Harini Vinoth
Writer
அவள் கண்ணைத் திறந்த நொடியிலேயே நான் எங்க இருக்கேன் னு தெரியல.சுற்றி மெதுவா ஒலிக்கிற சத்தங்கள்… என்னை சுற்றி இருக்கும் மருத்துவ உபகரணங்கள் இதெல்லாம் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உலகம் மாதிரி இருக்கிறதே.
“ஏன் இந்த இடம்?” என்னும், கேள்விக்கு பதில் மட்டும் எங்கயும் இல்லை. என் உடம்பு என் கட்டுப்பாட்டில இல்லாத மாதிரி, நான் ஒரு பார்வையாளரா மாறி நிக்குற உணர்வு.
என் கண் முன்னாடி ஒரு மனிதன் இருக்கிறார். அவர் முகம் தெளிவா நினைவில் பதிஞ்சது… ஏன்னா அந்த முகம் வலியால நிறைந்திருந்தது. என்னைப் பார்த்த அந்த பார்வை… கோபமோ, பரிதாபமோ இல்ல. அது ரொம்ப ஆழமான வலி.
“ஏன் இவர் என்னை இப்படி பார்க்குறார்?”ன்னு என் மனசு கேட்டது. அவருக்கு நான் தெரிஞ்சவளா? இல்ல இது என்ன புதிரா?
அந்த கண்களில் இருந்த ஈரம், எனக்கே தெரியாம என் நெஞ்சுக்குள்ள எதையோ குத்தினது. நான் என்னைப் பற்றி நினைக்க முயற்சி பண்ணினேன்.
என் வாழ்க்கை…
என் நினைவுகள்…
என் உலகம்…
ஒண்ணுமே இல்லை.
ம்ஹூம் ஒன்னும் நினைவுக்கு வர வில்லையே. உள்ளே ஒரு பெரிய வெறுமை. சத்தமே இல்லாத ஒரு அறை மாதிரி. அந்த வெறுமை பயமா இருந்தது.
“நான் இவ்வளவு காலம் இப்படியா இருந்தேன்?”ன்னு தோணிச்சு. என் மனசுக்குள்ள ஏதோ ஒன்று குறையுற மாதிரி இருந்தது… ஆனா அது என்னன்னு சொல்ல தெரியல.
அவர் என் அருகே வந்தபோது, என் உள்ளம் தானா பின்னடைந்தது. பயத்தால இல்ல… குழப்பத்தால.
நெருக்கமா இருக்க வேண்டிய ஒருவரை, நான் தூரமா பார்த்த மாதிரி ஒரு உணர்வு. அது அவருக்கு வலியைக் கொடுத்ததுன்னு தெரிஞ்சும், நான் எதுவும் செய்ய முடியல. ஏன்னா அந்த உணர்வுக்கே எனக்கு காரணம் தெரியல.
அந்த நேரம், என் மனசுக்குள்ள இருந்து ஒரு பெயர் மேலே வந்தது. எங்க இருந்து வந்தது? ஏன் வந்தது? எனக்கு தெரியல. ஆனா அந்த பெயர் மட்டும் தெளிவா இருந்தது. என் உதடுகள் தானா அசைந்தது.
“ஆதவன்…?”
அந்த பெயர் சொன்ன நிமிஷம், அறை முழுக்க ஏதோ உடைந்து விழுந்த மாதிரி இருந்தது. அவர் கண்களில் அந்த நொடியில பார்த்த மாற்றம்… அது என்னை இன்னும் அதிகமா குழப்பிச்சது. நான் யாரையோ நினைவில் வைத்திருக்கேன். ஆனா என் முன்னாடி நின்றிருப்பவர்… அந்த நினைவுகளுக்குள் இல்ல.
என் உள்ளம் உணர்ச்சிகளை உணருது…
ஆனா நினைவுகள் இல்லை.
அது யாருன்னு எனக்கு தெரியல.
யாரோ ஒருத்தனை முழுக்க முழுக்க மறந்திருக்கேனா?
இந்த குழப்பத்துக்குள்ளே, இருட்டு என்னை மீண்டும் மூடிக்கொண்ட போது, ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவா இருந்தது.
என்னை பார்த்த அந்த மனிதனின் வலி…
அது சாதாரண வலி இல்லை.
அது நான் அறியாத ஒரு உண்மையோட வலி.
.....
அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தை…
“ஆதவன்…”
அதுக்குப் பிறகு சூர்யா அங்க ஒரு நொடியும் நிற்கல. மூச்சே அடைஞ்ச மாதிரி, ICU ரூம்ல இருந்து சட்டுனு வெளியே ஓடினான். கால்கள் அவனை எங்க கொண்டு போகுதுன்னு அவனுக்கே தெரியல. ஹாஸ்பிடல் காரிடாரின் கடைசி முனையில் போய் நின்றான். சுவரில் கை வைத்துக்கிட்டு, தலையை குனிச்சபடியே நிக்குறதுக்குக் கூட அவனால முடியல. முழங்கால்கள் நடுங்கின. நெஞ்சுக்குள்ள ஏதோ ஒன்று பிளந்துட்டு வெளிய வர முயற்சி பண்ணுற மாதிரி இருந்தது.
“அவளோட நினைவுல… நான் இல்லாம போயிட்டேனா?”
அந்த எண்ணம் அவனை உள்ளுக்குள்ளே கிழிச்சது.
“என்ன நடந்தாலும்… என்னோட தயா என்ன மறக்க மாட்டானு நினைச்சேன்…”
அவள் கையை பிடிச்சு இருந்த ஒவ்வொரு நாளும், அவன் இதே நம்பிக்கையோட தான் உயிரை இழுத்து பிடிச்சு நின்னான். உடம்பு களைச்சாலும், மனசு உடையாம இருக்க ஒரே காரணம்.
அவள் நினைவுல நான் இருக்கேன்”*ன்னு நினைச்சது தப்போ.. அவன் அவள் உலகத்திலிருந்து முழுக்க முழுக்க நீக்கப்பட்டிருக்கான்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் தானா வழிஞ்சது. துடைக்க கூட அவனுக்கு சக்தி இல்ல.
“காதல் மறந்துடுச்சுன்னா… அதைவிட பெரிய தண்டனை வேற என்ன இருக்கு?”