• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசி சுவடு - 7

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 7

காட்டின் குரலும் காலடிச் சத்தமும்!

காட்டின் அடர்த்தி செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. பிரம்மாண்டமாக வளர்ந்து நின்ற மரங்களின் இலைவரிசைகள் வானத்தையே மறைக்க, அதனூடே ஊடுருவி வந்த சூரிய வெளிச்சம் தரையில் மிதக்கும் தங்கப் புள்ளிகளாக விழுந்துகொண்டிருந்தன. காட்டின் அமைதியைக் கிழித்துக்கொண்டு விதவிதமான பறவைகளின் கூச்சல்களும், சருகுகளின் சலசலப்பும், எங்கோ தொலைவில் கேட்கும் நீரோடையின் மெல்லிய இரைச்சலும் காட்டை ஒரு விசித்திரமான உலகமாக மாற்றியிருந்தன.

இளமாறன் தன் கையில் வைத்திருந்த தடியால் புதர்களையும், தொங்கிக்கொண்டிருந்த கொடிகளையும் விலக்கி வழி ஏற்படுத்தியபடி முன்னால் சென்றான்.

"டாக்டர்... பார்த்து வாங்க! இந்த இடத்துல மரத்தோட வேர்கள் தரைக்கு மேல படர்ந்திருக்கு. கால் தட்டிவிடும்," என்று எச்சரித்தபடி நடந்தான் இளமாறன்.

சுனையாழி தன் தோள்பையை இறுக்கிப் பிடித்தபடி கவனமாக அடிமேல் அடி வைத்து நடந்தாள்.

"ம்ம்... பார்த்துதான் வர்றேன் இளமாறன். காடு உண்மையிலேயே ரொம்ப பிரம்மாண்டமா, பேரழகோடு இருக்கு."

இவர்களின் பேச்சிலும் ஒரு கவனத்தை வைத்தபடி, சுனையாழிக்குச் சற்றுப் பின்னால் நடந்துகொண்டிருந்த முகில்வர்மன், சுற்றிலும் இருந்த இயற்கைச் சூழலை அமைதியாகவும் கூர்மையாகவும் கவனித்துக்கொண்டே வந்தான். அவனது கண்கள் மரங்களின் பழமை, பாறைகளின் அமைப்பு என அனைத்தையும் அமைதியாக ஆராய்ந்தன.

"முகில் சார்... இங்க இப்படி ஒரு அருவி இருக்குன்னு யாரும் அதைப் பற்றி பேசறதே இல்ல. இந்த அருவிப் பகுதிக்கு வரணும்னு நினைச்சாலும் வர்றதும் சாதாரணமானது இல்லை," என்று நடந்தபடியே முகில்வர்மனுக்கும் அந்த இடத்தைப் பற்றிய தகவலையும் சொல்ல மறக்கவில்லை இளமாறன்.

"ஏதாவது காரணம் சொல்றாங்களா மாறன்?" என்றான் கேள்வியாக.

"பொதுவா இந்த அருவியோட தூரம் அதிகம். வழியும் தெளிவா இல்ல. இந்தப் பகுதியில சில விலங்குகள் இருந்ததா அப்பா என்னோட சின்ன வயசுல சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். நான் இங்க மூன்று, நான்கு முறை வந்திருப்பேன். ஆனா எந்த விலங்கையும் பார்த்தது இல்ல. ஊர்க்காரங்க யாரும் இந்த அருவிப் பக்கம் வந்து இருக்காங்களான்னும் தெரியல. ஆனா ட்ரெக்கிங் வர்ற பசங்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான இடம்னா ரொம்ப பிடிக்குமோ, இல்ல ஆர்வமோ... நானே இரண்டு செட் பசங்களை இங்க அழைச்சுட்டு வந்திருக்கேன்," என்றான் நீண்ட விளக்கமாக.

முகில்வர்மன் லேசாகப் புன்னகைத்தான்.

"ட்ரெக்கிங்... ம்ம்..."

புன்னகையோடு, "அபாயங்கள் இருக்குற இடத்தில் தான் இயற்கையோட நிஜமான அழகும், மனிதன் இதுவரை பார்க்காத பல ரகசியங்களும் ஒளிஞ்சிருக்கும் இளமாறன்," என்றான்.

சுனையாழி சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். அவனது நிதானமான பேச்சும் ரசனையும் அவளுக்குள் ஒரு சுவாரசியத்தைத் தூண்டியது. இளமாறனுக்கும் அப்படியே.

"முகில் சார்... ஒரு கேள்வி கேட்கலாமா?"

"கேளுங்க சுனையாழி..."

"கார்ப்பரேட் முதலாளி, பிசினஸ் மீட்டிங்னு ஓடிக்கிட்டே இருக்குற உங்களுக்கு, இந்த மலையேற்றத்துல எப்படி இவ்வளவு ஆர்வம்? அதுவும் தனியா இப்படி அடர்ந்த காட்டுக்குள்ள டாக்ஸி ட்ரைவரோட மட்டும்?!"

மாறனுக்கும் அதே கேள்விதான்.

முகில்வர்மன் இருவரின் முகத்தில் இருந்த கேள்வியைப் படித்தபடியே லேசாக நிமிர்ந்து மரங்களின் உச்சிகளைப் பார்த்தபடி,

"ஒரே மாதிரி போகும் வாழ்க்கை கொஞ்ச காலத்திற்கு அப்புறம் ஒருவித அழுத்தத்தையும் சலிப்பையும் கொடுக்கும் சுனையாழி. அப்படியான ஒரு நேரத்துல ஆரம்பிச்சதுதான் ட்ரெக்கிங் போற பழக்கம். வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு காடு மலைன்னு சுத்தக் கிளம்பிடறதுதான்.

ஆனா இந்த முறை அப்படி கிளம்பி வரல. திருநெல்வேலிக்கு வெட்டிங்குக்கு வந்தேன். வந்த இடத்துல இந்த மலையைப் பார்த்ததும் 'ஒய் நாட்'ன்னு கிளம்பிட்டேன். ஆமா, என்னை கேட்கிறீங்க. மேடம் மட்டும் எப்படி? கூட்டமாவா வந்து இருக்கீங்க?" என்று இயல்பாகப் பதிலளித்து இறுதியாய் ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறந்த அதே நொடி...

சுனையாழியின் கைப்பையிலிருந்த போன் திடீரென்று 'ட்ரிங்... ட்ரிங்...' என உரத்த குரலில் அலறியது!

அடர்ந்த மரங்களுக்கு நடுவே லேசாகத் திறந்திருந்த ஒரு மேடானப்பகுதியில் போனுக்குத் திடீரென ஒரே ஒரு பார் சிக்னல் கிடைத்திருந்தது.

சுனையாழி பதறியடித்துப் பையைத் திறந்து திரையைப் பார்த்தாள்.

'அம்மா' என்று மின்னியது.

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், மறுமுனையில் இருந்து அம்மாவின் குரல் கோபமாகக் கேட்டது.

"எங்கடி இருக்க சுனா?! காட்டுக்கு மூலிகை தேடப் போறேன்னு சொல்லிட்டு போயிருக்க... அதுவும் தனியா சொல்லச் சொல்ல கேட்காம... போனவ ஒரு போன் பண்ணனுமா இல்லையா? உனக்குக் கொஞ்சம் கூட பொறுப்பும் இல்ல. நாமாவது கூப்பிடலாமேனு போன் பண்ணா நாட் ரீச்சபுள்னு வருது... இன்னும் அங்கதான் இருக்கியா? இப்ப என்ன பண்ற?"

என்று சுனையாழியை ஹலோ வைக்கக்கூட விடாமல் திட்டித் தீர்க்க, காட்டின் நிசப்தத்தில் முன்னால் போன மாறனுக்கும், அவளை நடுவில் விட்டு பின்னால் வந்த முகில்வர்மனுக்கும் அச்சுப்பிசகாமல் கேட்டு வைக்க, இருவரும் ஒன்று போலவே சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தார்கள்.

அவர்களின் சிரிப்பையெல்லாம் சுனையாழி கவனிக்கவே இல்லை. அம்மாவின் அத்தனை திட்டையும் வாங்கிக்கொண்டிருந்தவளின் கவனத்தில் பதிந்தது என்னவோ, அவரின் குரலில் இழையோடிய பதட்டத்தைத்தான்.

சுனையாழி லேசாகப் புன்னகைத்தபடி,

"ம்மா... சிக்னல் கிடைச்சு இருந்தா நானே கூப்பிட்டு இருப்பேன் தானே... ஆனா இங்க ரீச் ஆனதும் உங்களுக்கு தகவல் சொல்லா விட்டது என் தப்பு தான்," என்றாள் சமாதானமாக, அவரின் பதட்டத்தைத் தணிக்கும் விதமாக.

அவரும் அவளின் பேச்சில் சமாதானமாகி,

"அதுக்குதான் சொன்னேன். அண்ணன் வந்ததும் அவனோட போன்னு. என் பேச்சை காதுகொடுத்து கேட்டியா?" என்று மறுபடி திட்ட ஆரம்பிக்க...

முகில்வர்மன் சிரிப்பை அடக்க முயன்று தொண்டையைக் கனைக்க, அப்போதுதான் சுனையாழி அருகில் இருந்த இருவரின் முகத்தையும் கவனித்தாள். இருவரும் அவளைப் பார்த்தபடி சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தனர்.

சுனையாழி முகத்தில் அசடு வழிய,

"அம்மா..." என்றாள் உதட்டசைவில் இருவருக்கும் பொதுவாக.

"ம்மா... உன் பையன் வர வரைக்கும் நான் வெய்ட் பண்ணி இருந்தா எனக்கு லீவே முடிஞ்சுபோயிடும். இங்க நான் ஒன்னும் தனியா இல்ல. இங்க ட்ரெக்கிங் வந்த குரூப்போட ஜாயின் பண்ணி இருக்கேன்," என்றாள்.

"ம்ம்... சரி, பத்திரமா இரு. சிக்னல் கிடைக்கும்போதெல்லாம் கூப்பிடு," என்றவரிடம்,

"சரிம்மா," என்று தலையாட்டிவிட்டு, போனைப் பைக்குள் போடும்போதே, 'அப்பாடா... அம்மா மறுபடி திட்டல... தப்பிச்சோம்!' என்பது போல ஒரு பெருமூச்சு விட்டாள்.

முகிலும் இளமாறனும் லேசான சிரிப்புடன் அவளைப் பார்க்க, சுனையாழி லேசாக அசடு வழிந்தாள்.

நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அவளுக்குப் பசிப்பது போல தோன்றவும், மெதுவாகத் தன் தோள்பைக்குள் கையை விட்டு, தான் கொண்டு வந்திருந்த 'டார்க் சாக்லேட்' பாக்கெட்டை வெளியே எடுத்தாள்.

முகில்வர்மன் பக்கவாட்டில் அவளைப் பார்த்து இதழோரம் ஒரு புன்னகையைச் சிந்தியபடி, தன் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,

"பசிக்குதா? சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்களா? அதுக்குள்ள மதியம் நேரம் வந்துடுச்சு. மாறன், இன்னும் எவ்வளவு தூரம் அந்த அருவிக்கு போக?" என்று விசாரித்தான்.

இளமாறன் பதில் சொல்லும் முன்...

---

அதே நேரம்...

அவர்களுக்குச் சில நூறு அடிகள் பின்னால், மரங்களின் நிழல்களுக்குள் தன்னை மறைத்தபடி நகர்ந்துகொண்டிருந்தான் வசீகரன்.

அவன் கையிலிருந்த அந்தப் பழமையான மஞ்சள் நிற வரைபடத்தை மீண்டும் ஒருமுறை விரித்துப் பார்த்தான். அந்த வரைபடத்தில், ஒரு பெரிய அருவியும், அதன் பின்னணியில் மூன்று கூர்மையான பாறைகளும் வரைபடக் குறியீடுகளாக வரையப்பட்டிருந்தன.

'இந்த மேப்ல இருக்குற அடையாளம்... ஒருவேள இவனுங்க பேசற அருவியா இருந்தா?!'

அவனது கண்களில் மின்னல் வெட்டி மறைந்தது.

"அந்த அருவிக்கு அவனுங்க போயி சேரட்டும். அங்க என்ன ரகசியம் புதைஞ்சிருக்குன்னு பார்த்துட்டு... அதுக்கப்புறம் இந்த மூணு பேரையும் வழி அனுப்பி வச்சிர வேண்டியதுதான்," என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டான்.

அப்போது...

தன் கவனக்குறைவால், தரையில் கிடந்த ஒரு காய்ந்த விறகு வசீகரனின் காலடியில் மிதிபட்டு 'டக்' என்ற சத்தத்துடன் உடைந்தடங்கியது!

அடர்ந்த காட்டின் அமைதியில் அந்தச் சத்தம் சற்றுத் தெளிவாகவே எதிரொலித்தது.

முன்னால் நடந்துகொண்டிருந்த முகில்வர்மன் சட்டெனத் தன் நடையை நிறுத்தினான்! அவனது கூர்மையான பார்வையும் செவிகளும் உடனே பின்னோக்கித் திரும்பின!

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya