• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 22

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 22

கடைசிச் சுவட்டின் முதல் திறப்பு!

உயரமான பாறையின் உச்சியிலிருந்து வெள்ளியைப் போல வழிந்தோடிய நீர், கீழே இருந்த அகன்ற பாறைகளின் மீது மோதி, சிதறிய நீர்த்துளிகளோடு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அருவியின் ஓசை வெகு தொலைவு வரை கேட்டது.

அதைச் சுற்றிலும் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் வானத்தையே மறைத்திருந்தன. சில மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, இயற்கையான கூரையைப் போல காட்சியளித்தன.

காற்று வீசும் ஒவ்வொரு முறையும் அவற்றின் இலைகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் சத்தம், அருவியின் ஓசையோடு கலந்து ஒரு விதமான இசையை உருவாக்கியது.

மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கின.

செந்நிறம்...

மஞ்சள்...

வெள்ளை...

ஊதா...

எத்தனை நிறங்கள்!

சில பூக்கள் கிளைகளிலேயே இருந்தன.

சில காற்றில் உதிர்ந்து, அருவியின் நீரோட்டத்தில் மிதந்து சென்றன.

நீரின் மேல் மிதந்து சென்ற அந்த மலர்களைப் பார்த்தால், இயற்கையே அந்த அருவிக்குப் பூமாலை சூட்டுவது போலத் தோன்றியது.

அருவிக்குக் கீழே நீர் தேங்கியிருந்த அகன்ற பகுதி, மக்கள் பயன்பாட்டில் இருந்தது.

அதன் கரையோரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சில இடங்களில் மரத்தாலான சிறிய கூடைகள் கிடந்தன.

சிலர் இலைகள், கொடிகள், சில மரங்களின் பட்டைகள் என அவர்களுக்கு என்ன தேவையோ, அதை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த இடம் வெறும் காடு மாதிரி தெரியவில்லை.

இது மலைவாழ் மக்களின் இருப்பிடம் போல இருக்கிறதே!

மனிதர்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்த ஒரு இயற்கை உலகமாக அது காட்சியளித்தது.

வைத்தியர்கள் மூலிகைகளைத் தேடி வரும் இடமாகவும்...

பயணிகள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகவும்...

காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும் மனிதர்களின் தாகத்தைத் தீர்த்துச் செல்லும் இடமாகவும்...

மக்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே அந்த இடம் இருந்தது.

அந்த இடத்தின் அழகை ரசிப்பதற்காகவே காலம் சில நொடிகள் அங்கே நின்றுவிட்டது போலிருந்தது.

“அட... நாம போன முறை வந்தபோது இந்த இடம் இப்படி இல்லையே...” என்று யோசித்தபடியே அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவனின் கண்ணில் அவன் பட்டான்.

அருவியின் கரையில் நின்றிருந்தான்.

யார்ரா இவன்...?

என்ன ட்ரெஸ் இது...?

அப்போதுதான் அவனுக்கு அந்தச் சூழல் விளங்கியது.

“இது என்ன... எல்லோரும் இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்காங்க?”

அவன் அணிந்திருந்த உடை இந்தக் காலத்தைச் சேர்ந்ததல்ல.

நீண்ட துணி இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது.

தோளில் ஒரு நீண்ட துணி விழுந்திருந்தது.

அவனுடைய கழுத்திலும் கைகளிலும் பழங்காலத்தைச் சேர்ந்த சில அணிகலன்கள் இருந்தன.

“அட... கையில, கழுத்துல, காதுலன்னு தங்கமா ஜொலிக்குது! இப்ப தங்கம் விக்கிற விலைக்கு... அடேய் மாறா, நீ அவன் போட்டிருக்கிறதெல்லாம் தங்கம்னே முடிவு பண்ணிட்டியா? எந்த நாடகக் கம்பெனின்னு தெரியலையே!”

என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் இவன் நின்றிருந்த பக்கம் திரும்பினான்.

அதே நேரம் மாறன் தன்னுடைய உடையைப் பார்த்தான்.

மீண்டும் அருவிக்கரையைப் பார்க்க, அங்கே நின்றிருந்தவன் இப்போது இவனைப் பார்த்தபடி நிற்க...

“அட! இவனை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு... எங்கே... எங்கேன்னு...”

என்று அவன் நினைவடுக்குகளில் தேட...

பளிச்சென்று மின்னி மறைந்தது அவன் முகம்.

“இவன் என்னைப் போலவே இருக்கான்...”

ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை அவனுக்கு.

மறுபடி கண்களைச் சசக்கிவிட்டு அவனைப் பார்க்க, நிச்சயம் அவன் தன்னைப் போலவேதான் இருக்கிறான் என்று எண்ணியபடியே அவனை கவனித்தான்.

அவன் அந்த இடத்திற்குச் சொந்தமானவன் போல இருந்தான்.

அந்தப் பாதைகளை அறிந்தவன் போலவும் இருந்தான்.

அவன் மெதுவாக அருவிக்கரையில் நடந்தான்.

ஒரு இடத்தில் நின்றான்.

அங்கிருந்து வலதுபுறம் பார்த்தான்.

பிறகு இடதுபுறம் பார்த்தான்.

அவனுடைய பார்வையில் ஒரு தேடல் இருந்தது.

“யாரையோ தேடுறான் போலவே...”

என்று அவனைப் போலவே இவனும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது வேலைக்கு ஆகாது...

அவனிடமே போய் அவன் யாருன்னு கேட்க வேண்டியதுதான்.”

என நினைத்து ஓடி, அவன் ஒரு எட்டு எடுத்து வைக்க...

அவனுடைய கண்களில் தெரிந்த கவலையில் இவன் துணுக்குற்றான்.

“எதுக்காம் இவ்வளவு கவலையைக் கண்ணுல வெச்சுட்டு திரியறான்?”

என்று புரிந்துகொள்ள முயன்றவனின் நெற்றியில் சுருக்கம் விழுந்தது.

கூடவே, அவன் கண்கள் அந்த இடத்தையும் சுற்றிலும் பார்த்தன.

அருவி.

மரங்கள்.

மலர்கள்.

நீர்.

எல்லாமே அவனுக்குப் புதிதாகத் தோன்றின.

ஆனால் அதே நேரத்தில்...

“இந்த இடம்தானே நாம வந்தது?

ஆனா இப்போ இந்த இடத்தை முதன்முறையாகப் பார்ப்பது போல இருக்கே...”

ஆனால் அவனுடைய கால்கள் அந்த இடத்தை ஏற்கனவே அறிந்திருந்தது போல இயங்கின.

அவன் யோசிக்காமல் ஒரு குறுகிய பாதையில் திரும்பினான்.

அந்தப் பாதை அருவியின் பின்புறம் சென்றது.

அவன் நடந்தான்.

சில அடிகள் சென்றவன் பட்டென நின்றான்.

அவன் மனதில் மீண்டும் அதே கேள்வி எழுந்தது.

“அவன் யாரையோ தேடுறான்...

இப்ப நான் என்னத்துக்கு இங்க வந்தேன்?

அதுவும் அன்னைக்கு இந்த இடத்துக்கெல்லாம் வரலையே நான்...

எனக்கு எப்படி இங்க பாதை இருக்கிறது தெரிஞ்சது?

நான் இங்க நின்னு யாரைத் தேடுறேன்?”

அவனுக்குள் அந்தக் கேள்வி தோன்றிய உடனே திரும்பி நடந்தவனின் நாசியில் ஒரு மென்மையான வாசனை அவனுடைய மூச்சுக்குள் நுழைந்தது.

மூலிகையின் வாசனை.

அவனுடைய புருவங்கள் சுருங்கின.

அந்த வாசனையை அவன் அறிந்தவன் போல இருந்தது.

எங்கே?

எப்போது?

யாரிடமிருந்து?

எதுவும் நினைவுக்கு வரவில்லை.

ஆனால் அந்த வாசனை அவனுடைய உள்ளத்தின் ஏதோ ஒரு மூடிய அறையைத் திறக்க முயன்றது.

அந்த நேரம், கால்களை எட்டிப் போட்டு அவனைப் போலவே இருந்தவனைத் தொட முயன்றவன்...

ஏதோ பள்ளத்தாக்கில் கால் இடறி விழ முயன்றது போல, அவன் கண்களைத் திறந்தான்.

அலங்கமலங்க விழித்தான்.

அவன் அறையில் கட்டிலில் இருந்து உருண்டு தரையில் விழுந்து கிடந்தான்.

அவனுக்கு அந்த நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

“இவ்வளவு நேரம் காட்டுலதான இருந்தோம்... இப்ப எப்படி என் ரூம்ல இருக்கேன்?”

என்று கண்களைக் கசக்கிவிட்டபடி ரூமைச் சுற்றிப் பார்த்தான்.

கடிகாரத்தில் மணி இரவு இரண்டைக் கடந்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்தவனின் மனதில்,

“இவ்வளவு நேரமா கனவு கண்டிருந்தோமா?”

என்ற எண்ணம் தோன்றியது.

நிஜமாகவே அது கனவுதானா?

அந்தக் கனவு அவனுடைய உள்ளத்தை ஏதோ ஒரு விதமாகத் தொட்டிருந்தது.

காரணம் அவனுக்குத் தெரியவில்லை.

“இப்படி கனவு வர அளவுக்கு நல்லா தூங்கி இருக்கோம் போலவே...”

“இன்னைக்கு டிரைவர் ஒரு ஆள் வராததால நாம கார் எடுக்கப் போய் இவ்வளவு டயர்ட் ஆகி தூங்கி இருக்கோம் போல...”

“கனவுன்னாலும் ஒரு நியாயம் வேணாமா...?”

“என்னையே ஏதோ ஹிஸ்ட்ரி படத்துல நடிகர, நடிகருங்க போட்டு இருக்கிற காஸ்டியூம்ல கனவு கண்டு இருக்கேன்...”

“அதுவும் அந்தக் காட்டுக்குள்ள... அந்த அருவி பக்கத்துல... யாரையோ தேடிட்டு இருக்கிற மாதிரி... ஆனா யாரையும் கண்டுபிடிக்கல... அதுக்குள்ளதான் மெத்தையில இருந்து கீழ விழுந்துட்டேன்...”

இனிமேல் எங்கிருந்து தூங்குவது என்று நினைத்தவனின் மனதில்...

ஏதோ ஒன்று திறந்துவிட்டதையும்...

அது அவனுக்கு நினைவில் இல்லாமலும் போனது.

பல காலமாக மூடிக் கிடந்த ஒரு பாதையில் முதல் சுவடு பதித்திருந்தான் என்பதும் அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அந்த இரவின் அமைதிக்குள் மீண்டும் தூங்க முயன்றபடி இருந்தான்.

---

அதே நேரத்தில்...

சுனையாழி தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

“இந்த வேந்தன் என்னவோ சொல்ல வந்தானே...”

“முகில்வர்மன்னு சொல்லி அவர்கிட்ட பேசினதா... அவன் ஆரம்பிக்கும் போதே அம்மா சத்தம்போட... அவன் சொல்ல வந்ததை சொல்லாமல் போனது...”

என்று அடுத்தடுத்து நினைவுக்கு வர, தூக்கத்திலிருந்து அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

“இந்த அண்ணன் முகில்வர்மன்கிட்ட என்ன வேணா பேசி இருக்கட்டுமே...

ஆனா எனக்கு ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கு?

என்ன பேசி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க... அதுவும் தூக்கம் கெடற அளவுக்கு...”

என்று நினைத்தபடியே மீண்டும் படுத்து, தூங்க முயன்று கொண்டிருந்தாள்.

மாறனும் சுனையாழியும் தூக்கம் கலைந்து புலம்பிக் கொண்டிருக்க...

ஒருத்தன் தூக்கத்தையே மறந்து தேடிக் கொண்டிருக்க...

மற்றொருவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya