• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 21

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 21

பெயரின் அதிர்வு!

பிரதாப் ராஜின் தனிப்பட்ட அலுவலக அறை.

பிரம்மாண்டமான கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே, மாலைச் சூரியன் அரபிக்கடலின் விளிம்பில் இறங்கிக் கொண்டிருந்தான். வானத்தின் நிறம் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது.

சன்னலுக்கு அருகில் நின்றிருந்த பிரதாப் ராஜின் பார்வை மட்டும் அந்த அழகில் லயிக்கவில்லை.

அவருடைய மனம் வேறு எங்கோ இருந்தது.

அவருடைய கையில் இருந்த மதுக்கோப்பை அசைவின்றி இருந்தது. எதிரே தெரிந்த கடலைப் பார்த்தபடி ஏதோ ஒரு பழைய நினைவுக்குள் மூழ்கியிருந்தார்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார்.

கையில் ஒரு கோப்புடன் வசீகரன் உள்ளே வந்தான்.

அவன் நேராக வந்து கோப்பை மேசையின் மீது வைத்தான்.

“ப்பா...”

பிரதாப் ராஜ் அவனைப் பார்த்தார்.

“ம்ம்ம்... சொல்லு.”

“நீங்க முகில்வர்மனைப் பத்தி விசாரிக்கச் சொன்னீங்களே... அதுல சில முக்கியமான தகவல்கள் கிடைச்சிருக்கு.”

பிரதாப் ராஜ் நாற்காலியில் அமர்ந்தார்.

“என்ன தெரிய வந்திருக்கு?”

வசீகரனும் எதிரே அமர்ந்தான்.

“முதல்ல ஒரு விஷயம் சொல்லணும். அவனோட பிறப்பு, அவன் பிறந்த நேரம், அந்த நேரத்துல அவங்க குடும்பத்துல நடந்த விஷயங்கள்... இதுல இன்னும் சில தகவல்கள் கிடைக்கல. அது கிடைச்சதும் முழுசா உங்ககிட்ட சொல்றேன்.”

பிரதாப் ராஜ் அமைதியாகத் தலையசைத்தார்.

“இப்போ கிடைச்சதைச் சொல்லு.”

வசீகரன் கோப்பைத் திறந்தான்.

“முகில்வர்மனோட குடும்பம் சாதாரண குடும்பம் இல்ல. பல தலைமுறைகளா வசதியும், சொத்தும், மரியாதையும் இருக்குற குடும்பம். தென் தமிழகத்துல அவங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கு. அரசியல் ரீதியாவும் சில முக்கியமான தொடர்புகள் இருக்கு.”

பிரதாப் ராஜ் இடையில் எதுவும் பேசவில்லை.

“ஆனா ஒரு விஷயம் ஆச்சரியமா இருக்கு. அந்தச் செல்வாக்கை அவங்க தப்பான வழியில பயன்படுத்தினதா எந்தப் பதிவும் இல்ல. அவங்க தொழிலும் வெளிப்படையா இருக்கு. சமூகத்துலயும் நல்ல பெயர்தான்.”

வசீகரன் ஒரு பக்கத்தைத் திருப்பினான்.

“முகில்வர்மனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மறைமுகமான தொழில் தொடர்புகள் இருக்கா, நமக்கு ஏதாவது யூஸ் இருக்கா...ன்னு நிறைய வழியில பார்த்துட்டேன். எதுவுமே கிடைக்கல.”

“அப்படின்னா?”

“நீங்க ஏன் அவனைப் பற்றி விசாரிக்கச் சொன்னீங்கன்னு தெரியல. ஆனா, விசாரிக்க அவசியமே இல்லாத மாதிரிதான் இருக்கு.”

என்றவன் சிறிது நேரம் அமைதியாக அவரைப் பார்த்திருந்தான்.

“ஆனா...”

பிரதாப் ராஜின் பார்வையும் அவன் மீது நிலைத்தது.

“ஆனா என்ன?” என்றவரின் குரலில் இயல்பைவிடவும் சிறு அவசரம் தொனித்தது.

“அவங்க குடும்பத்துல ஒரு விசித்திரமான விஷயம் இருக்கு.” என்றவனின் குரலும் சிறு யோசனையில் இருந்தது.

“என்ன?”

“கிட்டத்தட்ட ஏழு, எட்டு தலைமுறைகளா அந்தக் குடும்பத்துல ஒரே ஒரு குழந்தைதான் பிறக்கிறதாம். அதுவும் ஆண் குழந்தை. பெண் குழந்தை பிறந்ததற்கான தகவலே இல்லை.”

பிரதாப் ராஜின் முகத்தில் சற்றே வியப்பு தெரிந்தது.

“என்ன வசீ... சொல்லற? ஒரு குழந்தைன்னா கூட ஏதோ நம்புறது போல இருந்தாலும்... அத்தனையும் ஆண் குழந்தைங்க மட்டும் ன்னு சொல்லறது... கொஞ்சம் வித்தியாசமா தெரியல...”

“எஸ் ப்பா. எனக்கும் அப்படி தோணதாலத்தான் உங்ககிட்ட இந்தத் தகவலைச் சொல்லறேன்.”

என்றவன், அவர் முகத்தைப் பார்த்தபடியே மறுபடியும் தொடர்ந்தான்.

“விசாரித்த வரை... இந்தத் தகவல் நூறு சதவீதம் நிஜம். கூடவே, ஊர்ல சிலர் அதை குடும்பச் சாபம்னு சொல்றாங்க.”

என்றவனிடம்,

“முகில்வர்மன்?” என்றார் பிரதாப் கேள்வியாக.

“அவனும் ஒரே பையன்தான்... ஸ்டில் பேச்சுலர்.”

பிரதாப் ராஜ் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

பிறகு,

“அவனோட பிறந்த தேதி, நேரம், ஜாதகம் எல்லாம் தேடு.”

வசீகரன் சற்றே ஆச்சரியத்தோடும், சிறு அதிர்ச்சியோடும் தந்தையைப் பார்த்தான்.

“ஜாதகமா?”

“ஆமா.”

“அதோட...”

“அவன் பிறந்தப்போ அந்தக் குடும்பத்துல என்ன நடந்தது, அப்போ இருந்த பெரியவர்கள் யாரெல்லாம் இருந்தாங்க... எல்லாத்தையும் தேடு.”

வசீகரனின் முகம் அப்பட்டமான ஆச்சரியத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

“ப்பா...”

“என்ன?”

“எதுக்குப்பா முகில்வர்மனைப் பற்றி இவ்வளவு டீட்டெயிலா விசாரிக்கச் சொல்றீங்க?” என்றவனின் குரலிலும் ஆச்சரியம் விரவிக் கிடந்தது.

அந்த அறையில் பேரமைதி நிலவியது.

வசீகரன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

சற்று நேரம் பொறுத்தவன், அவர் எதுவும் பேசாமல் இருக்கவே,

“நம்மளுக்கும் அவங்களுக்கும் எந்தத் தொழில் சம்பந்தமும் இல்ல. குடும்பத் தொடர்பும் இல்ல. அவங்க குடும்பம் வெளிப்படையான குடும்பம். எந்தத் தவறான விஷயமும் கிடைக்கல. அப்படியிருக்க... அவன் பிறந்த நேரம், ஜாதகம் வரைக்கும் ஏன் போகணும்?”

பிரதாப் ராஜ் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

சில நொடிகள் கழித்து மெதுவாகப் பேசினார்.

“நீ பிறந்தப்போ உனக்கு ஜாதகம் எழுதினேன்.”

பொருள் விளங்காத குரலில் அவர் சொல்ல, இப்போது ஏன் தன் ஜாதகத்தைப் பற்றி இவர் பேசுகிறார் என்று வசீகரன் சற்றுக் குழம்பினான்.

“யாருக்கு? எனக்கா?”

“ம்ம்... உனக்குத்தான்.”

“எழுதினீங்க... சரி. ஆனா இப்போ ஏன் இந்தத் தகவல்?” என்றவனைப் பார்த்து,

“எழுதியவர் உன் ஜாதகத்தைப் பார்த்துட்டு ஒரு விஷயம் சொன்னார்.”

பிரதாப் ராஜின் குரல் மாறியது.

“என்ன?” என்றவன், அவரின் குரல் மாற்றத்தையும் கவனித்தான்.

“நாற்பது வயசைத் தாண்டிய பிறகு உன் வாழ்க்கையில பெரிய ஆபத்து வரும்னு.”

என்று அவனுடைய முகத்தைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தவர், வசீகரனின் முகத்தில் சிரிப்பு மாறுவதைக் கவனித்து தன் பேச்சை நிறுத்தினார்.

“ப்பா... நான் கூட நீங்க வேற ஏதோ சீரியஸான விஷயம் சொல்லப் போறீங்கன்னு பார்த்தா... என்ன? இப்படி ஒரு தகவல் சொல்லறீங்க?”

என்றான் சிரிப்பினூடே.

“அவர் சொன்னது வெறும் ஆபத்து வரும்னு மட்டும் இல்ல.”

பிரதாப் ராஜ் மேசையின் முன்வந்தவர், அவனுடைய முகத்தையே ஆழ்ந்து பார்த்தபடி தொடர்ந்தார்.

“அந்த ஆபத்துக்கு காரணமாக இருக்கிற நபருடைய பெயர்... பாதுகாப்பு அல்லது காப்பாற்றுதல் சம்பந்தமான பொருளைக் கொண்ட பெயராக இருக்கலாம். அந்த நபர் இப்போ நமக்கூட எந்த வகையிலும் தொடர்பில் இல்லாமல் இருக்கலாம். அதாவது, இப்போ... ஆனா, அவனுக்கும் உனக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும்னும் சொன்னார்.”

அவரின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த வசீகரனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

“அன்னைக்கு நான் அதைப் பெருசா எடுத்துக்கல. காலமும் கடந்து போச்சு... நானும் அதை மறந்து போய் இருந்தேன்.”

என்றவர் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

“ஆனா, நீ இந்த முறை அந்தக் காட்டுக்குப் போயிட்டு வந்து முகில்வர்மன் பேரைச் சொன்னதும்... உனக்கு ஜாதகம் எழுதியவர் சொன்ன அந்த வார்த்தைகள் மின்னலென மின்னி மறைந்தது எனக்கு.”

வசீகரன் அமைதியாக இருந்தான்.

“முகில்... மேகம். வர்மன்... பாதுகாப்பு, போர்வீரன் என்ற பொருள் வருது. அதனாலதான் என் மனசுல ஒரு சந்தேகம் வந்தது.”

“ப்பா... முகில்வர்மன்தான் அந்த ஆள்னு நினைக்கிறீங்களா?”

“இல்ல.”

பிரதாப் ராஜ் உடனே மறுத்தார்.

“நான் அப்படிச் சொல்லல. இது வெறும் சந்தேகம். ஒருவேளை பெயர் சம்பந்தப்பட்ட தற்செயலாக இருக்கலாம்.”

அவர் சிறிது இடைவெளி விட்டார்.

“ஆனா, என் மனசு மட்டும் அவனைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும்னு சொல்லுது. அதனாலதான்.”

வசீகரன் மெதுவாகத் தலையசைத்தான்.

அவன் மனதில் இருந்த கேள்விக்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை.

ஆனால், இப்போது அந்தப் பெயர் அவனுக்கும் சாதாரணமாகத் தோன்றவில்லை.

“சரி ப்பா. இன்னும் ஆழமா விசாரிக்கிறேன்.”

கோப்பை எடுத்துக் கொண்டு அவன் எழுந்தான்.

கதவை நோக்கி நடந்தவன், ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தான்.

“உங்களுக்காக... உங்க மன ஆறுதலுக்காக... இந்த முகில்வர்மன் யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன்.”

என்றபடியே வெளியேறினான்.

கதவு மூடியதும் பிரதாப் ராஜின் பார்வை மீண்டும் கண்ணாடிச் சன்னலை நோக்கித் திரும்பியது.

அவரது நினைவில் பல வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்த எச்சரிக்கை மீண்டும் ஒலித்தது.

நாற்பதைக் கடந்த பின் வரும் ஆபத்து...

அதன் உண்மையான அர்த்தம் என்ன?

அவருக்கே தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெரிந்தது.

முகில்வர்மன் என்ற பெயர் ஏதோ ஒன்றைத் தொடங்கிவிட்டது.


பகல் முழுவதும் மருத்துவமனையில் பணியில் இருந்த சுனையாழி, இரவு எட்டைத் தொட்ட நேரத்தில் வீடு திரும்பினாள்.

கண்களில் சோர்வு இருந்தாலும், அவளுடைய நடை வழக்கம்போலவே இருந்தது.

அதே நேரத்தில் யாழ்வேந்தன் இரவுப் பணிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான்.

வாசலில் இருவரும் எதிரெதிரே சந்தித்தனர்.

சுனையாழி அவனைப் பார்த்தாள்.

வெள்ளைக்கோட்டும், ஸ்டெதஸ்கோப்பும் அணிந்து கிளம்பி நின்றவனைப் பார்த்துக் கேலியாக,

“ஹாஸ்பிட்டல் போய் தூங்கத்தான் போற... அதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரம் உனக்கு?”

“மேடம், காலையில இருந்து தூங்கி எழுந்து வந்த மாதிரிதான் நானும் தூங்கப் போறேன். அதுக்கு என்ன? நான் உனக்கு அண்ணன் டா...”

என்றான், ‘நான் உனக்கு அண்ணன்’ என்ற தோரணையில்.

இவர்களின் பேச்சைக் கேட்டபடியே உள்ளே வந்தார் வைத்தியநாதன்.

“ஆரம்பிச்சிட்டீங்களா இரண்டு பேரும்? சின்னப் பிள்ளைங்க மாதிரி... எப்ப பார்த்தாலும் நீயா நானான்னு வம்பு இழுத்துட்டு... யாழி, இப்பதான ஹாஸ்பிட்டல்ல இருந்து வர. போய் குளி. வேந்தா, நீ போய் சாப்பிட்டுக் கிளம்பு.”

அதட்டல் போட்டபடியே அவர் தன் அறைக்குச் செல்ல, கிச்சனில் இருந்து இரவு உணவை எடுத்தபடி வெளியே வந்தார் அமுதரசி.

அண்ணனும் தங்கையும் எதிரும் புதிருமாய் நின்றவர்கள், கப்சிப் என்று, அவரிடம் திட்டுவாங்கும் முன்னே தந்தை சொன்னதைச் சத்தமின்றி செய்தார்கள்.

பின்னே, அமுதரசியிடம் மாட்டினால் அவர்களின் காது பஞ்சர் தான்.

அமுதரசி இரவு உணவை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யாழ்வேந்தன் அருகே வந்து அமர்ந்தார் வைத்தியநாதன்.

அவருக்கும் இரவு உணவைப் பரிமாறியபடி, யாழிக்கும் தட்டை எடுத்து வைத்தார் அமுதரசி.

அவள் வந்து அமர்ந்ததும் அமுதரசி ஆரம்பித்தார்.

“என்னங்க... யாழிக்கு மாப்பிள்ளை பார்க்கிற எண்ணம் இருக்கா? இல்லை, உங்க பொண்ணு பேச்சைக் கேட்டு இன்னும் அவ கல்யாணத்தைத் தள்ளிப்போடப் போறீங்களா?”

என்றவரைப் பார்த்துச் சுனையாழி முறைக்க, யாழ்வேந்தன் சிரிப்பை அடக்கினான்.

வைத்தியநாதனோ,

“இந்த வருஷம் முடிச்சிடுவோம் அரசி. என்னோட பிரெண்ட் சுகுமாரன் இருக்கானே... அவன் பையனுக்கும் பொண்ணு பார்க்கறாங்களாம். நம்ம யாழியைப் பற்றிக் கேட்டான் இன்னைக்கு. நான் தான் உன்கிட்ட கலந்து சொல்லறேன்னு சொன்னேன்.”

என்றவரை அதிர்ந்து பார்த்தாள் சுனையாழி.

“ப்பா... அம்மாகிட்ட கேட்டு பதில் சொல்லக் கூடாது. என்கிட்ட கேட்கணும், பா. இப்ப என்ன? என் கல்யாணத்துக்கு அவசரம்! எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி பிறந்தவனுக்கு முதல்ல முடிங்க.”

என்றவளின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தார் அமுதரசி.

“பேச்சைப் பாரு பேச்சை... பொம்பளப் புள்ள நீ இருக்கும்போது அவனுக்கு என்ன அவசரம் கல்யாணத்துக்கு? உனக்கு முடிச்சுட்டுத்தான் அவனுக்கு. நல்ல விஷயம் ஆரம்பிக்கும்போதே ஏதாவது அசுபமா பேசி வச்சா, நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் போய்ப் படு. நாளைக்குப் பேசலாம்.”

என்று அமுதரசி முடித்துவிட,

சுனையாழி தாயை முறைத்தபடியே சாப்பிட்டு எழுந்தாள்.

தந்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மனைவி சொல்லைத் தட்டாமல் அறைக்குச் சென்றுவிட, வேந்தனும் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்ப ஹாலுக்கு வந்தான்.

சுனையாழி டிவியை ஆன் பண்ணியபடி சோபாவில் அமர்ந்தாள்.

தங்கையின் முகக் கடுகடுப்பைப் பார்த்தவன், அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவளின் அருகே வந்து அமர்ந்தான்.

“ஹாஸ்பிட்டல் கிளம்பாம எதுக்கு இங்க உட்கார?”

என்றாள் அவனைப் பார்த்து.

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அதான்...”

“என்னத்த சொல்ல மறந்த?”

“காலையில தாத்தாவோட ஓலைச்சுவடிய எடுத்து வச்சிருக்கறதா சொல்லி டாக்ஸி ஓனர் போன் நம்பர் குடுத்தியே... அவர்கிட்ட பேசினேன். அதைச் சொல்லத்தான் மறந்துட்டேன்.”

என்றவனிடம்,

“ம்ம்ம்... இப்ப உனக்கு நம்பிக்கை வந்துடுச்சா? அவர்கிட்டதான் ஓலைச்சுவடி இருக்குன்னு?”

என்றவளைப் பார்த்து,

“நான் அதுக்காக மட்டும் கால் பண்ணல. உனக்கு இக்கட்டுல உதவி பண்ணாங்க இல்ல... அதுக்கும் நன்றி சொல்லவும்தான்.”

என்றான்.

“ம்ம்ம்...”

“அவர் உன்னை காப்பாத்தலையாமே... அவர் கூட இருந்த முகில்வர்மன் னு ஒருத்தர்தான் ரிஸ்க் எடுத்தாராம். நன்றி சொல்லணும்ன்னா அவருக்கு சொல்லுங்கன்னு அவர் நம்பரைக் குடுத்துட்டார்.”

என்றவனின் பேச்சில்,

சுனையாழியின் மனதில் ஒரு சிறிய அதிர்வு.

முகில்வர்மன்...

என்ற பெயர் அவளுடைய மனதுக்குள் மீண்டும் ஒருமுறை ஒலித்தது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya