• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 18

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 18

முகில்வர்மனின் பிறப்பு!

அடுத்த நாள் காலை...

வீரசேகரனின் வீடு வழக்கமான காலைப் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வேலைகளில் இருந்தாலும், அமுதவல்லியின் கவனம் மட்டும் அன்று வேறு விஷயத்தில் இருந்தது.

முந்தைய நாள் குடும்ப ஜோசியருக்கு அவர் தொலைபேசியில் அழைத்து, நேரமிருந்தால் வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தார். அவரும் இன்று வருவதாகச் சொல்லியிருக்கவே, அமுதவல்லியின் கவனம் ஜோசியரிடமே இருந்தது.

வீரசேகரனின் குடும்பத்திற்கு பல தலைமுறைகளாக ஜாதகம் பார்த்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அந்தப் பழக்கம் அவருடைய தந்தையிடமிருந்து, அதற்கு முன் அவருடைய தந்தையிடமிருந்து என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முகில்வர்மன் பிறந்தபோது அவர்தான் அவனுடைய ஜாதகத்தைக் கணித்து எழுதியவர்.

அதுமட்டுமல்ல...

அவனுக்கு ‘முகில்வர்மன்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததும் அவர்தான்.

அன்று காலை அமுதவல்லி ஏற்கனவே பழைய ஜாதகத்தை எடுத்துத் தயாராக வைத்திருந்தார்.

“இன்னைக்கு ஜோசியர் வராரா?” என்று வீரசேகரன் கேட்கவும்,

“நான் நைட்டே உங்களுக்கு தகவல் சொன்னதா ஞாபகம்.”

“முகிலுக்கு ஜாதகம் பார்க்கத்தானே?”

“அவனுக்கு பார்க்காம உங்களுக்கா பார்க்க வரச் சொல்லப் போறேன்?” என்றார் நக்கலாக.

“காலையிலேயே நல்ல ஃபார்ம்லதான் இருக்கீங்க போலவே மேடம்.”

“இப்போதான் உங்களுக்கு இது தெரியுதா?” என்று அமுதவல்லி அவரைப் பார்த்தார்.

வீரசேகரனுக்கு அந்தப் பேச்சு எதனால் என்பது புரிந்துபோனது.

“அது... அது... அமுதா! நீ சொல்லியே கேட்காதவன், நான் சொன்னா மட்டும் கேட்கவா போறான்னுதான்...” என்றார் அவர் இழுவையாக.

அமுதவல்லி முகிலின் ஜாதகத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

“முகிலுக்கு இப்போ வயசு என்னன்னு உங்களுக்கே தெரியும். இருபத்தைந்து வயசுல இருந்து நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். அவனுக்குப் பொண்ணு பார்க்கலாம்னு. அவன் ஒவ்வொரு தடவையும் ஒரே பதில்.”

“வேணாம்.”

“ஆமாம். அதுதான்.”

அமுதவல்லியின் குரலில் எரிச்சலைவிட ஆதங்கமும் சலிப்பும் விரவிக் கிடந்தது.

ஒரே மகன் இப்போவரை திருமணத்தைத் தள்ளித் தள்ளிப் போட, இந்த முறை ஜாதகத்தையும் கையில் எடுத்துவிட்டார் அவர்.

“இப்பவும் கேட்டா அதேதான் சொல்லுவான்.”

வீரசேகரன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் வீட்டின் வாசலில் ஜோசியரின் கார் வந்து நின்றது.

அவர் உள்ளே வந்ததும் வழக்கமான விசாரிப்புகள் முடிந்தன.

“எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கோம். வாங்க.”

சில நிமிடங்கள் குடும்ப விஷயங்கள் பேசப்பட்ட பிறகு, ஜோசியர் அமுதவல்லியைப் பார்த்தார்.

“சொல்லுங்கம்மா... எதுக்காக என்னை வரச் சொன்னீங்க?”

“முகிலோட ஜாதகம் பார்க்கணும்.” என்றபடி அமுதவல்லி அந்தப் பழைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்தவுடனே அவர் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.

“எழுதினதுக்குப் பிறகு இப்போதான் மறுபடியும் என் கைக்கு வருது...” என்றவாறே, அவர் ஜாதகத்தைப் பார்த்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

முகில்வர்மன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவரும் அவர்தான்.

அவர் ஜாதகத்தைத் திருப்பிப் பார்த்தார்.

“உங்க குடும்பத்துல எல்லாருடைய பெயரும் ஒரு மாதிரியான வரிசையில்தான் வந்தது. தனசேகரன், குணசேகரன், ராஜசேகரன், வீரசேகரன்...” என்றபடியே, அவர் முகில்வர்மன் என்ற பெயரைப் பார்த்தார்.

“ஆனா இந்த ஜாதகப்படி அவனுடைய நட்சத்திரம், ராசி எல்லாத்தையும் பார்த்துத்தான் உங்கள் வழக்கப்படி எந்தப் பெயரும் பொருந்தாமல் போகவே, முகில்வர்மன் சொன்னேன்.”

“அந்தப் பெயர் வச்சதில இருந்து இப்போ வரைக்கும் அவன் நல்லாத்தானே இருக்கான்.”

“அதுல சந்தேகமே இல்ல.”

ஜாதகத்தை மீண்டும் கவனமாகப் பார்வையிட்டார்.

அமுதவல்லி விஷயத்திற்கு வந்தார்.

“அவனுக்கு கல்யாண யோகம் வந்திருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க ஜோசியரே.”

“கல்யாண யோகம்... ம்ம்...”

“ஆமாம். நான் இருபத்தைந்து வயசுல இருந்தே சொல்லிக்கிட்டே இருக்கேன். அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்துடலாம்னு. அவன் கேக்கவே மாட்டேங்கிறான்.”

அந்த நேரத்தில் அங்கே வந்த முகில்வர்மன், கடைசி வார்த்தையை மட்டும் கேட்டான்.

“என்னம்மா?”

“ஒண்ணுமில்லை. உன்னோட கல்யாணத்தைப் பற்றித்தான் பேசிட்டு இருக்கோம்.”

“அதெல்லாம் இப்போ எதுக்கு?” என்றவனைப் பார்த்து,

“இப்போ எதுக்குன்னா எதுக்கு பார்ப்பாங்க? கல்யாணம் பண்ணத்தான். இப்போ கல்யாணம் பண்ணாம அறுபது வயசுல ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம் பண்ணிப்பியா என்ன?” என்றார் கிண்டலாக.

வீரசேகரனும் ஜோசியரும் அமுதவல்லியின் பேச்சில் சிரித்துவிட,

முகில் வீரசேகரனை முறைத்தான்.

ஜோசியர் சிரித்த முகமாகவே,

“உட்காருப்பா,” என்றார் தன் அருகே இருந்த இடத்தைத் தட்டி.

முகில் பதில் சொல்லாமல் அங்கே அமர்ந்தான்.

ஜோசியர் அவனைப் பார்த்தார்.

“நீ இன்னும் இதைப் பற்றி யோசிக்கலையா?”

“இல்லை.”

“உங்க அம்மா சொல்ற மாதிரி பொண்ணு பார்க்க ஆரம்பிக்கணும்னு தோணலையா?”

“வேண்டாம். இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம்.”

அமுதவல்லி உடனே,

“பார்த்தீங்களா? இதுதான் நான் எப்ப கேட்டாலும் அவன் சொல்லுற பதிலா இருக்கு,” என்றார்.

ஜோசியர் எதுவும் சொல்லாமல் மீண்டும் ஜாதகத்தைப் பார்த்தார்.

சில கணக்குகளைப் பார்த்தவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.

“அம்மா... ஒரு விஷயம்... உங்க பையனுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்துக் கல்யாணம் நடக்காது... மனப்பொருத்தத்தில்தான் கல்யாணம் நடக்கும்,” என்றார் யோசனையோடு.

“என்ன?”

அமுதவல்லியும் வீரசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முகில்வர்மன் மட்டும் அமைதியாக இருந்தான்.

“அப்படின்னா?”

“இந்த ஜாதகப்படி தன்னோட வாழ்க்கைத் துணையை அவனேதான் தேர்ந்தெடுப்பான்.”

அமுதவல்லி உடனே கேட்டார்.

“அவன் விருப்பப்பட்டு யாரையாவது தேர்ந்தெடுப்பானா?”

“அதையும் தாண்டி.”

ஜோசியர் ஜாதகத்தில் ஒரு இடத்தை அவரிடம் சுட்டிக்காட்டினார்.

“இந்தக் கட்டத்தைப் பொறுத்தவரை... அந்தப் பொண்ணுக்காகத்தான் உங்க பையன் பிறப்பு.”

சட்டென முகில்வர்மன் ஜோசியரைப் பார்த்தான்.

அமுதவல்லியும் அப்படியே அவரைப் பார்த்தார்.

“ஏன் இந்தப் பார்வை? அதுதான் நிஜம்,” என்றவரைப் பார்த்து,

“பெண் யாருன்னு இப்போ உங்களால சொல்ல முடியுமா?” என்று வீரசேகரன் கேட்டார்.

“நான் வெத்தலையில மை தடவிப் பார்க்கல, வீரா சார்...” என்ற ஜோசியர், சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்.

“இப்ப உங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தக் குடும்பத்துல பல தலைமுறைகளா தொடர்ந்துகிட்டு வர்ற ஒரு விஷயம், முகில்வர்மனோட தலைமுறையிலிருந்து மாறப் போகுது.”

வீரசேகரனின் முகம் சற்றே மாறியது.

“இந்தக் குடும்பத்துல ஒரே ஒரு ஆண் குழந்தைதானே பிறக்குது... பல தலைமுறைகளா அது மாறும்னு சொல்றீங்களா?” என்றார் அமுதவல்லி குறுக்கிட்டு.

“ஆமாம்.”

அது இந்தக் குடும்பத்துக்கே தெரிந்த விஷயம்.

பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்த ஒன்று.

ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரே ஒரு ஆண் குழந்தை.

பெண் குழந்தை பிறக்காத அந்த நிலை, அந்தக் குடும்பத்தின் வரலாற்றோடு ஒன்றாகவே பயணித்து வந்திருந்தது.

“கிட்டத்தட்ட ஏழு, எட்டு தலைமுறையா இதே நிலைதான்,” என்றார் வீரசேகரன்.

“முகில்வர்மனுக்குப் பிறகு அந்த நிலை மாறும்,” என்றார் ஜோசியர்.

அமுதவல்லி மெதுவாகக் கேட்டார்.

“எப்படி?”

“அவன் திருமணம் செய்யப் போகிற அந்தப் பெண்ணின் மூலம்தான்.”

அவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

“பெண் மூலமாவா?”

“ஆமாம். இந்தக் குடும்பத்துக்கு பல தலைமுறைகளுக்குப் பிறகு முதல் பெண் குழந்தை வருவதற்கான வாய்ப்பு அவள் மூலம்தான் உருவாகும்.”

அந்த வார்த்தைகள் வீட்டுக்குள் ஒரு நிமிட அமைதியை ஏற்படுத்தின.

“அதாவது...” வீரசேகரன் மெதுவாகக் கேட்டார்.

“முகில்வர்மனுக்குப் பிறகு பிறக்கிற தலைமுறையில்தான் இந்தக் குடும்பத்தின் பழைய நிலை உடையும். வரப்போற அந்தப் பெண் இந்தக் குடும்பத்துக்கான புதிய தொடக்கம்.”

முகில்வர்மன் இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன்,

“நீங்க சொல்லறபடி இப்போவரை எந்தப் பொண்ணையும் நான் சந்திக்கல...” என்றான்.

ஜோசியர் அவனை நேராகப் பார்த்தார்.

“இல்லை. நீ பார்த்திருக்கலாம்... இல்லையா இனிமேல் சந்திக்கலாம்.”

“எப்படி?”

“வாழ்க்கை உன்னை அவளிடம் கொண்டு போகும்.”

முகில்வர்மன் அதற்கு எதுவும் சொல்லவில்லை.

ஜோசியர் மீண்டும் ஜாதகத்தைப் பார்த்தார்.

“மேலும் ஒரு விஷயம் இருக்கு.”

அனைவருடைய கவனமும் அவர்மீது சென்றது.

“இப்போ உனக்கு திருமண யோகம் நெருங்கி இருக்கு. இந்த வருடம் முடியுறதுக்குள்ளேயே உன் வாழ்க்கையில அந்தச் சந்திப்பு வர வாய்ப்பு இருக்கு.”

அமுதவல்லியின் முகத்தில் இருந்த கவலை மெல்ல குறைந்தது.

“அப்படின்னா நாங்க எதுவும் செய்ய வேண்டாமா?”

“ஒரே ஒரு விஷயம் செய்யணும்.”

“என்ன?”

“அவன் தேர்ந்தெடுத்து உங்க முன்னாடி நிறுத்துற பெண்ணை... அவன் வாழ்க்கையிலிருந்து தள்ளாம, அவளைக் குடும்பத்துக்குள் வரவேற்கணும்.”

அந்த வார்த்தைகள் அமுதவல்லியின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

முகில்வர்மனோ,

‘காதலா? நானா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருந்தான்.

---

அதே நேரத்தில்...

இளமாறன் தூக்கத்தில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.

அம்மா முந்தைய நாள் சொன்ன ஒரு விஷயம் அவனுடைய கனவில் திடீரென்று வந்தது.

“நீ போன வருஷம் எங்கேயோ கிடைச்சதுன்னு எடுத்துட்டு வந்த ஓலைச்சுவடி... உன் ரூம்ல மேல சிலாப்புல கிடக்கு.”

அந்த வார்த்தைகள் கனவாக வந்ததும்,

‘சிலாப்புல கிடக்குதா?’ என்றவாறே எழுந்தவன், சிலாப்பில் கிடந்த பொருட்களை ஒதுக்கிப் பார்த்தான்.

மேலே இருந்த பழைய பொருட்களுக்கிடையில், தூசி படிந்த நிலையில் அந்த ஓலைச்சுவடி இருந்தது.

“இதைத்தானே அம்மா சொன்னாங்க...”

அதை எடுத்துப் பார்த்தான்.

போன வருடம் எங்கே கிடைத்தது என்பதுகூட அவனுக்கு சரியாக நினைவில்லை.

அவன் அதை கவனமாக எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

சில நொடிகள் யோசித்தவன், அதைத் துடைத்து சுனையாழியின் ஓலைச்சுவடிப் பெட்டியோடு சேர்த்து வைத்தான்.

“இத வெச்சு நான் என்ன பண்ணப் போறேன்... டாக்டர்கிட்ட குடுத்தா என்னன்னு பார்த்துக்கப் போறாங்க. தேவைன்னா எடுத்துக்கட்டும். இல்லன்னா இதுகூடவே அவங்க சும்மா வெச்சுக்கட்டும்,” என்று சொல்லியபடியே இருந்தான்.

அதே நேரம்,

“என்ன சொல்லற? யாழி தாத்தாவோட சுவடிப் பெட்டியைப் போன இடத்துல விட்டுட்டு வந்துட்டீயா?” என்றான் யாழ்வேந்தன்.

சுனையாழியின் அண்ணன்.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya