“நீங்க தான் பதில் சொல்ல சொன்னீங்க.. சொன்னேன்.. பொத்தம் பொதுவா கேள்வி கேட்டா, இப்படி தான் பதில் சொல்ல முடியும்.”
“பெரியவகனுட்டு கொஞ்சமாச்சு மரியாத இருக்கா?”
“இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க? பதில் சொல்லனுமா சொல்ல கூடாதா?”
“மரியாதையா சொல்லுடி”
“நீங்க தரம் இல்லாம சிறுக்கினு சொல்லியும், மரியாதை இல்லாம டி போட்டு பேசியும், நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து அமைதியா தான் பேசிட்டு இருக்கிறேன்.. நான் நல்ல பண்புடன் தான் வளர்ந்து இருக்கிறேன்.”
“அப்ப எனக்கு நல்ல பண்பு இல்லனுட்டு சொல்லுதியா?” என்று கத்தியவர், “பாத்தியாணே… நீயி தேடிப் புடிச்சி கொண்டாந்த மருமவ லச்சணத்த..!” என்று ஏளனம் செய்தார்.
அவரோ, “எதா இருந்தாலு.. ஏங்கிட்டக்க பேசு.. நாஞ்சொன்னதால மட்டுந்தே.. இந்தக் கலியாணம் நடந்துச்சி” என்றார்.
“வார்த்த தப்பாச்சி, அம்புட்டுதே...!” என்று கோபத்துடன் கூறிய கந்தவேல், “அவென், என்ன மொற இல்லாமயா வந்து நிக்குதியான்? நா… நடத்தி வெச்ச கலியாணம்.. ஒனக்குதே எம்மேல எம்புட்டு மருவாத…!” என்றார்.
கணவரின் வார்த்தைகளில் சிறு திடுக்கிடலுடன் மனம் வலித்தாலும், பிடிவாதத்துடன் அமைதியாகவே நின்றார்.
“சங்கரி.. நீயி கொண்டாமா.” என்றதும், சங்கரி உள்ளே செல்ல,
“ஆத்தி! ஒன்னுக்கு மூனு சுனாமி தாக்க தயாரா இருக்கு.. நா… கெளம்புதே!” என்று விட்டு நகர்ந்தார்.
சங்கரியும் மஞ்சுளாவும் ஆரத்தி எடுத்ததும், இருவரும் உள்ளே சென்றனர். சாருவர்தினி உள்ளே அடி எடுத்து வைக்கையில், நிறைமதி வேண்டுமென்று பின்னால் இருந்து அவளைத் தள்ளினாள்.
சற்றே தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டவள், தன்னை தள்ளியது யாரென்று திரும்பிப் பார்த்தாள். நிறைமதி இவளை கடுமையாக முறைக்க, இவளோ சிறு தோள் குலுக்கலுடன் திரும்பிக் கொண்டாள்.
அப்பொழுதும் அடங்காமல், “என்னிய மீறி எப்புடி நீ வாழுதனுட்டு பாக்கேன்.” என்று முணுமுணுக்க,
இவளோ அதே அலட்டிகொள்ளாத பாவனையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
அதியன் நெடுமாறன், “என்னாச்சு?” என்று வினவ,
நிறைமதி, “தெரியாம இடிச்சதுக்கு திட்டுதாக மாமா.” என்று கண்ணீருடன் உருக்கமான வேதனை நிறைந்த குரலில் கூறினாள்.
அவன் யோசனையுடன் மனைவியை பார்க்க,
அவளோ அவனை அமைதியாகப் பார்த்தாள்.
அதற்குள் ஆரத்தியை தெரு வாசலில் ஊற்றிவிட்டு, வித்யாவை அழைத்து வந்த மஞ்சுளா, “தாத்தா கிட்டக்க, ஆசி வாங்குக” என்றார்.
அவனது கவனம் அதில் திரும்ப, நிறைமதி யாரும் அறியாமல் இவளை உதட்டோர வெற்றிப் புன்னைகையுடன் பார்க்க, இவளோ சிறிதும் அசராமல் உதட்டைச் சுழிக்க, அதில் அவள் தான் ஆத்திரமடைந்தாள்.
இருவரும், நெல்லையப்பன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
“சீரும் சிறப்புமா எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு மகிழ்ச்சியோட நல்லா இருக…!” என்று வாழ்த்தினார்.
காயத்ரி, “அப்பா” என்று ஆரம்பிக்க,
அவரோ, “அதியன் சொன்னதுதே..! நடந்து முடிஞ்சத மாத்த முடியாது.. ஊருக்கே தீர்ப்பு சொல்லுற எம்மவன், காரண காரியமில்லாம எதுவுஞ் செய்ய மாட்டான். அத அவென கட்டிக்கிட்டவளு புரிஞ்சிக்கல, ஒடன் பொறந்தவளு புரிஞ்சிக்கல…” என்று முடித்துவிட்டார்.
கந்தவேலுவும், அதியன் நெடுமாறனும் ஜெயலட்சுமியை பார்க்க, மனதினுள் ஏதோ செய்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் இவர்களிடம் முகம் திருப்பியவர், காயத்ரி மற்றும் நிறைமதி பக்கம் தான் நின்றார்.
அடுத்து, குமரவேல் சங்கரி தம்பதியர் மற்றும் ராஜன் மஞ்சுளா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
அவர்களும் நல்லதாகவே வாழ்த்தினர்.
மஞ்சுளாவிடம், “பாத்துகிடுக அத்த...” என்றவன் மனைவியிடம் தலையசைத்து விடைபெற்று, தம்பியை தனது வாகனத்தில் நாட்டு மருத்துவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனது மனம், மீண்டும் தம்பியை நினைத்து வேதனையில் தவித்தது.
அதியன் நெடுமாறன், நவநீதனுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கே வீட்டில் விருந்தினர் அறையில் சாருவர்தினி, வித்யா, நந்தினி மற்றும் இளம்தென்றல் பேசிக் கொண்டு இருந்தனர்.
அதியன் நெடுமாறன் சென்றதும், கந்தவேல், “பிள்ளைல சாப்பிட வைக” என்றார்.
“செரி மாமா” என்ற சங்கரி, “நீக?” என்று கேட்டார்.
“மொத பிள்ளைல கெவனிமா” என்று விட்டார்.
“வாங்க” என்று சாருவர்தினி மற்றும் வித்யாவை அழைத்தவர், “நா… போயி எடுத்து வெக்கிறே…” என்றபடி முன்னால் சென்றார்.
மஞ்சுளாவிடம் பேசியபடி சென்ற சாருவர்தினியை வன்மத்துடன் பார்த்த காயத்ரி… ஜெயலட்சுமியிடம், “அதியன் உண்கலனுட்டு நெனப்பே இல்லாம போவுதா பாரு.. இதே மதியா இருந்தாக்க, ‘மாமா உண்கயில வாரேனுட்டு’ சொல்லியிருப்பா” என்றார்.
“அவென்தே உண்டானே!” என்ற தோழியை முறைத்தவர், “அது அவெளுக்கு தெரியாதே!” என்றபடி உண்ணும் அறைக்குச் சென்றனர். நிறைமதியும் அவர்களுடன் சென்றாள்.
சரியாக சாருவர்தினி முதல் துண்டு இட்லியை வாயில் வைக்கையில், ஜெயலட்சுமி, “புருசன் உண்டானாகிற நெனப்பே இல்லியே! என்ன வளர்ப்போ.” என்றார்.
அவரது கூற்றின் தாக்கத்தில் அரை நொடி மட்டுமே தனது செயலை நிறுத்தியவள், பிறகு அது தன்னை பாதிக்காதது போல் உண்பதைத் தொடர்ந்தாள்.
வித்யா தான் உண்ண முடியாமல், தோழியை வருத்தத்துடன் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
திருப்தியுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த காயத்ரியும், நிறைமதியும், அவளது எதிர்வினையில் எரிச்சலும் கோபமும் கொண்டனர்.
ஜெயலட்சுமி அவளைத் திட்ட வாயை திறக்கையில், “அதியன் உண்டானானுட்டு கேட்டுட்டுதே உட்காரவே செய்தா…” என்ற மஞ்சுளா, சிறு கோபக் குரலில், “நீக சொன்னத ஒங்களுக்கே சொல்லுக மதினி.” என்றார்.
“அப்ப எங்கூட்டு வளர்ப்பு செரியில்லனுட்டு சொல்லுதியா?”
“நீக மொத சொன்னததே.. நா.. சொன்னேனுட்டு ஒங்களுக்கு தெரியும்.” என்றவர், “வளர்ப்பு செரியா இருந்தாலு… சிலரது கொணத்த மாத்த முடியாது.” என்ற போது, அவரது பார்வை தமக்கையிடம் இருந்தது.
“என்ன பேச்சிது? இன்னிக்கு வந்தவளுக்காக மதினியவே பேசுவியா?” என்று காயத்ரி கோபத்துடன் கேட்டார்.
தமக்கையை கண்டு கொள்ளாதவர்… சாருவர்தினி பக்கம் திரும்பி, “நீயி வெசனப்படாத கண்ணு.. இத கண்டுக்காம நல்லா சாப்பிடு.” என்றார்.
அவளோ, “இவ்ளோ நேரம் என்னைப் பத்தியா பேசிட்டு இருந்தீங்க!” என்று கேட்டாள்.
‘நெசமாலு புரியாமதே பேசுதாளா! இப்புடி இருந்தாக்க மொளகா அரச்சிடுவாகளே!’ என்ற நினைப்புடன் அவளைப் பார்த்தவர், அவளது கண்ணோரம் தெரிந்த சின்ன சிரிப்பில் நிம்மதி கொண்டவராக சிரிப்புடன்,
“நீயி பொழச்சுக்குவ கண்ணு” என்றார்.
காயத்ரியோ விடாமல், “இம்புட்டு நேரம் இவுளுக்காகதே நீயி தொண்டத்தண்ணி வத்த பேசின, ஆனாக்க… அவெ ஒன்னியவே நக்கலு செய்தா பாரு.” என்றார்.
“தொண்டத்தண்ணி வத்த பேசி, ஓஞ்சக்திய வீணாக்காம, உருப்படியா ஏதோ செய்.” என்றவர் சாப்பிடாமல் தோழியையே கவலையுடன் பார்த்தபடி இருந்த வித்யாவை பார்த்து, “ஓ… பெரண்டு(friend) சமாளிப்பா.. வெசனப்படாம சாப்பிடு.” என்றார்.
அமைதியாக தலையசைத்தவளின் பார்வை, அப்பொழுதும் தோழியிடம் தான் இருந்தது.
“புது வாரியலு… மொத நல்லாதே பெருக்கும்.” என்று நொடித்த காயத்ரி, நிறைமதி மற்றும் ஜெயலட்சுமியுடன் அங்கிருந்து அகன்றார்.
‘இவள திருத்த முடியாது’ என்று நினைத்த மஞ்சுளா சாருவர்தினியைப் பார்க்க, அவளோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
மஞ்சுளாவும், சங்கரியும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
வித்யாவோ, ‘இவ சமாளிப்பானு எனக்கே தெரியுமே! இவ பேச ஆரம்பிச்சா, தெறிக்க விடுவா.. ஆனா, அதுக்கு அப்புறம்! அதியன் கேரெக்டர் நேர்மையானவரா தெரிந்தாலும், குடும்பம்னு வரும் போது… அதுவும் கூட்டுக் குடும்பம்!
இந்தக் கடவுள், ஏன் தான் இவளை இப்படி படுத்துறாரோ! இவளுக்கு அன்பும் அனுசரனையுமான குடும்பம் அமையவே செய்யாதா? ஒரு வாய் சாப்பாடு நிம்மதியா சாப்பிட முடியலனா, என்ன வாழ்க்கை இது!’ என்று வருந்தி பெரிதும் கவலை கொண்டாள்.
மஞ்சுளா, “நந்துவயு தென்றலயு கூட்டியாரேன்.” என்று விட்டு நகர்ந்தார்.
தோழியின் எண்ணம் அறிந்தவள் போல் சாருவர்தினி, “ரொம்ப யோசிக்காம சாப்பிடு.. சின்ன வயசுலேயே இதை விட அதிகமான பேச்சுக்களை கேட்டுட்டேன்.. அந்த வயசுலேயே சமாளிக்க தெரிஞ்ச எனக்கு, இப்போ சமாளிக்கத் தெரியாதா?” என்று மெல்லிய குரலில் பேசினாள்.
“சமாளிப்ப.. ஆனா” என்று ஆரம்பித்தவள் மனதில் நினைத்ததை கூற முடியாமல், சற்றே கலங்கிய விழிகளுடன் அமைதியானாள்.
“ஓவரா யோசிக்காத வித்தி.. நான் எப்போதுமே, ஜஸ்ட் ப்ளோ(flow) வித் தி ப்ளோனு இருக்கிறவனு உனக்கே தெரியுமே.. இந்த அன்பு காதல்லாம் என்னோட எதிர்பார்ப்பில் இருந்ததே இல்லை.. ஸோ, நோ டிஸ்ஸப்பாயின்ட்மென்ட்ஸ்..!
என்னோட கேரெக்டரை சிதைச்சு பேசாதவரை தப்பிச்சாங்க.. இவங்க பேசினா, உடனே கிளியர்-கட் செய்துட்டு கிளம்பி வந்திட மாட்டேன்.. குடும்ப அமைப்போட அருமை, எனக்கு தெரியும்.” என்றாள்.
மெலிதாக பேசி இருந்தாலும், அவர்கள் பேசியது அருகில் நின்றிருந்த சங்கரியின் காதில் விழுந்தது தான். அவள் ஆங்கிலத்தில் பேசியது அவருக்கு புரியவில்லை என்றாலும், குடும்பத்தின் அருமை தெரிந்த பண்பான பெண் என்றும், சிறு வயதில் இருந்தே பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டார்.
உறவு உயிராக காத்திருப்போம்...
குறிப்பு: பையனுக்கு உடம்பு சரி இல்லைனு டாக்டர் கிட்ட கிளம்பிட்டு இருக்கிறேன்.. wordpress சரியா load ஆகலை.. அதான் இப்படி direct போஸ்ட்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.