• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 26

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 26

தடைப்பட்ட பயணமும்... அரச சிம்மாசனமும்!

வசீகரனின் கம்பீரமான குரல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

அவனது மாநிறத்திற்கும் சற்றே கூடுதலான நிறம் கொண்ட முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை. தோள்களைத் தொட்டும் தொடாமலும் இருக்கும் நீண்ட, அடர்ந்த தலைமுடியைக் கையால் மெதுவாக ஒதுக்கிவிட்டபடி, தன் இடது காதில் இருந்த தங்கக் கடுக்கனை லேசாகத் தொட்டுச் சுழற்றியவனின் கூர்மையான மூக்கின் நுனியில் லேசாக வியர்வை அரும்பியிருந்தது.

கண்களில் எப்போதும் இருக்கும் அதே கூர்மையும், அதிகாரத் தோரணையும் சற்றும் குறையாமல் அப்படியே தேங்கிக் கிடந்தன.

மதன்... நான் கிளம்புறேன். நீ முகில்வர்மனை மட்டும் முழுக் கண்காணிப்புல வச்சுக்கோ!

வசீகரனின் அழுத்தமான அதிகாரக் குரலைக் கேட்ட மதன் உடனடியாகத் தலையசைத்து, தன்னை அவனது கட்டளைகளுக்கு ஒப்புக்கொடுத்தான்.

அவன் தினமும் எங்கே போறான், யாரைச் சந்திக்கிறான், அவனோட ஒவ்வொரு நகர்வும் என்னன்னு எனக்கு எந்த நேரமா இருந்தாலும் அப்டேட் வந்துட்டே இருக்கணும். அவனோட ஷெடியூலைத் துல்லியமாகச் சேகரிச்சு எனக்கு போன்ல ரிப்போர்ட் பண்ணு! என்று மீண்டும் ஆணித்தரமாகக் கட்டளையிட்டான் வசீகரன்.

தனிப்பட்ட முறையில் வசீகரனுக்காக ரகசியத் தகவல்களைச் சேகரித்துத் தரும் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ட்டாக இருக்கும் மதனுக்கு, வசீகரனின் இந்தக் கட்டளை எவ்வளவு முக்கியமானது என்பது நன்றாகவே புரிந்தது.

மதனுக்கும் வசீகரனின் பெரிய பிசினஸுக்கும், அலுவலக நிர்வாகத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. வசீகரன் தனிப்பட்ட முறையில் என்ன அசைன்மென்ட் அல்லது வேலையைக் கொடுக்கிறானோ, அதற்குத் தேவையான தகவல்களைச் சந்துபொந்தெல்லாம் தேடிப் பிடித்துத் தருவது மட்டுமே மதனின் பிரதான வேலை.

சரிங்க சார்... கண்டிப்பா நான் பார்த்துக்கிறேன். நீங்க கேக்குற எந்தச் சின்னத் தகவலும் விடுபடாத அளவுக்கு நான் பின்னாடியே இருந்து தகவல்களைச் சேகரிச்சு உங்களுக்கு உடனுக்குடன் அப்டேட் பண்றேன், என்றான் மதன் உறுதியான குரலில்.

சரி, நான் கிளம்புறேன். நீ பார்த்துக்கோ...என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, வசீகரன் தன் தோளில் கிடந்த அந்தப் பழமையான ஷோல்டர் பேக்கைச் சரிசெய்தபடி அங்கிருந்து கம்பீரமாக நகர்ந்தான்.

தன் கறுப்பு நிற ஃபெராரியில் ஏறி அமர்ந்த வசீகரன், இன்ஜினை முடுக்கினான். வாகனம் கர்ஜனையுடன் நகரத் தொடங்கியது.

அவனது கவனம் முழுவதும் தன் பைக்குள் பத்திரமாக இருக்கும், ஐந்து வருடங்களுக்கு முன் அவன் கையில் கிடைத்த அந்த மஞ்சள் நிற வரைபடத்தின் மீதும், அதில் மறைந்திருக்கும் ரகசியத்தின் மீதும் மட்டுமே தீவிரமாக இருந்தது.

தன் வாழ்வில் இழந்த அமைதியையும், தன் அப்பாவின் தேவையில்லாத பயத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற வெறி, அவனது இரத்தத்தை கொதிநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருந்தது.

ஆனால்... விதி அவனது திட்டமிட்ட பயணத்தை அத்தனை சுலபத்தில் அனுமதிக்கத் தயாராகவே இல்லை என்பதே நிஜம்.

கார் சென்னையைத் தாண்டி நெடுஞ்சாலையில் அதிவேகமாக விரைந்து கொண்டிருந்தபோது, வசீகரனின் அலைபேசி சத்தமாக ஒலித்தது.

காரின் டாஷ்போர்டு திரையில் "மாம்" என்ற பெயர் ஒளிர, ஸ்டீயரிங்கில் இருந்த பொத்தானை அழுத்தி, ப்ளூடூத் இணைப்பில் அழைப்பை ஏற்றான்.

"சொல்லுங்கம்மா."

மறுமுனையில் மாலினி தேவியின் குரல் பதற்றத்திலும் அழுகையிலும் தடுமாறிக் கொண்டிருந்தது.

"வசீ... நீ இப்ப எங்க இருந்தாலும், உடனே மும்பைக்கு வா! உங்க அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு முடியாம போயிடுச்சு... நெஞ்சு வலியில ரொம்பக் கஷ்டப்படுறாருடா. டாக்டர்ஸ் வந்து பார்த்துட்டு இருக்காங்க. நீ என்ன வேலையா இருந்தாலும் சரி, அதை அப்படியே விட்டுட்டு உடனே மும்பை வீட்டுக்கு வா! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வசீகரனின் முகம் சட்டென்று பதற்றத்தைத் தத்தெடுத்தது. அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

மனதிற்குள் பெரும் தவிப்பும், சிறு தடுமாற்றமும் எழுந்தாலும், பிரதாப் ராஜின் திடீர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தன் முடிவை மாற்ற வேண்டியதாயிற்று.

தன் தேடலைவிட தந்தையின் உயிர் இப்போது முக்கியமாகப் பட்டது.

"அம்மா, தேவையில்லாம பதறாதீங்க... நான் உடனே மும்பைக்குக் கிளம்பி வர்றேன், என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

காரை உடனடியாக அடுத்த யூ-டர்னில் திருப்பி, அதிவேகத்தில் ஏர்போர்ட்டை நோக்கிப் பறந்தான்.

அவனது தேடும் பயணம் அந்த இடத்திலேயே தற்காலிகமாகத் தடைபட்டது.


அடுத்த சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, வசீகரன் மும்பையில் உள்ள தன் பிரம்மாண்டமான மாளிகையை அடைந்தான்.

அங்கிருந்த குடும்ப மருத்துவர்கள் பிரதாப் ராஜைப் பரிசோதித்து முடித்து வெளியே வந்தனர்.

கடுமையான மன அழுத்தமும், அதிகப்படியான யோசனையும்தான் இதற்குக் காரணம் என்றும், அவருக்குத் தற்சமயம் முழுமையான ஓய்வு தேவை என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

மாலினி தேவியின் கண்களில் இன்னும் கணவனின் உடல்நிலையைப் பற்றிய பயமும் கண்ணீரும் விலகவில்லை.

வசீகரன் நேராகத் தன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

கட்டிலில் சோர்ந்து போய், முகத்தில் அமைதியின்றிப் படுத்திருந்த பிரதாப் ராஜைப் பார்த்ததும், வசீகரனுக்கு அடக்க முடியாத கோபம் தலைக்கேறியது.

"ப்பா... எதுக்கு இப்படி கண்டதையும் நினைச்சு யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?" என்று வசீகரனின் குரலில் கடுமையான கோபமும், சண்டையிடும் தோரணையும் வெளிப்படையாக வெடித்தது.

பிரதாப் ராஜ் எதுவும் பேசாமல், பலவீனமான பார்வையுடன் தன் மகனை ஏறிட்டார்.

அவனது கோபத்தின் பின்னணியில் இருக்கும் கேள்வி என்னவென்று அவருக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

"எதுக்கு இப்போ இந்தத் தேவையில்லாத பயம்? நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு எத்தனை தடவை சொல்றேன்? முகில்வர்மனை விசாரிக்கிறதுக்குத் தனி ஆளையும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அவனோட ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நகர்வும் என் முழுக் கண்காணிப்புலதான் இருக்கு!

அப்புறம் எதுக்கு இப்படித் தேவையில்லாம இல்லாததையும் பொல்லாததையும் நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறீங்க? உங்களுக்கு என்ன வேணும் இப்போ?" என்று பிரதாப் ராஜிடம் சண்டையிடும் குரலில் கேட்டாலும், அந்தக் குரலின் நடுவே இழையோடிய அக்கறையைப் புரியாதவரா பிரதாப்?

அப்போது அவனது தம்பி அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைய, வசீகரன் அவனிடம் திரும்பினான்.

"டேய்... நீ அப்பா கூடவே இரு. அவரை ஒழுங்கா பாத்துக்கோ. அவர் தேவையில்லாம எதையும் யோசிக்காம பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு.

படுத்துத் தூங்குங்கப்பா. நானும் போய்ப் படுக்குறேன். இரண்டு நாளா செம அளைச்சல். காலையில பேசிக்கலாம்,"என்று அதிகாரமாகக் கூறிவிட்டு, பிரதாப் ராஜைத் தன் தம்பியிடம் பொறுப்பாக ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து தன் அறைக்குச் சென்றான்.

இரண்டு நாள் முழுவதும் இருந்த பயணக் களைப்பும், தந்தையிடம் பிடித்த சண்டையின் உக்கிரமும் வசீகரனை வெகுவாக அழுத்த, அவன் தன் அறையிலிருந்த பிரம்மாண்டமான படுக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.

சிந்தனைகள் மெல்ல மெல்ல மங்க, அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் நழுவினான்.


நடுநிசி வேளை...
சுற்றிலும் பேரமைதியும், அடர்ந்த இருளும் நிலவிய அந்த நள்ளிரவில், வசீகரனின் மூளைக்குள் விசித்திரமான, அதே சமயம் மிகப் பிரம்மாண்டமான ஒரு கனவு விரியத் தொடங்கியது!

கனவில்...

பல நூற்றாண்டுகள் பழமையான ஓர் அரண்மனை!

அந்த அரண்மனையின் நடுவே இருந்த தர்பார் மண்டபம் அத்தனை கம்பீரத்தோடும், ஆதிக்கத்தோடும் காட்சியளித்தது.

வானுயர்ந்த பிரம்மாண்டக் கல் தூண்களும், நுட்பமான பழங்காலக் கலை வேலைப்பாடுகளும் நிறைந்து விளங்கிய அந்த மண்டபத்தின் மையப்பகுதியில்... ஒரு சிம்மாசனம் வீற்றிருந்தது.

அது மரத்தால் செய்யப்பட்ட நாற்காலியோ அல்லது கல்லால் ஆன சிம்மாசனமோ அல்ல...

முழுக்க முழுக்க மின்னும் தங்கத்தால் செய்யப்பட்டு, சூரிய ஒளியைப் போலப் பிரகாசமாக ஜொலிக்கும் மாபெரும் தங்கச் சிம்மாசனம்!

அந்தத் தங்கச் சிம்மாசனத்தின் மீது...

மிகப் பெரிய பேரரசனுக்கே உரித்தான பேரதிகாரத் தோரணையோடும், எவராலும் மறுக்க முடியாத கம்பீரத்தோடும் வசீகரன் அமர்ந்திருந்தான்!

அவனது முகத்தில் அத்தனை ஆளுமையும், எதிரிகளை ஒற்றைப் பார்வையிலேயே நடுங்கச் செய்யும் தீர்க்கமும் நிறைந்திருந்தது.

ஆடையைவிட ஆபரணங்கள் அதிகமாக மின்ன, அவன் ஒரு மன்னனாகவே வீற்றிருந்தான்.

அவனது தங்கச் சிம்மாசனத்திற்கு எதிரே, அந்தப் பரந்த தர்பார் மண்டபத்தில் சிலர் தலைகுனிந்து, நடுங்கியபடி நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், எதிரே நிற்பவர்களின் முகங்களோ, உடலமைப்போ வசீகரனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவை வெறும் அசைந்தாடும் கருப்பு நிழல்களாகவே உறைந்து கிடந்தன.

தங்கச் சிம்மாசனத்தில் வீற்றிருந்த வசீகரனின் கம்பீரக் குரல், தூய்மையான செந்தமிழில் அந்த அரண்மனையின் பிரம்மாண்டத் தூண்களில் எதிரொலித்து அதிரவைத்தது.

"தகவல் ஏதேனும் கிடைத்ததா உங்களுக்கு?! யான் பணித்தவாறு நிலப்பகுதியை ஆராய்ந்து பார்த்தீர்களா?!"

எதிரே இருந்த நிழல்கள் அச்சத்தோடு தலைகுனிந்து அமைதியாக நிற்க, வசீகரனின் கோபம் எல்லை மீறியது.

தங்கச் சிம்மாசனத்தின் சிங்க முகம் செதுக்கப்பட்ட கைப்பிடிகளைத் தன் கரங்களால் இறுக்கிப் பிடித்தான். அவனது நரம்புகள் புடைத்தன.

"யான் அளித்த அந்த நிலவரைபடத்தைக் கொண்டு தேடிப் பார்த்தீர்களா?! அதன் ரகசியம் ஏதேனும் இத்தனை நாட்களாக உங்களுக்குப் புலப்படவில்லையா?! இத்தனை நாட்களாக அங்கே என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?!

சிம்மாசனத்திலிருந்து ஆவேசமாக எழுந்த வசீகரன், அந்த நிழல்களைப் பார்த்துத் தூய தமிழில் அத்தனை அதிகாரத்தோடு பேச, அந்த மண்டபம் முழுவதும் அதிர்ந்து அடங்கியது.

"இதனையும்கூட உங்களால் தேடிக் கண்டறிய இயலவில்லை என்றால்... நீங்களெல்லாம் எதற்கு உளவுப் படையைச் சேர்ந்தவர்கள்?! என்றும் கல்வி சிறந்தவர்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?!"

அவனது அந்த ஆவேசமான அதட்டல் குரல் அந்த அரண்மனை முழுவதும் எதிரொலித்து அதிர்வை ஏற்படுத்த...

"ஹ்ஹ்ஹ்!

என்று மூச்சிரைக்க, வசீகரன் திடுக்கிட்டுக் கனவிலிருந்து படபடப்புடன் விழித்தெழுந்தான்!

படுக்கையில் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்த அவனது நெற்றியில் வியர்வை வழிந்தோடியது.

நள்ளிரவு அமைதியில் அவனது மூச்சுக்காற்று சீரற்று, ஆஸ்துமா நோயாளியைப் போல வேகமாக இயங்கியது.

கட்டிலில் அமர்ந்தபடி தன் இரு கரங்களையும் இறுக்கமாக மூடினான் வசீகரன்.

அந்தத் தங்கச் சிம்மாசனமும், தூய தமிழில் உளவாளிகளை அதட்டிய அந்த ஆதிக்க உணர்வும், அவனுக்குள் சொல்ல முடியாத ஓர் அதிர்வை உண்டாக்கியது.

அந்த அரண்மனை இருந்த இடம்...

அதை நினைத்த மாத்திரத்தில்...

அவனது உடல் முழுவதும் வியர்வையால் நனையத் தொடங்கியது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya