நோக்கிச் சென்றாள்.

கட்டிலில் சாய்ந்து, தலையணையைச் சரிசெய்து படுத்துக்கொண்டாள். ஆனால், அவளது விழிகளுக்குத் தூக்கம் வராமல் விலகி நின்றது.

இடப்பக்கமும் வலப்பக்கமுமாக மாறி மாறிப் புரண்டு படுத்துக்கொண்டே இருந்தாள்.

அவளது மனதிற்குள் முதன்முதலாக உருவெடுத்த மிகப்பெரிய கேள்வி — வசீகரன்!

‘இன்னைக்குத்தான் அவனை முதன்முதலா என் வாழ்நாள்ல பார்க்கிறேன்... ஆனா, அவனைக் கண்ட அந்த முதல் நொடியிலேயே என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் பொங்கி வழியுது?

முன்பின் தெரியாத ஒரு அந்நியனைப் பார்த்து எந்த ஒரு மனிதனுக்கும் இப்படி ஒரு அப்பட்டமான வெறுப்பு வராதே!

அவனோட பார்வையும், அவனோட சிரிப்பும், அவன் பேச்சும்... எந்தவிதமான அநாகரிகத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனா, என் ஒவ்வொரு நரம்பிலும் ஏன் இப்படி வெறுப்பை விதைக்கிறான்?

இவனை நான் இதுக்கு முன்னாடி வேற எங்காவது பார்த்திருக்கேனா? இல்ல... தலையில அடிகிடிப் பட்டு ஒருவேளை நடந்த எதையாவது மறந்துபோயிருக்கேனா?’

என்று நினைத்த மாத்திரத்தில்...

“டேய் அண்ணா... எனக்கு ஏதாவது அடிபட்டு, நான் பழசுல நடந்ததையெல்லாம் மறந்து போயிருக்கேனா?” என்ற சுனையாழியின் குரலில் தூக்கிவாரிப் போட எழுந்தமர்ந்தான் யாழ்வேந்தன்.

அப்போதுதான் படுக்கையில் படுத்திருந்த யாழ்வேந்தன், சுனையாழியின் கேள்வியைக் கேட்டு,

“என்ன? கேட்ட யாழி...” என்றான்.

சுனையாழி மறுபடியும் அதே கேள்வியைச் சொல்லவும்,

“என்னவாம் இப்படி ஒரு சந்தேகம் என் தங்கச்சிக்கு?” என்றான். அவள் விளையாட்டாகக் கேட்கவில்லை என்பதை உணர்ந்ததும், அவளது முகத்தில் படிந்திருந்த குழப்ப ரேகைகளை உற்றுப் பார்த்தான்.

“இல்ல... இப்பதான் பார்க்கிற ஒரு ஆளை இவ்வளவு அதிகமா வெறுக்க முடியுமா?” என்றாள்.

“யாரை வெறுக்கிற? இதுக்கும் உன்னோட கேள்விக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு?” என்றான் யாழ்வேந்தன் பொறுமையாக.

அவ்வளவு நேரமாகத் தன் மனதில் வசீகரன் மீது தோன்றிய அத்தனை உணர்வுகளையும் சுனையாழி யாழ்வேந்தனிடம் சொல்லி முடித்தாள்.

அந்த அறை முழுவதும் கனமான அமைதி சூழ்ந்தது.

அந்த அமைதியைத் தன் தொண்டையைச் செருமிக் கலைத்த யாழ்வேந்தன்,

“உனக்கு எதுவும் அடிபடல. உனக்கே தெரியுமே... நீ ஒரு டாக்டர்,” என்றான்.

“அந்த ஆள பார்த்ததுல இருந்து நான் நானாவே இல்ல... நானும் குழம்பி, உன்னையும் குழப்பறேன். சரி... நீ படு. நானும் தூங்கறேன். இப்படி முழிச்சிட்டே இருந்தா காலையில நம்மளால லேட் ஆகும்,” என்றவாறே சுனையாழி படுத்துக்கொண்டாள்.

“இந்தக் குட்டிப்பிசாசோட முடியல...” என்றவாறே யாழ்வேந்தனும் தன் படுக்கையில் சரிந்தான்.

ஆனால், சுனையாழியின் மனதில் இப்போது காரணமே இல்லாமல் முகில்வர்மனின் பிம்பம் வந்து நின்றது.

அவன் நினைவு தோன்றிய மாத்திரத்தில், அவ்வளவு நேரமாக அவளது மனதில் இருந்த வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது.

வசீகரன் மீது எழுந்த கட்டுப்படுத்த முடியாத வெறுப்பும், முகில்வர்மன் மீது எழுந்த விடை தெரியாத ஈர்ப்பும், கனவின் புதிர்களும் அவளது மனதை ஒருசேரக் குழப்பி, இறுதியில் அவளை ஆழ்ந்த தூக்கத்திற்குள் தள்ளின.

---

அதே ஹோட்டலின் மற்றொரு தளத்தில் அமைந்திருந்த சூட் அறையில், முகில்வர்மன் படுக்கையில் சாய்ந்திருந்தான்.

அறை விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் வழியே புகுந்த நிலவின் மெல்லிய வெளிச்சம் மட்டுமே அறையை நிரப்பியிருந்தது.

கைகளைத் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு, கூரையைப் பார்த்தபடி படுத்திருந்த முகில்வர்மனின் மனதிற்குள் ஆழமான எண்ணவோட்டங்கள் அலைமோதிக்கொண்டிருந்தன.

‘அவளுக்காகத்தான் என் பிறப்பு...

எனக்கு ஒரு பெண்ணைப் பிடிக்குமா? இப்போவரை என்னை யாரும் அவ்வளவாக ஈர்த்ததில்லை. ஆனால், அந்த ஒருநாள் ட்ரிப்பில் எதிர்பாராமல் சந்தித்த இந்தச் சுனையாழி மட்டும் இன்னமும் என் நினைவில் இருக்கிறாள்...

அதே நேரத்தில், அவளது தாத்தா வைத்திருந்த சுவடியும் அதே அளவுக்கு தன் கவனத்தை ஈர்த்திருந்தது என்பதும் அவனறிந்த உண்மை.

‘இவளைச் சந்தித்த பிறகுதான் இத்தனை நிகழ்வுகளும் நடக்குது... ஒருவேளை அந்தப் பெண்ணே இவள்தானோ?’

என்று நினைத்தபடி இருந்தவனின் நினைவு, இன்றைக்கு இளமாறனின் டிராவல்ஸ் அலுவலகத்தில் சுனையாழியைப் பார்த்த அந்த நொடிக்குச் சென்றது.

முகில்வர்மனின் இதயத்தில் ஒரு மாபெரும் அதிர்வு ஏற்பட்டது.

அமைதியாக இருந்த அவனது ஆன்மா சட்டென்று விழித்துக்கொண்டது போன்ற ஒரு பிரமை!

அவளது பார்வையில் தெரிந்த அந்தத் தயக்கமும், அவளது குரலில் இருந்த அந்த மெல்லிய நடுக்கமும் அவனது நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றன.

‘நாளைக்குக் காட்டுக்குள்ள போகும்போது இவளைப் பற்றின உண்மைகளும், என் மனசுல இருக்கிற இந்தக் கேள்விகளுக்கான விடைகளும் எனக்குக் கிடைக்குமா?

எதுவாக இருந்தாலும் சரி... அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாப்பதே என் முதல் கடமை!’

என்று மனதிற்குள் உறுதிபூண்டான் முகில்வர்மன்.

---

இப்படி ஒருபுறம் சுனையாழி வசீகரன் மீதான வெறுப்பிலும், முகில்வர்மன் மீதான குழப்பத்திலும் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க...

மறுபுறம் முகில்வர்மன் தன் பிறப்பின் நோக்கத்தையும், சுனையாழியைப் பற்றியும் சிந்தித்தபடி மெல்லக் கண்ணயர்ந்தான்.

சுனையாழியின் பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த யாழ்வேந்தனும், தங்கையின் மனக்குழப்பத்தைப் பற்றி சிந்தித்தபடி,

“நாளைக்கு நேர்ல எதுவந்தாலும் பார்த்துக்கலாம்...” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தூங்கிப்போனான்.

வசீகரனும் தன் திட்டங்களை வகுத்தபடி, விடியலை எதிர்நோக்கித் தூங்கிப்போனான்.

இந்த எந்தக் கவலையும், குழப்பமும், மனப்பாரமும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த ஒரே ஆள் இளமாறன் மட்டுமே!

தன் சொந்த வீட்டில் படுத்திருந்த இளமாறனுக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை.

சுவடிப் பெட்டியைப் பத்திரமாக ஒப்படைப்பதைப் பற்றியும், நாளை அந்த அடர்ந்த காட்டுக்குச் செல்லவிருக்கும் நால்வரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அருவியைக் காட்டுவதைப் பற்றியும் மட்டுமே அவன் யோசித்திருந்தான்.

அந்த நால்வருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் புதிரான கதைகளோ, ரகசியங்களோ அவனுக்குத் தெரியாது.

தன் டிராவல்ஸ் தொழில் எந்தத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்ற திருப்தியோடு அவன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

நாளை புலரப்போகும் புதிய நாள் இந்த மனிதர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது?

விதியின் காய்கள் எவ்வாறு நகரப் போகின்றன என்பதை அறியாமல், அந்த இரவு அமைதியாகக் கடந்து கொண்டிருந்தது...

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya