• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 25

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 25

சுவடி காட்டும் பாதை!

அதிகாலைப் பொழுது விடிந்திருந்தாலும், மாறனின் மனதைச் சூழ்ந்திருந்த அந்த அடர்ந்த இருள் விலகவே இல்லை.

இரவில் கண்ட நிஜம் போலான கனவு, அவனை ஒரு நொடி கூட நிம்மதியாக இருக்க விடவில்லை. தன் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆபீஸ் அறையில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதும், கஸ்டமர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோதும், அவனது சிந்தனை முழுக்க முழுக்க அந்த ஒற்றைக் கனவைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

பயம் ஒரு மனிதனைத் தொற்றிக் கொள்ளும்போது, அவன் தன்னைத்தானே சந்தேகிக்கத் தொடங்குவான் என்பார்கள். மாறனுக்கும் அப்படித்தான் இருந்தது.

கனவில் அவன் கண்ட அந்தக் காட்சி அவனது உடலை மீண்டும் ஒருமுறை சிலிர்க்க வைத்தது.

அதே அடர்ந்த காடு... அதே சீறிப் பாயும் அருவிக்கரை... ஆனால், அங்கே அவன் கண்ட காட்சிதான் அவனது தூக்கத்தைக் கலைத்தது. அந்த அருவிக்கரையோரம் அவனைப் போலவே இன்னொரு உருவம் நின்று கொண்டிருந்தது.

ஆமாம், அச்சு அசலாக அவனது முகச் சாயல், அவனது உடலமைப்பு! ஆனால், அந்த உருவம் அணிந்திருந்த உடை இப்போது உள்ள ட்ரெண்டிங் ஆடைகள் கிடையாது. அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதர்களின் உடை நடை.

அந்த உருவம் அந்த அருவியின் அத்தனை பகுதிகளிலும் சென்று, யாரையோ தேடியபடி இருந்தது. கையில் வைத்திருந்த சிறு மரப்பெட்டியில் இலை, வேர், கொடிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு, தேடியபடி நடந்ததை அவன் கண்டான்.

அங்கே சுற்றிலும் நிலவிய சூழல், அவனுக்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத பயத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருந்தது. அவனால் நினைவுபடுத்த முடியாத ஒரு பகுதி அவன் கனவில் இருந்ததை அவன் அப்போது அறியவில்லை...

‘என்ன இது... என்னைப் போலவே ஒரு உருவம்? ஆனா, உடைகள் எல்லாம் பழங்காலத்தது மாதிரி இருக்கு! இதுக்கும் நேத்து அம்மா, நான் எங்கையோ இருந்து எடுத்துட்டு வந்ததா குடுத்த அந்த ஓலைச்சுவடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?’

மாறனின் கை தானாகவே நெஞ்சைத் தொட்டுப் பார்த்தது. அவனது இதயத்துடிப்பு சீரற்ற முறையில் எகிறிக் கொண்டிருந்தது.

மாறன் ஆபீஸ் நாற்காலியிலிருந்து எழுந்து, நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது யோசனைகள் மேலும் தீவிரமடைந்தன.

‘அந்தக் கனவுல அந்த உருவம் கையில் வைத்திருந்த அந்தப் பெட்டியில் இலை தழைகள், வேர், பட்டைகள் ன்னு அடுக்கப்பட்டு இருந்தது. பச்சிலை... மூலிகை... என்னைப் போலவே இருந்தவன் ஒருவேளை நாட்டு வைத்தியனா?’

இந்தக் கேள்வி தோன்றிய அந்த நொடியில், அவன் மூளைக்குள் மின்னி மறைந்தது சுனையாழியின் முகம்.

அடுத்த கணமே, அவனுக்குச் சுனையாழியின் தாத்தா பற்றிய நினைவும், அவரோட பரம்பரை ஓலைச்சுவடி பற்றிய ஞாபகமும் சட்டென்று மின்னலாக வந்து மோதியது.

‘ஆமா... சுனையாழியோட தாத்தா நாட்டு வைத்தியர்! அவரிடம் இருந்த ஓலைச்சுவடி பாக்ஸ் என்னிடம் இருக்கு இப்போ. நான் எங்க கண்டுபிடிச்சேன்னே தெரியாத ஒரு ஓலைச்சுவடியை எடுத்து வந்து வைத்திருந்திருக்கேன். அந்த ஓலைச்சுவடியும் இப்போ அந்தப் பாக்ஸ்ல வைத்திருக்கிறேன். இப்ப வந்த கனவுக்கும் இந்த ஓலைச்சுவடிக்கும்... ஏதாவது தொடர்பிருக்குமா?’

அந்த எண்ணம் உதித்த அடுத்த வினாடி, மாறனுக்குள்ளே ஒரு அவசரம் தொற்றிக் கொண்டது.

உடனடியாக ஆபீஸ் ரூமின் பின்பக்கக் கதவைத் திறந்து வீட்டிற்குச் சென்று அந்த மரப்பெட்டியைத் திறந்து, ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் எழுந்தது. ஆபீஸ் பையனிடம் சிறிது நேரம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு விரைந்தான்.

வீட்டிற்குள் நுழைந்தவன், நேராகத் தன் அறைக்குச் சென்றான். சுனையாழியின் தாத்தாவோட சுவடி பாக்ஸை அலமாரியில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கையில் எடுத்தான்.

அவன் தன் விரல்களால் அந்த மரப்பெட்டியின் பூட்டைத் திறந்து, உள்ளே இருக்கும் ஓலைச்சுவடியைத் தொடுவதற்குத் தன் கையை நீட்டிய... அதே நொடியில், அவனது அலைபேசி சத்தமாக அதிர்ந்து அலறியது!

மாறன் சட்டென்று அதிர்ந்தான். பதற்றத்துடன் தன் பையிலிருந்த போனை எடுத்துப் பார்த்தான்.

திரையில் ‘முகில் சார்’ என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது!

மாறன் மிக நிதானமாக, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு போனை அட்டெண்ட் செய்தான்.

“ஹலோ, மாறன்...” – மறுமுனையில் முகில்வர்மனின் கம்பீரமான, அதே சமயம் தீர்க்கமான குரல் கேட்டது.

“சொல்லுங்க சார்! நல்லா இருக்கீங்களா?”

“ம்ம்ம்... நல்லா இருக்கேன் மாறன். விஷயத்துக்கு வர்றேன்... நான் அடுத்த வாரம் பிசினஸ் வேலையெல்லாம் முடிச்சுட்டு மறுபடியும் அந்தக் காட்டுப் பகுதிக்கு வரலாம்னு இருக்கேன். நீங்க எந்த டேட்ல ஃப்ரீயா இருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா, நான் அன்னைக்கே கிளம்பி வந்துடுறேன். லாஸ்ட் டைம் போல என்னை அதே ஹோட்டல்ல இருந்து பிக்கப் பண்ணிக்கோங்க. இந்த முறையும் நீங்களே வந்தா நல்லா இருக்கும்.”

முகில்வர்மனின் வார்த்தைகளைக் கேட்ட மாறனுக்குள் ஒரு நொடி ஆச்சரியம் பாய்ந்தது. தான் இந்தக் காட்டைப் பற்றியும், சுவடியைப் பற்றியும் யோசித்து, சுவடியைத் தொடப் போன அதே நேரத்தில் முகில்வர்மன் காட்டுக்கு வர அழைப்பது அவனுக்குள் விசித்திரமாக இருந்தது.

“நிச்சயமா சார்! அடுத்த வாரம் எனக்கு டிராவல்ஸ் புக்கிங் வந்தாலும், நானே வந்து உங்களை ஹோட்டல்ல பிக்கப் பண்ணிக்கிறேன் சார்!” என்றான் மாறன்.

“தேங்க்ஸ் மாறன். டேட் கன்ஃபர்ம் ஆனதும் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்,” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் முகில்வர்மன்.

போனைக் கீழே வைத்த மாறன், “என்னடா இது... இவரும் திடீர்னு காட்டுக்கு வரேன்னு சொல்றார்...” என்று முணுமுணுத்தபடி, மீண்டும் மேசையின் மீது இருந்த அந்த ஓலைச்சுவடிப் பெட்டியை நோக்கித் தன் கையை நீட்டினான்.

அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்து, ஓலைச்சுவடியைத் தொடப் போன அந்த அடுத்த நொடியிலும்... அவனது போன் மீண்டும் சத்தமாக ஒலித்தது!

மாறன் சற்றே ஆச்சரியத்துடன் போனை எடுத்துப் பார்த்தான்.

திரையில் ‘டாக்டர்’ என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

மாறன் போனை ஆன் செய்து காதில் வைத்தவன், “ஹலோ... டாக்டர் மேடம்?” என்றான், அவள் பேசும் முன்னே.

“இளமாறன்! எப்படி இருக்க? போன் நம்பர் ஞாபகம் வச்சி இருக்கீங்க... சூப்பர்!” என்று சுனையாழியின் சுறுசுறுப்பான குரல் ஒலித்தது.

“நல்லா இருக்கேன் மேடம். சொல்லுங்க, திடீர்னு போன் பண்ணிருக்கீங்க?”

“திடீர்னு எல்லாம் இல்லை மாறன். அடுத்த வாரம் எனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைச்சிருக்குடா! என் அண்ணன் யாழ்வேந்தன்கிட்டயும் லீவ் போடச் சொல்லிட்டேன். நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் அங்க வர்றோம். காட்டையும், அந்த மூலிகை இடத்தையும் மறுபடியும் போய்ப் பார்க்கணும்னு ஒரு பிளான். நீங்க ஃப்ரீயா இருந்தா உங்க டிராவல்ஸ்ல ஒரு காரை என் பேர்ல புக் பண்ணிடுங்க,” என்றாள்.

அவளின் பேச்சு காதில் விழுந்த அடுத்த நொடி, முகில்வர்மன் வந்துபோனான் மாறனின் மூளைக்குள்.

‘நிஜமாவே இது கோ-இன்சிடென்ட்தானா இல்ல... எதுவுமே எங்களை அங்க இழுக்குதா?’

என்றவனின் எண்ண ஓட்டத்தில், சில நிமிடங்களுக்கு முன்னால் முகில்வர்மன் கூப்பிட்டான்... இப்போ சுனையாழி கூப்பிடுகிறாள்... இருவருமே அடுத்த வாரம் காட்டுக்கு வரத் திட்டமிடுகிறார்கள்! என்ற நினைப்பு வர,

மாறன் லேசான சிரிப்புடன் சொன்னான்,

“என்ன மேடம், இது அதிசயமா இருக்கு! இப்பதான் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி முகில்வர்மன் சார் போன் பண்ணி, அடுத்த வாரம் காட்டுக்கு வரேன்னு சொன்னாரு. அவருக்கும் நான் ஃப்ரீன்னுதான் சொல்லியிருக்கேன்.”

மறுமுனையில் சுனையாழி அதிர்ச்சியுடன்,

“என்னது?! முகில்வர்மன் சாரும் அடுத்த வாரம் வர்றாரா?” என்று கேட்டாள்.

“ஆமா மேடம்! அவரும் வர்றாரு... நீங்களும் வர்றீங்க. அப்போ நாம மூணு பேரும் மறுபடி அந்த அருவியப் பார்க்கப் போறோம்... டாக்டர் சார்கிட்ட சொல்லுங்க, குளிக்கிறதுபோல வரச் சொல்லி,” என்றான் மாறன்.

“நல்ல ஐடியா மாறன்! அப்போ எல்லாருமே ஒரே டைம்ல மீட் பண்ணலாம். நாங்களும் கிளம்பி வர்றோம். முகில்வர்மன் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு போன் பண்ணினா எங்களுக்கும் சொல்லுங்க. நாங்க ஜாயின் பண்ணிக்கிறோம்,” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுனையாழி.

போனை வைத்த மாறன், தன் மேஜையில் இருந்த அந்த ஓலைச்சுவடிப் பெட்டியைப் பார்த்தான்.

விதியின் சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்கிவிட்டது!

முகில்வர்மன், சுனையாழி, யாழ்வேந்தன், மாறன்... இவர்கள் அனைவரும் மீண்டும் அதே அடர்ந்த வனப்பகுதியில் ஒன்றிணையப் போகிறார்கள்.

அந்தக் காடும், இந்த ஓலைச்சுவடியும் எங்களை எதை நோக்கி அழைத்துச் செல்லப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வியுடன், மாறன் அந்த ஓலைச்சுவடியைக் கையில் எடுத்து, பிரிக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான்.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya