• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு -32

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 32

காடு அறிந்த நால்வர்!

காலை நேரத்தின் மெல்லிய இளவெயில், நகரத்தின் செயற்கை எல்லைகளைக் கடந்து, அடர்ந்த காட்டுப் பாதையின் மீது தங்க இழையாய் விழத் தொடங்கியிருந்தது.


சமீபத்தில் பெய்து முடிந்த மழையின் ஈரத்தை இன்னும் ஆழமாகத் தாங்கிக்கொண்டிருந்த செம்மண் பாதையில், வாகனத்தின் சக்கரங்கள் மெதுவாக உருண்டன. பாதையின் இருபுறமும் விண்முட்ட உயர்ந்து நின்ற மரங்கள், சூரியனின் வெளிச்சம் கீழே விழாதபடி தங்களுக்குள் கிளைகளைப் பின்னிப் பிணைத்து அடர்ந்த பந்தல் அமைத்திருந்தன.


நகரத்தின் இயந்திர இரைச்சல்களும், மனிதர்களின் பேச்சொலிகளும், கடைகளின் ஆரவாரங்களும் வெகு தொலைவில் மறைந்துபோயிருந்தன.


காடு நெருங்க நெருங்க...


காற்றின் சலசலப்பு மட்டுமே.


இலைகள் ஒன்றோடொன்று உரசும்போது எழும் மெல்லிய மரங்களின் மூச்சுக்காற்று மட்டுமே.


எங்கோ அடர்ந்த கிளைகளுக்குள் இருந்து கேட்ட பெயர் தெரியாத ஒரு பறவையின் கூரொலி மட்டுமே அந்த அமைதியை ஊடுருவிக்கொண்டிருந்தது.


கார் காட்டின் நுழைவுப் பகுதியை நெருங்கியதும், இளமாறன் அதன் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தினான்.


"இங்கிருந்து கார் போகுறது கஷ்டம். இதுக்கு மேல நாம நடந்துதான் போகணும்..." என்று கூறியபடியே காரின் என்ஜினை அணைத்தான்.


அனைவரும் தங்களது பயணப் பைகளைத் தோளில் மாட்டிக்கொண்டு காரிலிருந்து கீழே இறங்கினர்.


யாழ்வேந்தன் தன் ஷோல்டர் பேக்கை சரிசெய்துகொள்ள, சுனையாழி தன் கையில் இருந்த சிறிய மூலிகை குறிப்புகள் அடங்கிய கையடக்க நோட்பேட்டையும், தாத்தாவின் ஓலைச்சுவடிப் பெட்டியையும் இறுகப் பற்றிக்கொண்டாள்.


முகில்வர்மன் தன் பார்வையைச் சுற்றிலும் சுழலவிட்டான்.


அதே காடு...


அதே பாதைதான்...


ஒரு மாதத்திற்கு முன்பு அவன் ஏதேச்சையாக ட்ரெக்கிங் வந்த அதே இடம்.


ஆனால், ஏதோ ஒன்று மாறியிருந்தது!


அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.


அவனது பார்வை தன்னிச்சையாக மரங்களின் உச்சியை நோக்கி உயர்ந்தது.


அப்போது இளமாறனும் அதே உணர்வோடுதான் காட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கும் தான் எப்போதும் வந்து போகும் காடுபோல அது தெரியவில்லை. ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவன்,


"முகில் சார்..." என்று மெதுவாக அழைத்தான்.


"ம்?"


"நாம கடைசியா இங்க வந்தப்போதுக்கும், இப்ப வர்றதுக்கும் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா?" என்றான்.


முகில்வர்மன் மூச்சை ஆழமாக சுவாசித்துவிட்டு,


"ஆமாம் மாறன்... எனக்கும் அதுதான் தோணுது," என்றான்.


அவன் குரலில் புரியாத ஓர் பாவனை நிலவியது.


"அப்போவும் இதே காட்டுக்குத்தான் வந்தோம். ஆனால், இப்போ வார்த்தைகளில் சொல்லத் தெரியாத ஓர் மாற்றம் தெரியுது..." என்று நிறுத்தியவன், சற்று இடைவெளி விட்டு,


"இப்போ இன்னும் ஆழமான ஒரு அமைதின்னு சொல்லறதைவிட... நிசப்தம்னு சொல்லலாம். காடு இவ்வளவு அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்ல..." என்று முடித்தான்.


இளமாறன் உடனே தொடர்ந்தான்.


"அதுமட்டும் இல்லை முகில் சார்... காடு இன்னும் அடர்த்தியா இருக்கிற மாதிரி தெரியுது. மரங்களெல்லாம் கூட கொஞ்சம் நெருங்கி வந்து நின்ன மாதிரி ஒரு பிரமை... கிட்டத்தட்ட நாம வந்து ஒரு மாதம்தான் இருக்கும். அதுக்குள்ள இவ்வளவு மாற்றமா?" என்று முகில்வர்மனின் அதே நினைப்பை அவனிடமே கேட்டான்.


முகில்வர்மன் தோள்களைக் குலுக்கியபடி,


"காடுதானே... நமக்குத் தெரியாத எத்தனையோ ரகசியங்களைத் தனக்குள்ள வச்சிருக்கும், மாறன்," என்றான்.


அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த யாழ்வேந்தன் லேசாகச் சிரித்துக்கொண்டே,


"நீங்க ரெண்டு பேரும் காட்டைப் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க போல! வாங்கப்பா... முதல்ல உள்ள போகலாம். சூரியன் உச்சிக்கு வர்றதுக்குள்ள நாம கொஞ்சம் தூரமாவது கடந்துடணும்," என்றான்.


"முன் அனுபவம் பேசுது போல, வேந்தன்," என்று மாறனும் முகிலும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


"ஆமாம்னுதான் சொல்லணும்..." என்ற யாழ்வேந்தன், சுனையாழியைக் காட்டி,


"இவளுக்கு அண்ணனா பிறந்த ஒரே காரணத்துக்காக, இவ கூடவே எங்க தாத்தா எழுதிவச்ச மூலிகைகளைத் தேடி அவ போற காட்டுக்கெல்லாம் நானும் குரங்குக் குட்டி போல அவளைத் தொத்திக்கிட்டே போக வேண்டியதா இருக்கு. போன முறை நான் வரல... உங்களுக்கே தெரியுமே என்ன நடந்ததுன்னு!" என்று மூச்சுவிடாமல் பேசி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்த மற்ற இருவருக்குத்தான் மூச்சு வாங்கியது.


பேச்சோடு பேச்சாக அவர்கள் காட்டுக்குள் நடக்கத் தொடங்கினர்.


அவர்களுக்குப் பின்னால் சில அடிகள் இடைவெளியில் வசீகரனும் அமைதியாக வந்துகொண்டிருந்தான். அவனது கூர்மையான கண்கள் சுற்றிலும் இருந்த மரங்கள், பாறைகள், கரடுமுரடான பாதைகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக அளவெடுத்துக்கொண்டிருந்தன.


அவனது மனத்திரையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனை அலைக்கழிக்கும் அந்தப் பழமையான வரைபடத்தின் கோடுகள் ஓடின.


இந்தப் பகுதியை அவன் முதன்முதலில் அடையாளம் கண்டதே அந்த வரைபடத்தின் மூலமாகத்தான்.


அந்த வரைபடம் அவனை ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கித் தூண்டிக்கொண்டே இருந்தது.


அந்த இடத்தில் ஏதோ ஒன்று புதைந்துகிடக்கிறது என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.


அது சாதாரணமான பொருளோ அல்ல...


மிகவும் மதிப்புமிக்க ஒன்றோ...


காலத்தின் பெருவெளியில் மறைக்கப்பட்ட ஏதோ ஒரு ரகசியமோ...


அதைத்தான் இன்னும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.


அவனது இத்தனை வருட அகழ்வாராய்ச்சியில் அவனுக்குத் தோல்வி என்பதே இல்லை.


ஆனால்...


அந்த வரைபடம் அவனுக்குக் காட்டுவது இலக்கை மட்டுமே என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


அந்த இலக்கை அடையத் தூண்டும் அவனது பேராசையே, இறுதியில் அவனுக்குக் கிடைக்கப்போகும் தண்டனை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


ஆனால்... அது என்ன?


அந்த ஒரே ஒரு கேள்விக்கான விடை மட்டும் இத்தனை வருடங்களாக அவனுக்குக் கிடைக்கவே இல்லை.


பலமுறை தேடிவிட்டான்.


பல இடங்களில் தோண்டிப் பார்த்துவிட்டான்.


தொல்லியல் சார்ந்த பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டான்.


ஆனால், அந்த இடத்தின் உண்மையான பூட்டைத் திறக்கும் சாவி மட்டும் அவன் கைகளில் சிக்கவே இல்லை.


இன்றோ...


அதே இடத்துக்குள் அவன் மீண்டும் நுழைகிறான்.


ஆனால், இந்த முறை அவன் தனியாக இல்லை.


தனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த நால்வரையும் அவன் ஊடுருவிப் பார்த்தான்.


அவர்களுக்குள் தனக்குத் தெரியாத ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.


ஆனால், அந்த எண்ணத்தை அவன் அடுத்த நொடியே மனதிலிருந்து உதறித் தள்ளினான்.


அவனுடைய பார்வை மீண்டும் காட்டின் மீது நிலைத்தது.


அதே நேரத்தில்...


சுனையாழி லேசாகத் திரும்பி வசீகரனைப் பார்த்தாள்.


அவனைப் பார்த்த மறுநொடியே அவளது முகத்தில் இருந்த அமைதி கரைந்து, ஒருவித இறுக்கம் அவளுள் பரவியது.


ஹோட்டலில் இருந்தபோது எழுந்த அதே எரிச்சல்...


அதே வெறுப்பு!


இப்போது அது இன்னும் தீவிரமாகியிருந்தது.


ஏன் என்று அவளுக்கே புரியவில்லை.


அவன் தன்னிடம் தவறாக எதுவும் நடக்கவில்லை.


தொந்தரவு செய்யும் வகையில் பேசவும் இல்லை.


ஆனால்...


அவனைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவளது அடிமனதில் ஏதோ ஒரு பெரும் வெறுப்பும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது.


'எதுக்காக இவனைப் பார்த்தாலே எனக்கு இவ்வளவு கோபம் வருது?' என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.


அந்தக் கோபத்தை முகத்தில் காட்டாமல் இருக்க அவள் முயன்றாலும், அவளுடன் நடந்து கொண்டிருந்த யாழ்வேந்தன் தங்கையின் முக மாற்றத்தை உடனடியாக உணர்ந்துகொண்டான்.


"யாழி..." என்று மெதுவாக அழைத்தான்.


அவள் திரும்பி,


"ம்?" என்றாள்.


"கவனம்... முன்னாடி பார்த்துட்டு வா."


"நான் பார்த்துட்டுத்தான் வர்றேன் அண்ணா."


அவளது குரலில் இருந்த இறுக்கத்தை உணர்ந்த யாழ்வேந்தன் மென் சிரிப்புடன்,


"அது இல்லை யாழி... உன் மனசு வேற எங்கயோ அலைபாயுது," என்றான்.


சுனையாழி உடனே அமைதியானாள்.


அவளது பார்வை ஒரு கணம் வசீகரனை நோக்கிச் சென்று மீண்டது.


அதைக் கவனித்த யாழ்வேந்தன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.


இரவில் தங்கை தன்னிடம் பகிர்ந்திருந்த குழப்பங்கள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.


வசீகரனைப் பார்த்தால் ஏன் வெறுப்பு வருகிறது என்பது அவளுக்கே புரியவில்லை.


அதனால், அவன் தங்கையின் மனதை மேலும் குழப்ப விரும்பாமல்,


"யாழி..." என்றான் மீண்டும்.


"என்ன அண்ணா?"


"நாம எதுக்காக இங்க வந்திருக்கோம்னு மட்டும் நினைவில் வச்சுக்கோ. தாத்தாவால கண்டுபிடிக்க முடியாமல் போன மூலிகையைத் தேடி மட்டும்தான் வந்திருக்கோம். வேற எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத... சரியா?"


அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.


"சரி அண்ணா."


அந்த வார்த்தைகள் அவளுக்குள் ஒரு சிறிய தெளிவைத் தந்தன.


அவள் தன் பார்வையை முன்னோக்கித் திருப்பினாள்.


அதே நேரத்தில்...


அவர்கள் அறியாமல், காட்டின் எல்லைக் கோட்டில் ஏதோ ஒரு விசித்திரமான மாற்றம் நிகழத் தொடங்கியது!


முதலில் காற்று முற்றிலும் நின்றது.


மரங்களின் இலைகள் அசைவற்று உறைந்துபோயின.


அடுத்த நொடி...


காட்டின் ஆழத்திலிருந்து புறப்பட்ட ஒரு மெல்லிய குளிர்ந்த காற்று, அவர்களை நோக்கி வந்து தழுவிச் சென்றது.


அது சாதாரணமான காற்று அல்ல...


ஈரமண்ணின் நறுமணத்தோடு கலந்து, அடையாளம் தெரியாத சில அபூர்வ மூலிகைகளின் வாசனையையும் தன்னுடன் சுமந்துவந்த காற்று!


சுனையாழி அந்த வாசனையை உணர்ந்ததும் சட்டென்று உறைந்து நின்றாள்.


"அண்ணா..."


"என்ன யாழி?"


"ஒரு புதுவிதமான வாசனை வருது..."


யாழ்வேந்தன் சுற்றிலும் பார்த்து,


"மூலிகை வாசனையா?" என்றான்.


"ஆமா... அப்படித்தான் இருக்கு."


அவள் ஆழமாக மூச்சை இழுத்தாள்.


அந்த மணம் அவளுக்குப் புதிதாகத் தோன்றவில்லை.


மாறாக, ஏதோ பரிச்சயமான ஒன்றாக இருந்தது.


ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்பதை மட்டும் அவளால் கணிக்க முடியவில்லை.


அதே நேரத்தில், இளமாறன் தன் அறியாமலேயே ஓர் அடியை முன்னால் வைத்தான்.


முகில்வர்மனும் அதே தருணத்தில் முன்னேறினான்.


வசீகரனும் தன் பார்வை நிலைத்திருந்த அதே இடத்தை நோக்கி வந்தான்.


சுனையாழியும் யாழ்வேந்தனுடன் இணைந்து ஓர் அடி எடுத்து வைத்தாள்.


அவ்வளவுதான்!


நால்வரின் பாதங்களும் ஒரே நேரத்தில், ஒரே கணத்தில் அந்தக் காட்டின் எல்லைக் கோட்டைக் கடந்தன!


அவர்களுக்கே அது தெரியவில்லை.


அவர்களின் கண்களுக்கு அது வெறும் சாதாரண மண் பாதையாகத்தான் தெரிந்தது.


ஆனால்...


காட்டுக்கு?


அது வெறும் நான்கு மனிதர்களின் வருகை அல்ல!


பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு...


தன் மண்ணில் மீண்டும் பதிந்த நான்கு பூர்வகுடிகளின் காலடிகள்!


அந்தக் கணத்தில், அமைதியாக இருந்த காற்று திடீரென வேகம் எடுத்தது!


மரங்களின் உச்சியில் இருந்த இலைகள் ஒரே நேரத்தில் பெரும் சலசலப்பை எழுப்பின.


அடர்ந்த கிளைகளுக்குள் மறைந்திருந்த பறவைகள் கூட்டமாகச் சிறகடித்துப் பறந்தன.


எங்கோ தொலைவில் நின்றிருந்த மான் ஒன்று தலையை உயர்த்தி அவர்கள் இருந்த திசையைப் பார்த்தது.


மண்ணில் உதிர்ந்துகிடந்த உலர்ந்த சருகுகள் சுழற்காற்றில் சுழன்று, அந்த நால்வரையும் சுற்றி வந்து வீழ்ந்தன.


சில மரக்கிளைகளில் பூத்திருந்த சிறிய காட்டுமலர்கள், காற்றின் அசைவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தலைகுனிந்து வணங்கின.


வெளியுலகிற்கு அது ஒரு இயற்கையான மாற்றமாகத் தோன்றலாம்.


ஆனால் அந்தக் காடு...


அவர்களை அறிந்திருந்தது!


அவர்கள் யார் என்பதை உணர்ந்திருந்தது!


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் உறைந்த அவர்களின் வாழ்வையும், நிழல்களையும், குருதி வழியும் வலிகளையும்...


அந்தக் காட்டின் நினைவுகள் இன்னும் தன் வேர்களில் சுமந்துகொண்டிருந்தன!


ஆனால்...


அந்த நால்வரும் தங்களைத் தாங்களே உணரும் தருணத்திற்காக அது காத்திருந்தது.


முகில்வர்மன் மட்டும் திடீரென நின்று சுற்றிலும் பார்த்தான்.


அவனுக்குள் மீண்டும் அந்த விவரிக்க முடியாத உணர்வு எழுந்தது.


"என்னாச்சு முகில் சார்?" என்று இளமாறன் கேட்கவும்,


முகில்வர்மன் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு,


"ஒண்ணுமில்லை..." என்று சொல்லி முன்னே நடந்தான்.


ஆனால், அவனது உள்ளம் அதை ஏற்கவில்லை.


இது வெறும் காடு அல்ல...


ஏதோ ஒன்று தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை அவனுள் எழுந்தது.


அதே நேரத்தில், இளமாறனின் கால்கள் திடீரென மண்ணோடு மண்ணாகப் பதிந்து நின்றன.


அவனது மனக்கண்ணில் ஒரு கணம் மின்னல் வெட்டியது!


ஒரு பழமையான பாதை...


மரங்களுக்கும் பாறைகளுக்கும் இடையே மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனின் உருவம்...


அவனது கையில் மின்னும் ஏதோ ஒரு பொருள்...


தொலைவில் அசரீரியாகக் கேட்ட ஒரு குரல்...


"வேள்வியாளரே..."


அவன் திடுக்கிட்டு கண்களை மூடித் திறந்தான்.


எதுவுமே இல்லை!


மீண்டும் அதே காடு...


அதே மரங்கள்...


அதே பாதை!


"மாறன்?" என்று இப்போது முகில்வர்மன் அவனை அழைத்தான்.


இளமாறன் உடனே திரும்பிப் பார்த்து,


"ம்... என்ன?" என்றான்.


"என்னாச்சு?"


"ஒண்ணுமில்லை... திடீர்னு ஒரு சின்ன தலைச்சுற்றல் மாதிரி இருந்தது," என்று சிரித்துச் சமாளித்தான்.


ஆனால், அவனது அடிமனதில் அந்தக் குரல் மட்டும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.


அதே நேரத்தில், சுனையாழியின் பார்வை காட்டின் ஓரத்தில் இருந்த சில விசித்திரமான செடிகளின் மீது விழுந்தது.


அவள் மெதுவாக அவற்றை நோக்கிச் சென்றாள்.


"அண்ணா... இங்க பாருங்க..."


யாழ்வேந்தன் அவளருகே சென்று,


"என்ன யாழி?" என்றான்.


"இந்த இலை... தாத்தாவோட சுவடியில இருந்த விளக்கத்தோட அப்படியே ஒத்துப்போகுது."


அவள் கீழே குனிந்து அந்தச் செடியைக் கவனமாகப் பார்த்தாள்.


அவளது விரல்கள் அதைத் தொட முயன்ற அந்த நொடியில்...


மீண்டும் அவளது உடலெங்கும் ஒரு சில்லென்ற சிலிர்ப்பு பாய்ந்தது.


அவள் உடனே கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.


"என்ன ஆச்சு யாழி?"


"ஒண்ணுமில்லை அண்ணா..."


என்றாலும் அவளது கண்கள் அந்தச் செடியிலிருந்து விலகவில்லை.


சில அடிகள் பின்னால் நின்றுகொண்டிருந்த வசீகரன், இவை அனைத்தையும் தன் கூர்மையான பார்வையால் கவனித்துக்கொண்டிருந்தான்.


அவனது கண்கள் சுனையாழியையும், பிறகு அந்தச் செடியையும், அதன்பின் அவளது கையில் இருந்த ஓலைச்சுவடிப் பெட்டியையும் அளவெடுத்தன.


அவனது மூளையில் ஏதோ ஒரு கணக்கு உருவாகத் தொடங்கியது.


ஐந்து வருடங்களாகத் தன்னை இழுத்துக்கொண்டிருக்கும் இந்த மர்மமான காடு...


இப்போது நால்வரையும் ஒரே நேரத்தில் தன்னுள் அனுமதித்திருக்கிறது!


இதன் அர்த்தம் என்ன?


அவனுக்குத் தெரியவில்லை.


ஆனால்...


இந்தப் பயணம் வெறும் மூலிகைத் தேடலோ, மனநிம்மதியைத் தேடும் பயணமோ இல்லை என்பது மட்டும் அவனுக்குள் ஆழமாகப் பதிந்தது.


முன்னால் நடந்துகொண்டிருக்கும் முகில்வர்மன், இளமாறன், சுனையாழி...


இவர்களுக்கிடையே அறியப்படாத ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதை அவனது ஆறாம் அறிவு எச்சரித்தது.


அதைக் கண்டுபிடிக்க வேண்டும்!


இந்தக் காட்டின் மடியில் புதைந்திருக்கும் அந்த உண்மையைத் தோண்டி எடுக்க வேண்டும்...


அதற்காக எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருந்தாலும் சரி!


அவன் அமைதியாக அவர்களைப் பின்தொடர்ந்தான்.


அவர்களுக்குத் தெரியாமல்...


இந்தக் காட்டின் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு பாதையும், ஒவ்வொரு கல்லும்...


நீண்ட காலமாகத் தவம் கிடந்த ஒரு மாபெரும் சந்திப்புக்குச் சாட்சியாகக் கண்டுகொண்டிருந்தன.


நால்வர்...


ஒரே நேரத்தில்...


மீண்டும் தங்கள் மண்ணில் காலடி வைத்திருந்தனர்!


அவர்களுக்குத் தெரியாமல்...


கடைசிச் சுவடு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியிருந்தது!


தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya