• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 29

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 29

நிஜங்களின் சந்திப்பு!

இளமாறனின் டிராவல்ஸ் அலுவலகத்தில் வீசிய மெல்லிய குளிரூட்டியின் சில்லென்ற காற்றுக்கு நடுவே, அந்த வரவேற்பறை ஒருசில நொடிகள் அசைவற்று உறைந்துபோயிருந்தது.

சுனையாழியின் விழிகள் நாற்காலியில் அமர்ந்திருந்த முகில்வர்மனின் மீதே நிலைத்திருக்க, அவளது இதயத் துடிப்பு இயல்பு நிலைக்கு வரச் சற்று நேரமெடுத்தது.

கனவில் கண்ட அதே ஆளுமை, அதே தீர்க்கமான பார்வை, அதே கம்பீரம்... ஆனால் ராஜதோரணையில்லாமல், நாகரிகத் தோரணையில் அவன் தன் எதிரே மிகச் சாதாரணமாக அமர்ந்திருக்கும் காட்சி, அவளது மனதிற்குள் புதுவிதமான குழப்பத்தையும் விவரிக்க முடியாத வியப்பையும் ஒருசேர விதைத்தது.

‘கனவில் வந்தவன் நிஜத்தில் என் எதிரே நிற்பதா? அதுவும் தாத்தாவின் தேடுதல் தொடர்பான இந்த இடத்தில் இவனைச் சந்திப்பது தற்செயலா அல்லது ஏதேனுமா?’ என்ற விடை தெரியாத கேள்விகள் அவளது சிந்தனையைக் கடுமையாகக் குடைந்துகொண்டிருந்தன.

அவளது உடலும் மனமும் ஒருசேர லேசாக நடுங்கியதை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. அவளது கைகள் தன் தோள்பையின் பட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.

அப்போது நாற்காலியிலிருந்து மிகக் கம்பீரமாக எழுந்த முகில்வர்மன், சுனையாழியை நோக்கிச் சில அடிகள் முன்னே வந்து, தனது ஆளுமையான குரலில்,

“டாக்டர்... நீங்க வர்றது மாறனுக்குத் தெரியுமா? என்கிட்ட சொல்லவே இல்லையே...” என்று மெல்லிய புன்னகையோடு கேட்டான்.

சுனையாழி மெல்லத் தன் சுவாசத்தைச் சீராக்கிக்கொண்டு, தன் குரலில் எட்டிப் பார்த்த தடுமாற்றத்தையும் மனதிற்குள் எழுந்த அதிர்ச்சியையும் மறைத்து இயல்பாகப் பேச முயன்றாள்.

“எனக்கு இந்த வாரத்துல திடீர்னு ஃப்ரீ டைம் கிடைச்சது முகில்வர்மன். அதான் நானும் என் அண்ணனும் சேர்ந்து மறுபடியும் தாத்தா தேடிய அந்தப் பச்சிலை கிடைக்குதான்னு பார்க்க, லாஸ்ட் டைம் பார்த்த அந்த அருவிக்குப் போகலாம்னு பிளான் பண்ணி கிளம்பினோம். எங்களுக்கும் இரண்டு நாளைக்கு முன்னாடிதான் லீவு கன்பார்ம் ஆச்சு... மாறன்கிட்ட சொல்லல. நேர்ல வந்து அவர்கிட்ட சுவடிப் பெட்டியை வாங்கும்போது, அவர் ஃப்ரீயா இருந்தா அவரையும் கூப்பிட்டுக்கலாம்னுதான் எங்க ப்ளான்,” என்றாள் சுனையாழி.

முகில்வர்மன் தன் உதட்டோரம் லேசான புன்னகையோடு,

“எனக்கும் இந்த வீக்கெண்ட் கொஞ்சம் வேலைகள் குறைவா இருந்தது சுனையாழி. சென்னைல அந்த அலைச்சல் வாழ்க்கைக்கு நடுவுல மனசுக்கு ஒரு ரிலாக்ஸேஷன் தேவையா இருந்தது. கடைசியா காட்டுக்குள்ள பார்த்த அருவியைப் பார்க்க மறுபடியும் அங்கே போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துட்டே இருந்தது. அதான் மாறனுக்குக் கூப்பிட்டுப் பேசிட்டு உடனே கிளம்பி வந்துட்டேன்,” என்றான்.

அதுவரை முகில்வர்மனையும் சுனையாழியையும் கவனித்தபடி இருந்த யாழ்வேந்தன், அப்போது அவளுக்குப் பின்னால் நின்றபடி எட்டிப் பார்த்து, முகில்வர்மனைச் சற்றே ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் பார்த்தான்.

முகில்வர்மனின் தோற்றமும், அவனது ஆளுமையோடான அந்தத் தனித்துவமான கம்பீரமும் யாழ்வேந்தனின் கவனத்தை உடனே ஈர்த்தன.

“நீங்க...?” என்று யாழ்வேந்தன் சிறு புன்னகையோடு இழுக்க,

முகில்வர்மன் தன் வலக்கரத்தை நீட்டி,

“நான் முகில்வர்மன். சென்னையில பிசினஸ் பண்றேன்...” என்று சுருக்கமாகவும் கம்பீரமாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“ஓ! நீங்கதான் முகில்வர்மனா? நான் யாழ்வேந்தன்... சுனையாழியோட அண்ணன்,” என்று கூறி முகில்வர்மனுக்குக் கை கொடுத்தான் யாழ்வேந்தன்.

“ஓ! லாஸ்ட் வீக் என்கிட்ட பேசின யாழ்வேந்தன் நீங்கதான்,” என்று கேட்டபடி அவனது கையைப் பிடித்துக் குலுக்கினான் முகில்வர்மன்.

அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த அறையிலிருந்து வெளியே வந்த மாறன், வரவேற்பறையில் சுனையாழி நிற்பதைப் பார்த்ததும் முகத்தில் மலர்ச்சியோடு அருகில் வந்தான்.

“ஹலோ! டாக்டர் மேடம்... வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு வர்றேன்னு சொன்னீங்களா? என்கிட்ட நான் மறந்துட்டேனா?” என்றான் சிறு குழப்பத்தோடு.

“நோ மாறன்... எதிர்பார்க்காம லீவு கிடைச்சது. அதான் என் பாடிகார்டையும் இந்த முறை இழுத்துட்டு வந்துட்டேன். உங்களிடம் இருக்கும் பாக்ஸையும் வாங்கிட்டு, நீங்க ஃப்ரீயா இருந்தா நாளைக்கு உங்களையும் கூப்பிட்டுட்டு அந்த அருவிக்குப் போகலாம்ன்றதுதான் எங்க ப்ளான்,” என்றாள் மறுபடியும்.

“வாவ்! என்ன ஆச்சரியம் இது! நாளைக்கு நானும் முகில் சாரும் அங்கே போறதாதான் இப்ப பேசிட்டு இருந்தோம். சார் கூட இப்பதான் வந்தாங்க,” என்றான் முகில்வர்மனையும் சுனையாழியையும் மாறி மாறிப் பார்த்தபடி.

“மன்னிக்கவும்... நான் ஒருத்தன் இங்க இருக்கேன்,” என்றான் யாழ்வேந்தன்.

‘யார்ரா இந்தக் கோமாளி?’ என்ற ரீதியில் இளமாறன் அவனைப் பார்த்துவைக்க,

“சுனையாழி இளமாறனிடம் என்னோட பாடிகார்ட்னு சொன்னேனே... என்னோட அண்ணன் யாழ்வேந்தன்.”

“அட! நம்ம டாக்டர் சாரா? உங்க குரலை என்னால கண்டுபிடிக்க முடியல,” என்றான் அவனிடம் கை குலுக்கியபடி மாறன்.

“எதுக்கு நின்னுட்டே இருக்கீங்க? உட்காருங்க,” என்று சொல்ல,

முகில்வர்மன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

“இருக்கட்டும் மாறன். காலையில நாம சொன்ன நேரத்துக்குச் சந்திப்போம். நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குப் புறப்படுறேன்,” என்று கூறிவிட்டு, மேசையின் மீதிருந்த தன் தோள்பையை எடுத்தான்.

உடனே யாழ்வேந்தன் குறுக்கிட்டு,

“முகில்வர்மன்... நீங்க எந்த ஹோட்டல்ல தங்கியிருக்கீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

முகில்வர்மன் நெல்லையின் பிரபல நட்சத்திர ஹோட்டலின் பெயரைக் கூறினான்.

யாழ்வேந்தன்,

“அடடே! நாம எல்லாரும் ஒரே இடத்துலதான் தங்குறோமா? நாங்களும் அதே ஹோட்டல்லதான் ரூம் புக் பண்ணியிருக்கோம். அப்படின்னா வாங்க, நாம ஒண்ணாவே ஹோட்டலுக்குப் போவோம்,” என்றான்.

அதன்பின்னர் மாறனைப் பார்த்த யாழ்வேந்தன்,

“மாறன் சார், நீங்களும் இன்னைக்கு நைட்டு எங்ககூட டின்னருக்கு ஜாயின் பண்ணிக்கோங்களேன். சாப்பிட்டுக்கிட்டே நாளைக்கான பயணத்தைப் பத்தி இன்னும் தெளிவா பேசிடலாம்,” என்றான்.

மாறன் சற்று யோசித்துவிட்டு,

“தாராளமா வர்றேன். நீங்க ஹோட்டலுக்குப் போங்க. நான் ஆபீஸ் வேலையை முடிச்சுட்டு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்கே வந்துடுறேன்,” என்றான்.

“மாறன் வரும் போது என்னோட அந்தச் சுவடிப் பெட்டியையும் எடுத்துட்டு வாங்க,” என்று சுனையாழி சொல்ல, மாறன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.

அதன்பின் மாறனின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, அந்த நட்சத்திர ஹோட்டலை நோக்கிச் சென்றனர் மற்ற மூவரும்.


மாலை நேரத்தின் பொன்னிற வெளிச்சம் மெல்ல மறைந்து, நெல்லை நகரின் இரவு விளக்குகள் சுடரத் தொடங்கியிருந்தன.

தெருக்களில் வாகனங்களின் நடமாட்டமும், மனிதர்களின் சலசலப்பும் இரவின் குளிர்ச்சியோடு கலந்து வீசின. தெருவோரக் கடைகளின் காரசாரமான வாசனையும், சுற்றிலும் பரவியிருந்த மாலை நேரத்து அமைதியும் அந்த நெல்லை நகருக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தன.

ஹோட்டலை அடைந்ததும் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆடம்பர அறைகளுக்குச் சென்று, நீண்ட தூரப் பயணக் களைப்பைப் போக்கிக் குளித்துத் தயாராயினர்.

இரவு எட்டு மணியளவில், திட்டமிட்டபடி ஹோட்டலின் பிரம்மாண்டமான உணவக அரங்கில் ஒன்றுகூட முடிவெடுத்தனர். உணவகத்தின் மெல்லிய இசையும், கண்ணாடியிழை விளக்குகளின் வெளிச்சமும் அந்த இடத்தை மிகவும் ரம்மியமாகக் காட்டின.

சுனையாழியும் யாழ்வேந்தனும் முதலில் கீழே இறங்கி உணவகத்திற்கு வந்தனர். சிறிது நேரத்தில் முகில்வர்மனும், அவரைத் தொடர்ந்து தன் வேலைகளை முடித்துக்கொண்டு மாறனும் வந்து சேர்ந்தனர்.

நால்வரும் உணவகத்தின் நடுவே இருந்த ஒரு பெரிய வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்தனர். சுடச்சுட உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, நாளை மீண்டும் செல்லவிருக்கும் அந்த அடர்ந்த வனப்பகுதியைப் பற்றியும், காட்டின் ரம்மியமான சூழல் பற்றியும், அருவியின் அழகைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

சுனையாழி அமைதியாக உணவை மேசையில் அடுக்கிக்கொண்டிருந்த வேளையில், முகில்வர்மனின் பார்வை உணவகத்தின் நுழைவாயிலை நோக்கித் தற்செயலாகத் திரும்பியது.

அங்கே கம்பீரமான தோற்றத்துடன், அதே சமயம் ஆழ்ந்த யோசனையோடு உணவகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தான் வசீகரன்.

அவனைக் கண்டதும் முகில்வர்மனின் புருவங்கள் லேசாக உயர்ந்தன. அவனது நினைவலைகள் முன்பு இதே ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் நடந்த சம்பவத்தை நோக்கிச் சென்றன.

‘அட... அந்தக் கருப்பு கார்க்காரன் போல இருக்கே...’ என்று யோசித்த முகில்,

“ஹலோ! சார்... இங்க பாருங்க,” என்று வசீகரனை நோக்கிக் கை ஆட்டினான்.

அதை கவனிக்காத வசீகரன், ஒரு தனி மேசையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு அருகில் இருந்த யாழ்வேந்தன் அவனது கையைப் பிடித்து நடையைத் தடை செய்தான்.

“ஹலோ சார்...!” என்றான்.

வசீகரன் நிதானமாகத் திரும்பிப் பார்த்தான். அவனது கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த யாழ்வேந்தனைப் பார்த்தவனின் பார்வை சட்டெனக் கூர்மையானது.

அவனுக்கு நேர் எதிரில் அமர்ந்திருப்பவன் முகில்வர்மன் என்பதை அவனது கூர்மையான கண்கள் ஒருகணம் ஆராய்ந்தன.

“நினைவிருக்கா? நாம ஏற்கனவே மீட் பண்ணியிருக்கோம்... இந்த ஹோட்டல் கார் பார்க்கிங்ல! உங்களோட அந்தப் பழங்காலத்து விண்டேஜ் காரைப் பார்த்து விசாரிச்சேன் இல்லையா?” என்று முகில்வர்மன் புன்னகையோடு கேட்டான்.

வசீகரனின் உதடுகளில் ஒரு மெல்லிய சிரிப்பு அரும்பியது.

“ஆமாம்... ஞாபகம் இருக்கு. நீங்க அன்னைக்கு அந்தக் காரை ரொம்ப ஆர்வமா பார்த்துட்டு இருந்தீங்க,” என்றான் வசீகரன், தான் எதுவும் அறியாதவனைப் போல மிகவும் இயல்பாக.

“எஸ்! என் பேரு முகில்வர்மன். நீங்க இங்க தனியாவா வந்திருக்கீங்க?” என்று முகில்வர்மன் கேட்க,

“ஆமாம், சென்னைல இருந்து ஒரு சின்ன பிசினஸ் ட்ரிப் விஷயமா வந்தேன். என் பேரு வசீகரன்,” என்று தன் பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

யாழ்வேந்தன் சற்றும் யோசிக்காமல்,

“அடடா... தனி மேசையில எதுக்குச் சார் சாப்பிடணும்? நாங்க இங்க பிசினஸ் ட்ரிப்புக்கு வரல. ஊர் சுத்த வந்திருக்கோம். வாங்க, எங்ககூட டின்னர் ஜாயின் பண்ணிக்கோங்க. நீங்க வேற முகில் சாருக்குத் தெரிஞ்சவரா இருக்கீங்க. சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்,” என்று மிக இயல்பாக அழைத்தான்.

முகில்வர்மனும்,

“ஆமாம், எதுக்குத் தனியா உட்காரணும் வசீகரன்? உட்காருங்க. உங்க காரைப் பத்தியும் பேசுவோம்,” என்றான் சிறு புன்னகையோடு.

வசீகரன் ஒரு கணம் யோசிப்பது போலக் காட்டிவிட்டு,

“பரவாயில்லை... உங்களுக்குத் தொந்தரவா இருக்காதே?” என்றான்.

“அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை சார், வாங்க!” என்று இளமாறனும் அவனுக்குத் தன் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினான்.

வசீகரன் மேசையை நெருங்கியதும், அங்கே அமர்ந்திருந்த சுனையாழியின் மீது அவன் பார்வை விழுந்தது.

அதே நேரம் சுனையாழியும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். காரணம் தெரியாமலேயே அவனது முகம் அவளுக்குப் பிடிக்காமல் போனது.

சுனையாழியின் பார்வையும் வசீகரனின் பார்வையும் ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்தன!

அந்த ஒரு நொடி சந்திப்பில், இருவரின் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத மின்னல் வெட்டி மறைந்தது.

யாரோ முன்பின் அறியாத ஓர் அந்நியனைப் பார்ப்பது போல இல்லாமல், சுனையாழியின் பார்வையில் வெறுப்பின் சாயல் அப்பட்டமாகத் தெரிவதை வசீகரன் உணர்ந்தான்.

அவனது நெஞ்சில் சொல்லமுடியாத ஓர் அதிர்வு வந்து போனது.

அந்தப் பார்வை நிச்சயம் அவனை எச்சரித்தது.

அதே நேரம், வசீகரனுக்கு தன் நீண்ட தேடலுக்கான விடை இந்தச் சந்திப்பில் ஒளிந்திருப்பதை அவனுக்குள் இருந்து ஏதோ ஒன்று எச்சரித்தது.

ஆனால், இருவருமே அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தனர்.

அதே நேரம் உணவும் வந்துவிட, அனைவரும் உணவை உண்ணத் தொடங்கினர். பேச்சு இயல்பாக நகரத் தொடங்கியது.

“நீங்க நெல்லையில என்ன பிசினஸ் பண்றீங்க வசீகரன் சார்?” என்று யாழ்வேந்தன் உரையாடலைத் தொடங்கினான்.

வசீகரன் தன் உணவைச் சுவைத்தபடி,

“பெரிய வேலைன்னு எதுவுமில்லை... நான் ஆர்கியாலஜிஸ்ட். ரொம்ப நாளா இந்தப் பக்கம் இருக்கிற மலை, நெல்லையப்பர் கோயில் இதெல்லாம் பார்க்கணும்னு ஒரு ஆசை. எப்பவும் மண்ணைத் தோண்டித் தோண்டி போர் அடிச்சுப்போச்சு. ஒரு மாற்றம் வேணும்னு சென்னைல இருந்து டிரைவ் பண்ணி வந்தேன். நாளைக்கு எனக்கு எந்த பிளானும் இல்லை, ஃப்ரீதான். நீங்க எல்லாரும் என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று ஒன்றும் அறியாதவனைப் போலக் கேட்டான்.

இளமாறன் உற்சாகமாக,

“அட சார், பெரிய ஆள்தான் போல... தொல்பொருள் ஆராய்ச்சி! அப்போ வாங்கலேன். நாங்க நாளைக்கு நெல்லையை ஒட்டி இருக்கிற காட்டுக்கு ட்ரெக்கிங் போகப்போறோம் வசீகரன் சார். நீங்களும் வேணும்னா ஜாயின் பண்ணிக்கோங்க,” என்றான் முகில்வர்மனைப் பார்த்து லேசாகத் தலையசைத்தபடியே.

இதைக் கேட்ட வசீகரன், தன் முகத்தில் லேசான ஆச்சரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“அப்படியா? ட்ரெக்கிங் கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே!” என்றான்.

உடனே யாழ்வேந்தன் இயல்பான தாராள மனப்பான்மையோடு,

“உங்களுக்கு நாளைக்கு எந்த வேலையும் இல்லைனா, ஏன் நீங்களும் எங்ககூட வரக்கூடாது? அஞ்சு பேரா சேர்ந்தா பயணம் இன்னும் ஜாலியா இருக்கும்ல?” என்று கேட்டான்.

வசீகரன் சுனையாழியையும் முகில்வர்மனையும் ஒரு முறை நிதானமாகப் பார்த்துவிட்டு,

“நான் வர்றதுல உங்களுக்கு யாருக்கும் ஆட்சேபனை எதுவும் இல்லையே?” என்று கேட்டான்.

முகில்வர்மன் புன்னகையோடு,

“கண்டிப்பா இல்லை வசீகரன் சார்! நீங்களும் வந்தா நல்லாத்தான் இருக்கும்,” என்றான்.

சுனையாழியும் மெல்லத் தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

“ரொம்ப சந்தோஷம்... அப்படின்னா நாளைக்கு நானும் உங்களோட அந்தக் காட்டுப் பயணத்துல ஜாயின் பண்ணிக்கிறேன். அதிகாலையிலேயே தயாராயிடுறேன்,” என்று வசீகரன் தன் சம்மதத்தைக் கூறினான்.

விதி தன் காய்களை மிகக் கச்சிதமாக நகர்த்தியிருந்தது!

வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு எண்ணங்களோடு புறப்பட்டு வந்த ஐந்து நபர்களும் — சுனையாழி, யாழ்வேந்தன், முகில்வர்மன், வசீகரன் மற்றும் மாறன் — ஒரே மேசையில் அமர்ந்து, ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க ஒப்புக்கொண்டிருந்தனர்.


இரவு உணவு முடிந்து அனைவரும் தங்களின் அறைகளுக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

அறைக்குச் சென்ற சுனையாழி, கதவைப் பூட்டிவிட்டு ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருண்ட வானத்தையும் நெல்லை நகரின் வெளிச்சங்களையும் பார்த்தபடி நின்றாள்.

கனவில் கண்ட முகில்வர்மன் ஒருபுறம்...

இன்று முதன்முதலாகச் சந்தித்த வசீகரனின் மீதான அவளின் வெறுப்பான உணர்வுகள் மறுபுறம்...

அவளது மனதிற்குள் விடை தெரியாத பெரிய கேள்விகளாய் உருவெடுத்தன.

அதே நேரத்தில், தன் சொகுசு அறைக்குச் சென்ற வசீகரன் கதவைப் பூட்டினான்.

உணவகத்தில் இருந்த அவனது மென்மையான, நட்புரீதியான தோற்றம் கணப்பொழுதில் மறைந்தது.

மேசையின் மீது தன் கையடக்க மடிக்கணினியையும், தோள்பையிலிருந்த பழங்கால வரைபடத்தையும் விரித்தான்.

இப்போதும் அந்த வரைபடம் அவனுக்குப் புரியாத புதிராகத்தான் தெரிந்தது.

‘நிச்சயம் இதை வரைந்தவனுக்கு அறிவோடும் திறமையும் சரிசமமாக இருந்திருக்கும்...’ என்று நினைத்தபடியே, தன் ஐபோனை எடுத்து மதனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், வசீகரனின் குரல் மிக அழுத்தமாகவும் அதே நேரம் மெல்லவும் ஒலித்தது.

“ஹலோ மதன், எவ்ரிதிங் இஸ் கோயிங் அக்கார்டிங் டு அவர் பிளான்.”

“எஸ் சார்... ஆனா ஒரு விஷயம். முகில்வர்மன் இப்ப திருநெல்வேலில இருக்கான்.”

“எனக்குத் தெரியும். இப்பதான் ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டோம்,” என்று சொல்லவும்,

மறுமுனையில் இருந்த மதனின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

“என்ன சார் சொல்லறீங்க? நிஜமாவா?”

“ம்ம்ம்... ஆமா,” என்று வசீகரன் நடந்ததைச் சொல்ல,

“அப்போ நாம எதிர்பார்த்த இலக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கா?” என்றான் மதன்.

“ம்ம்ம்... இப்ப நான் சொல்லறதை கவனமா கேளு மதன். இப்போ சென்னையில இருந்து கிளம்பிடு. நாளைக்கு எப்படியும் நாங்க காட்டுக்குப் போக ஏழு இல்ல எட்டு மணி ஆகிடும். அதுக்குள்ள நீ இங்க ரீச் ஆகிடலாம்.

நான் அவங்களோட கிளம்பியதும், அவங்களுக்குத் தெரியாம என்னை ஃபாலோ பண்ணிக்கோ,” என்று சொல்லியபடி போனை வைத்துவிட்டு, அந்தப் பழைய வரைபடத்தைக் கூர்ந்து பார்த்தான்.

அப்படி என்ன ரகசியத்தை இந்த வரைபடம் தாங்கி இருக்கும் என்று யோசித்தபடியே, அதை எடுத்து பத்திரப்படுத்தியவன் படுக்கையில் சாய்ந்தான்.

இவர்களின் வருகையை எதிர்பார்த்தபடி, அந்த அடர்ந்த வனப்பகுதியும், அதன் நெஞ்சில் புதைந்து கிடக்கும் நூற்றாண்டுகால இரகசியங்களும் சாட்சிகளாகக் காத்திருந்தன...

தொடரும்.....
 
Back
Top
Developed and maintained by – Akeshya