• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 14

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 14

உள்ளுணர்வு!

அந்தப் பரபரப்பான காலை வேளையில், வழக்கமான சலசலப்புகளோடு விடிந்திருந்தது அந்த நாள். மாறனின் டிராவல்ஸ் அலுவலகத்தின் முன், தெருவின் தூசியையும் கடந்து பளபளத்தபடி ஒரு மெர்சிடீஸ் பென்ஸ் கார் வந்து கம்பீரமாக நின்றது.

வழக்கம்போல மாறன் தன் அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், காரின் கதவு அடைபடும் மெல்லிய சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

“கார் வந்த சத்தமே கேட்கல… டோர் திறந்து மூடுற சத்தம் கேட்குது…”

தனக்குத்தானே முணுமுணுத்தபடி நிமிர்ந்தவன், வாசலில் நின்றிருந்த வெளிநாட்டு காரைப் பார்த்து மறுபடியும் ஆச்சரியப்பட்டான்.

கண்கள் திகைப்பில் விரிந்தன. கதவு திறந்து உள்ளிருந்து இறங்கியவனைப் பார்த்ததும் அவன் முகமெல்லாம் புன்னகை விரிந்தது.

“முகில்வர்மன் சார்!”

நேற்று அடர்ந்த காட்டுப் பாதையில் அழுக்கு படிந்த ட்ரெக்கிங் சூட், தோளில் தொங்கிய சாதாரண பையோடு பார்த்த அதே முகில்வர்மனுக்கும், இன்றைய மனிதனுக்கும் ஆறு என்ன… பன்னிரண்டு வித்தியாசங்களையே கண்டுபிடிக்கலாம் போலிருந்தது.

ஓஷன் டார்க் ப்ளூ பேண்ட்… ஆர்மாணி வெள்ளைச் சட்டை… பக்கா புரொஃபஷனல் லுக்!

இப்படி ஒரு முகில்வர்மனை அவன் எதிர்பார்த்தானா என்ன?

முதலில் அவன் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்ற கேள்வியே இருந்தாலும், முகில்வர்மனின் தோற்றமும், ஆளுமையும், கம்பீரமும் மாறனை ஒரு நொடி அசையவிடாமல் உறைய வைத்தது.

மாறனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தபடியே, தன் கம்பீரமான நடையோடு அலுவலகத்திற்குள் அடியெடுத்து வைத்தான்.

மாறன் திகைப்பிலிருந்து மீளாமல் அவனையே பார்த்தபடி இருக்க,

“மாறன்…”

என்று அவன் முகத்திற்கு முன்னால் கைகளை அசைத்தான்.

“முகில் சார்… நீங்களா?”

என்று திக்கித் திணறியபடி இழுத்தான்.

“என்ன மாறன்? ஏன் இவ்வளவு ஷாக்? ஏன் உங்க குரல் இவ்வளவு திக்குது? நேத்து நீங்க எனக்கு கார் வாடகைக்கு கொடுத்தீங்க, ஞாபகம் இருக்கா?”

என்றான் சின்னச் சிரிப்போடு.

“சார், சும்மா கலாய்க்காதீங்க. உங்களை ஞாபகம் இல்லாம இல்ல… ஆனா இப்படி ஒரு லுக்குல உங்களை எதிர்பார்க்கல. உங்க காரையும் சேர்த்துத்தான்…”

அவன் திகைப்புக்கான காரணம் புரிந்தது முகிலுக்கு.

முகில்வர்மன் சிரிப்பினூடே,

“மாறன், உங்களுக்கு என் பெயர் தெரியுமே?”

என்றான்.

“ம்… சார், முகில்வர்மன்.”

என்றான் அவனும்.

“‘முகில் டெக் சொல்யூஷன்ஸ்’ என்னோடதுதான். ஹெட் ஆபிஸ் மும்பையில்… சென்னை, பெங்களூர்ல பிராஞ்ச்கள் இருக்கு.”

என்றான் முகில்வர்மன்.

“என்ன? முகில் டெக்கோட ஓனரா? என் தம்பி வேலை செய்யறது உங்க ஐடி கம்பெனியிலதான்!”

என்றான் அதிர்ச்சியோடு எழுந்து நின்றபடி.

“ஓ! உங்க தம்பி ஐடி ஃபீல்டா? நைஸ்.”

“என்ன சார், இவ்வளவு சாதாரணமா சொல்லறீங்க?”

“வேற எப்படி சொல்லணும், மாறன்?”

என்றவன் உடனே,

“மாறன், நான் இங்க வந்தது என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கவோ, உங்க தம்பியைப் பற்றி பேசவோ இல்ல. இதைக் கொஞ்சம் பாருங்க.”

என்று கைபேசியைக் காட்டினான்.

“என்ன சார்?”

என்றவாறே அவன் கைபேசியை வாங்கிப் பார்த்தவன் மறுபடியும் ஆச்சரியத்தில் விழி விரித்தான்.

“சார்…”

என்றான் கேள்வியாக.

“மாறன், நாம சுனையாழியை விட்டுட்டு திரும்பும்போது உங்கிட்ட ஒரு காரைப் பார்த்தேன்னு சொன்னேனே… அது இதுதான்.”

என்றான்.

“நேத்து நான் இந்த காரைப் பார்க்கலைங்க சார். ஆனா இந்த காரை நான் பார்த்திருக்கேன்.”

என்றவனைப் பார்த்து,

“எப்போ? எங்க பார்த்தீங்கன்னு ஞாபகம் இருக்கா, மாறன்?”

என்றான் முகில் ஆர்வமாக.

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு சார். போன வருஷம் ஒரு நாலு–அஞ்சு பசங்க ட்ரெக்கிங் போலாம்னு வந்தாங்க. அப்போ அவங்களை அங்க ட்ராப் செய்யும்போது இந்த காரை வச்சுட்டு ஒருத்தன் அங்க இருந்தான் சார். இந்த போட்டோல இருக்கிற ஆள் இல்லை… நான் பார்த்தது வேற ஆள்.”

என்றான் கூடுதல் தகவலாக.

“ஓ…” என்றவனின் எண்ணமெல்லாம் ஓடத் தொடங்கியது.

நேத்து நாள் முழுவதும் நாம காட்டுக்குள்ள இருந்தோம்… இவன் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு. பார்த்திருந்தா ஏன் தன்னை வெளிப்படுத்திக்கல?
“எனிதிங் ராங்?”என்று முகில் எண்ணமிடும்போதே மாறனின் குரல் அவனது எண்ணத்தை கலைத்தது.

“என்னங்க சார், இவ்வளவு யோசனை? ஏதாவது பிராப்ளமா?”

“இல்ல மாறன். நாம நாள் முழுக்க காட்டுலதான் இருந்தோம். நாம போகும் போதே இந்த கார் அங்கதான் இருந்தது. அந்த டாக்டர் கத்துன கத்து நமக்கே கேட்டுச்சு. அந்த காருக்கு பக்கத்துல இருந்த ஆள் காட்டுக்குள்ள இருந்திருந்தா, அவருக்கும் கேட்டிருக்கும் தானே? என்ன சத்தம்னு தேடி இருந்தாலும் நம்மளை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு.”

என்றவனைப் பார்த்த மாறன்,

“சார்… என்ன சொல்ல வர்றீங்க? நம்மளை இவர் ஃபாலோ பண்ணினாருன்னா?”

“தெரியல, மாறன்…”

என்றான்.

“சார்…”

“என்னவோ இருக்கு மாறன். இவரைப் பார்த்த ஞாபகம் இருக்கு. ஆனா எங்கனு டக்குன்னு ஞாபகம் வரல. பேருகூட வசீகரன்னு சொன்னார். ‘நைஸ் கார்’ன்னு பேச்சுக் கொடுத்தப்போ…”

என்றவனைப் பார்த்து,

“என்ன சார் சொல்லறீங்க? பார்த்துப் பேசியிருக்கீங்களா? எங்க? எப்போ?”

என்றான் அதிர்ச்சியாக.

“நான் தங்கி இருந்த ஹோட்டல்லதான் இவரும் தங்கி இருந்தார் போல. நான் காரைப் பார்த்து யோசிச்சுட்டு இருக்கும்போது இவர் வந்தார். அப்போ பேச்சு காரைப் பத்தி போச்சு.”

என்றான் காலையில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே…

“சார்…”

என்று உள்ளே வந்தான் மாறனின் டிராவல்ஸ் டிரைவரான சுரேஷ்.

“என்ன சுரேஷ்?”

என்றவனிடம்,

“சார், நேத்து நீங்க எடுத்துட்டு போன கார்ல ஒரு பை இருந்துச்சுங்க…”

என்றவனின் பேச்சை இடைவெட்டியது…

மாறனின் கைபேசி ரிங்டோன்.

தொடரும்…
 
Back
Top
Developed and maintained by – Akeshya