• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 33

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 33

நினைவின் முதல் வாசல்!

காட்டின் எல்லையைத் தொட்ட அந்த நொடிக் கணத்தில், காலத்தின் அடர்ந்த திரை ஒன்று அவர்கள் அறியாமலேயே விலகத் தொடங்கியது.

சுற்றிலும் நிலவிய அமைதி சாதாரணமானதல்ல; அது பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் காலடிகள் படாத இரகசியங்களைத் தன் மடியில் ஏந்தி நிற்கும் ஓர் ஆதி நிலத்தின் மௌனம். சற்றுமுன் வரை ஈரமான மண்ணின் வாசனையோடு கலந்திருந்த காற்று, இப்போது ஏதோ ஒரு பழமையான கதையைச் சொல்வதைப் போல அவர்களின் சரீரத்தைத் தழுவிச் சென்றது. பெருமரங்களின் இலைகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும்போது எழுந்த ஓசை, காட்டின் ஆழத்தில் யாரோ மூச்சுவிடும் சப்தத்தைப் போல எதிரொலித்தது.

இளமாறன் திடீரென்று தன் நடையை நிறுத்தினான். அவனது வலது கை மெதுவாக நெற்றியை அழுத்தியது.

அவனது முகம் வேதனையில் சுருங்கியது.

அவனருகில் நடந்துகொண்டிருந்த முகில்வர்மன் அதை கவனித்து, அவன் தோளைத் தட்டினான்.

“என்னாச்சு மாறன்? தலை வலிக்குதா... நெற்றியை அத்தனை அழுத்தமா அழுத்திவிடறீங்க?”

இளமாறன் பதில் சொல்லவில்லை. அவனது விழிகள் மூடிக் கிடந்தன. ஆனால், அவனது அகக்கண்ணுக்குள் ஒரு பேரலை கொந்தளித்துக்கொண்டிருந்தது.

ஒரு குறுகிய மலைப்பாதை... பாறை இடுக்குகளில் பாயும் ஈர மண்... தொலைவில் ஓர் அருவி விழும் ஓசை... இவை அனைத்துமே அவனது மூளையின் நரம்புகளை யாரோ பிடித்து இழுப்பதைப் போலப் படபடப்பை உருவாக்கின.

“என்ன பண்ணுது மாறன்... தலை சுத்துதா? இல்ல தலைவலியா?” என்று யாழ்வேந்தன், தான் ஒரு மருத்துவன் என்பதை மறவாதவன்போல அருகில் வந்தான்.

“என் மெடிக்கல் கிட்டை எடு யாழி... அதுல மாத்திரை இருக்கானு பாரு...” என்று சொல்ல,

“காலையில சாப்பிட்டீங்களா மாறன்?” என்று சுனையாழியும் கேட்டபடி மாத்திரையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“சாப்பிட்டேன் டாக்டர்... நல்லாதான் சாப்பிட்டேன். ஆனா...” இளமாறன் நெற்றியைத் தேய்த்தபடி தொடர்ந்தான். “இந்தக் காட்டுக்குள்ள வந்ததுல இருந்தே ஏதோ ஒரு மாதிரி என்னை அழுத்துது. இந்த மண்ணோட வாசனையும், காத்துல இருக்குற ஈரப்பதமும் என் உடம்புக்குள்ள ஏதோ பண்ணுது...” என்று சொல்லியபடி சற்று தயங்கி, தன் மண்டையோட்டை இரு கரங்களாலும் இறுகப் பிடித்தான்.

“தலையில ஆயிரம் நண்டுகள் ஒரே நேரத்துல ஊர்ற மாதிரி இருக்கு டாக்டர்... யாரோ என் மூளைக்குள்ள இருந்து நரம்புகளைப் பிடிச்சு வெளியே இழுக்குற மாதிரி ஒரு வலி!”

“முதல்ல இந்த மாத்திரையைப் போட்டுக்கோங்க. தண்ணி குடிங்க. கொஞ்சம் நிதானமா நடக்கலாம்.”

இளமாறன் மாத்திரையை விழுங்கிவிட்டுத் தண்ணீரைப் பருகினான்.

முகில்வர்மன் கவலையோடு, “உங்களால நடக்க முடியலன்னா சொல்லுங்க மாறன்... நாம இப்ப கிளம்பிட்டு நாளைக்குக் கூடத் திரும்ப வரலாம்” என்றான்.

“இல்லை முகில் சார்... மெல்ல நடந்தா சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு, இளமாறன் மீண்டும் அடிமேல் அடி வைத்து நடக்கத் தொடங்கினான்.

ஆனால்... அவன் அடுத்த சில அடிகளை எடுத்து வைத்தபோது, அவனது உடலில் நிகழ்ந்த மாற்றம் வெளிப்புறத்திற்கும் தெரியத் தொடங்கியது.

அவனது நடை மாறியது. அதுவரை ஒரு காட்டுப்பாதையைச் சில முறை அறிந்த மனிதனின் நடையாக இருந்தது, இப்போது அந்தச் செம்மண் பாதையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அணுஅணுவாக அறிந்த ஒரு பூர்வகுடி மனிதனின் கம்பீர நடையாக மாறியது.

அவனது கண்கள் காட்டை வெறும் மரங்களாகப் பார்க்கவில்லை. வலப்புறம், இடப்புறம், பாறைச் சரிவுகள், புதர்களின் மறைவிடங்கள்... எல்லாமே அவனுக்குச் சொந்தமான இடமாகத் தோன்றியது.

திடீரென ஒரு புதரின் முன்னே நின்ற இளமாறன், “இந்த வழி போனா அந்த அருவிக்கு இன்னும் தூரமா நடக்கணும்” என்றான்.

பின்னால் வந்த வசீகரன் புருவத்தைச் சுருக்கி, “நீங்க ஏற்கனவே வந்த வழிதானே... இது இல்லாம வேற வழி தெரியுமா?” என்றான்.

இளமாறன் பதில் பேசாமல், அடர்ந்த மரங்களுக்கு நடுவே மறைந்திருந்த ஒரு குறுகிய, கரடுமுரடான பாதையைச் சுட்டிக்காட்டினான்.

“அந்தப் பக்கமா போனா சுனை அருவிப் பகுதிக்குச் சீக்கிரம் போயிடலாம்.”

முகில்வர்மன் அந்தப் பாதையை உற்றுப் பார்த்தான்.

“இந்தப் பாதையா? நிச்சயம் தெரியுமா மாறன்?”

“ஆமாம்...” இளமாறனின் குரலில் இப்போது எந்தத் தயக்கமும் இல்லை. “இது அருவிக்குப் போற பொதுவான பாதை இல்லைதான்... ஆனா, அங்க போகக் குறுக்குவழி.”

வசீகரன் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தான்.

“உனக்கு நிஜமாவே இந்தப் பாதை அருவிக்குப் போகுதுன்னு தெரியுமா?”

இளமாறன் திரும்பி அவனைப் பார்த்தான். அவனது விழிகளில் ஒரு ஒளி ஒளிர்ந்தது.

“நிஜமா தெரியும் சார்... இந்தக் காட்டுக்குள்ள நான் சின்ன வயசுல இருந்து வந்துபோயிருக்கேன். இந்த வழியில போனா ஆபத்தில்லாம சுனைப்பகுதியை அடையலாம். வாங்க...”

அவன் முன்னால் நடந்து சென்று, அடர்ந்த கிளைகளைத் தன் கரங்களால் விலக்கினான். அவனது உடல் அந்தப் பாதையின் ஒவ்வொரு வளைவுக்கும் இயல்பாக வளைந்து கொடுத்தது.

தான் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. ஆனால், அவனது உடலும் மனமும் அறுதியிட்டுச் சொன்னது—அந்தப் பாதையை அவன் முன்பே அறிந்திருந்தான் என்பதை!

மரங்களின் மேலெழுந்த வேர்களைத் தாண்டிச் செல்லும்போது, அவனது கால் லேசாகத் தடுமாறியது. அதே கணத்தில், அவனது அறியாமலேயே அவனது இதழ்கள் அந்த வார்த்தையை உதிர்த்தன.

“வேள்வியாளரே... இன்னும் எங்கெல்லாம் யான் தங்களைத் தேடுவது?”

அவன் தனக்கே உரித்தான குரலில், தன் நீண்டகால நண்பனை அங்கு தேடுவது போலக் கேட்டபடி நடந்தான்.

பின்னால் வந்த முகில்வர்மனும் வசீகரனும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தனர்.

கீழே பார்த்தபடி வந்த யாழ்வேந்தன், “வேர் இருக்குன்னு எச்சரிக்கிறியா மாறன்? அதான் பார்த்துட்டுத்தானே வர்றோம்... அது என்ன ‘வேள்வியாளர்னு’? நம்ம கேங்க்ல இப்ப யாருமே இல்லையே மாறன்... யாரைத் தேடறீங்க?” என்று கேட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தான்.

இளமாறன் அதிர்ந்து நின்றான்.

“நான்... யாரைத் தேடறேன்?... நாம மட்டும் தானே இங்க இருக்கோம்... புதுசா வேற யாரைத் தேடப்போறேன்?” என்று குழப்பமாக யாழ்வேந்தனைப் பார்த்துக் கேட்டான்.

“மாறன், நீங்கதான் சொன்னீங்க. அதைத்தான் நான் உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேன்” என்றான் யாழ்வேந்தன்.

இளமாறன் மெதுவாகத் தன் நெற்றியை அழுத்திக்கொண்டான்.

“வேள்வியாளன்னு சொன்னேன் ஞாபகம் இல்ல... தலைவலியில வேரைதான் இப்படி சொன்னேனோ என்னவோ...” என்றான் மறுபடி நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டபடி.

இளமாறன் கண்களை மூடியபடி அங்கேயே சற்று நேரம் நிற்க,

அந்தப் பெயர் காற்று மண்டலத்தில் மிதந்து சென்று வசீகரனின் செவிகளை அடைந்த அந்த நொடி—

வசீகரன் ஒரு நீண்ட மூச்சை பிறர் அறியாமல் வெளியேற்றி,

‘வேள்வியாளன்... அந்தப் பெயர் எனக்குப் புதுசாவே தோணல. என் ரத்தத்துல கலந்த ஒரு பெயர் மாதிரி இருக்கு!’ என்று அவனுக்குள் அவனே மெல்ல முணுமுணுத்தான்.

அவனின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு மாபெரும் பாறை உடைந்து விழுந்தது போன்ற அதிர்வு!

வேள்வியாளன்!

அந்த ஒற்றைப் பெயர்... ஏன் அவனது இதயத் துடிப்பை அத்தனை வேகமாக அதிகரிக்கச் செய்கிறது? ஏன் அவனது ஆத்மாவிற்குள் ஒரு கொடூரமான குற்ற உணர்ச்சியையும், விவரிக்க முடியாத பாசத்தையும் ஒரே நேரத்தில் கிளறிவிடுகிறது?

அவன் எதுவும் பேச முடியாமல் உறைந்து நின்றான்.

அவனது பார்வை, கண்களை மூடியபடி நின்ற இளமாறனைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவன் உச்சரித்த அந்தப் பெயர் அவனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த நிமிடம் ஆட்சி செய்வதை அவன் உணர்ந்தபடிதான் நின்றிருந்தான்.

அதே நேரம், கண்களை மூடிக்கொண்டிருந்த இளமாறனின் தலைவலி இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருந்தது.

அவனது அகச்செவிகளில் ஒரு குரல் தெளிவாக ஒலிக்கத் தொடங்கியது.

“நம்பியான்!”

இளமாறனின் கால்கள் அங்கேயே வேரூன்றியது போல உறைந்தன. பட்டெனக் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தான்.

மற்றவர்களுக்கு அந்தக் குரல் கேட்டதா என்று அவன் சுற்றிப் பார்த்தான். ஆனால், சுற்றியிருந்தவர்கள் அவனைத்தான் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

ஆனால், அவனுக்கு நிச்சயம் ஒரு குரல் கேட்டது.

“நம்பியான்!”

மறுபடியும் அதே குரல், யாரையோ பெயர் சொல்லி அழைப்பதைப் போல ஒலித்தது.

அவனது மனக்கண்ணில் காலம் பின்னோக்கிச் சுழன்றது.

இன்றைய ஆடைகள் மறைந்து, உடலெங்கும் வனத்தின் அடையாளங்களோடு, கையில் அபூர்வ மூலிகைக் கற்றையோடு ஓடிவரும் ஒரு பூர்வகுடி இளைஞன் தோன்றினான்.

தொலைவிலிருந்து மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

“நம்பியான்!”

அந்த இளைஞன் திரும்பிப் பார்த்து,

“யான் இங்கே இருக்கின்றேன்!” என்று பதிலளித்தான்.

அந்தக் குரல்... அது தன்னுடையதேதான்!

இளமாறன் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான். அவனது மூச்சுக்காற்று அக்னிப் பிழம்பாக வெளிவந்தது.

“நம்பியான்...” என்று முணுமுணுத்தான்.

அடுத்த கணமே அவனது மனத்திரையில் இன்னொரு காட்சி மின்னலென வெடித்தது!

ஒரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி. அதன் அருகில் புன்னகையோடு நிற்கும் மற்றொரு இளைஞன்... ஆனால், அவன் இவனைப் போல இல்லாமல், இளவரசனைப் போன்ற தோற்றத்தில் இருந்தான்.

மறுபடியும் அதே குரல், முகம் தெரியாமல் ஒலித்தது.

“நம்பியான்! இவ்வழி வாராய்...”

“வேள்வியாளரே... தங்களை அரசர் தேடப்போகிறார்... இங்கெல்லாம் தனியே வருதல் கூடாது!”

“அந்தக் கவலை உனக்கெதற்கு, நம்பியா? யான் அரசரைச் சமாதானப்படுத்திவிடுவேன்.”

“தாங்கள் எங்கு சென்றாலும், இந்த அரச குலப் பகையும் ஆபத்தும் உங்களைத் தொடர்ந்து வருமென்பதே அரசரின் அச்சமாக இருக்கும்.”

என்று சொல்லியபடி அந்தக் குரல் மறைந்தது.

காட்சி மறைந்தது.

இளமாறனின் கண்கள் கலங்கின.

தன் உயிர்போன்ற நண்பனைக் காக்கத் துடித்த ஒரு பூர்வகுடி ஆத்மா அவனுக்குள் முழுமையாக விழித்துக்கொண்டது!

அவன் மெதுவாகத் திரும்பி முகில்வர்மனைப் பார்த்தான். அவனது விழிகளில் கண்ணீர் அலைமோதியது.

‘இவனை... இவனை நான் காக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்தது. காரணம் சரிவரத் தெரியாமலேயே.

அதே நேரம், அவர்களையே பார்த்தபடி சற்று தொலைவில் நின்றிருந்த வசீகரனுக்கோ உலகம் சுழல்வது போலிருந்தது.

‘வேள்வியாளன்...’

அந்தப் பெயர் அவனது நினைவுக் கதவை அடியோடு பிளந்தது!

அவனது மனக்கண்ணில் ஒரு பிரம்மாண்டமான அரண்மனை மண்டபம் தோன்றியது. அங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் அவனுக்கு முன்னால், பல வீரர்கள் ஆயுதங்களோடு தலைகுனிந்தபடி நிற்பதை அவனது அகக்கண்கள் கண்டன.

“வேள்வியாளன் இன்னும் வரவில்லையா?” என்று கேட்கும் தன் சொந்தக் குரல் அவனுக்கும் கேட்டது.

அடுத்த நொடி... ஒரு சிறுவன் ஓடி வர, அவனைத் தொடர்ந்து இன்னொரு சிறுவன், “அண்ணா!” என்று கூப்பிட்டபடி ஓடி வரும் பாலப்பருவக் காட்சி!

வசீகரனின் இதயம் வெடித்துவிடும்போல் துடித்தது.

தன் தம்பி... தன் சொந்த உடன்பிறப்பு!

‘வேள்வியாளன் என் தம்பி! என் ரத்தம்!’

வசீகரனின் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது.

அவனுக்குள் சில நினைவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றியபடி இருந்தன. ஆனால், அந்தத் தம்பியைத் தான் என்ன செய்தோம் என்ற கொடூரமான உண்மை அவனுக்கு தெரியவரும்போது...

அதை எதையும் கவனிக்காமல், பின்தங்கி இருந்த சுனையாழியின் கண்ணில் ஒரு மூலிகை படவும், செடியின் அருகில் மண்டியிட்டாள்.

டாக்டரான அவளது விரல்கள் அந்த இலைகளைத் தொட்டன. அந்த மூலிகையின் வாசனை அவளது சுவாசத்தில் கலந்த அடுத்த நொடி... அவளது மனக்கண்ணில் ஒரு பழைய குடில் தோன்றியது.

அங்கே மூலிகைகளை ஆராய்ந்துகொண்டிருக்கும் ஓர் இளைஞன்... அவனையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்!

அந்தப் பெண்ணின் உதடுகள் மெல்ல முனுமுனுப்பதை அவளது செவியில் கூர்மையாக விழுந்தது.

“எப்பொழுதும் இம்மூலிகைகளே தங்களுக்குப் பெரியதா? யான் இல்லையா?”

அந்தக் காட்சி மறைந்ததும் சுனையாழி திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது கையிலிருந்த மூலிகை இலை கீழே நழுவியது.

“சுனை! என்னாச்சு?” என்று யாழ்வேந்தன் அவள் அருகே வந்தபடி கேட்டான்.

“ஒன்றுமில்லை...” என்று கூறிய சுனையாழியின் இதயம் சீரற்ற முறையில் துடித்தது.

தாத்தாவின் மருத்துவ முறையில் ஆர்வம் கொண்டிருக்கும் எனக்கு இப்படி ஒரு கனவா? அவளது செவியில் விழுந்த அந்தக் குரலில், மூலிகையின் மீது இருந்த அந்த வெறுப்பு அப்படியே தெரிந்தது!

இளமாறன் ‘நம்பியான்’ எனும் தன் பூர்வகுடி நினைவுகளோடும்...

வசீகரன் ‘வேள்வியாளன் என் தம்பி’ எனும் உறவின் உண்மையோடும்...

சுனையாழி தன் செவியில் விழுந்த அந்த வெறுப்பான குரலோடும்...

ஒரே இடத்தில், ஆனால் வெவ்வேறு நினைவலைகளில் உறைந்து நின்றனர்!

அவர்களைச் சுற்றி அடர்ந்திருந்த காடு, தன் முதல் ரகசியக் கதவைத் திறந்துவிட்டு, அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!

தொடரும்.....
 
Back
Top
Developed and maintained by – Akeshya