• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு -19

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 19

நம்பிக்கை!

“என்னது? தாத்தாவோட ஓலைச்சுவடியைத் தொலைச்சிட்டியா?”

யாழ்வேந்தனின் குரலில், சுனையாழி சொன்னதை நம்ப முடியாத தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனுக்குத் தெரியும். தாத்தாவைப் போலவே யாழிக்கும் மூலிகைகளின் மீது அத்தனை ஆர்வம் உண்டு. அப்படிப்பட்டவள் அந்தச் சுவடியைத் தொலைப்பாளா என்ன?

அவனுடைய குரலில் இருந்த மாற்றம் சுனையாழியைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அவன் முகத்தில் நம்ப முடியாத தன்மை தெரிந்தாலும், அதனூடே சிறு கோபமும், தங்கையின் மீதான அக்கறையும் தெளிவாகத் தெரிந்தது.

சுனையாழி அவன் முகத்தைப் பார்த்தபடியே நின்றவள், மெதுவாக,

“தொலைக்கல.”

“அப்போ எதுக்கு மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்ன?”

“அது... நான் நீ இல்லாம காட்டுக்கு மூலிகையைத் தேடி போயிருந்தேன்ல...” என்றவளைப் பார்த்து,

“ம்ம்ம்...” என்றான் வேந்தன்.

அவள் தயங்கியபடி சொல்ல ஆரம்பித்ததும், யாழ்வேந்தன் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“காட்டுக்குப் போயிட்டு வரும்போது... நான் வந்த டாக்ஸியிலேயே ஓலைச்சுவடியை விட்டுட்டு வந்துட்டேன் போல.”

“ஓ!”

“வீட்டுக்கு வந்த பிறகுதான் அது இல்லன்னு தெரிஞ்சது. உடனே டாக்ஸி ஓனருக்குப் போன் பண்ணிப் பேசிட்டேன். எடுத்துட்டு பத்திரமா வச்சிருக்கேன்னு சொன்னாங்க.”

யாழ்வேந்தனின் முகம் சற்று இயல்புக்கு வந்திருந்தது.

ஆனால் முழுமையாக இல்லை.

“அவங்க பத்திரமா வச்சிருப்பாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?”

சுனையாழி இப்போது அவனை நேராகப் பார்த்தாள்.

“பத்திரமா வச்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.”

“எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்ற?”

அவள் உடனே பதில் சொல்லவில்லை.

அந்தக் கேள்வி அவளை மீண்டும் அந்தச் சம்பவத்துக்குள் அழைத்துச் சென்றது.

அடர்ந்த மரங்கள்.

ஆள் அரவமில்லாத பாதை.

அவளுக்கு எதிரே நின்றிருந்த அந்தக் காட்டுப்பன்றி...

அது தன்னைத் தாக்கப் போன அந்த நொடி, உடல் சிலிர்த்தது போலவே இப்போதும் அவளுக்குள் ஒரு நடுக்கம் எழுந்தது.

அந்தச் சிலிர்ப்பினூடே,

“நான் அந்தக் காட்டுக்குப் போயிருந்தப்போ ஒரு சம்பவம் நடந்துச்சு.”

யாழ்வேந்தன் அவளை உற்றுப் பார்த்தான்.

“என்ன சம்பவம்?”

“ஒரு காட்டுப்பன்றியைப் பார்த்தேன். கிட்டத்தட்ட என்னை அட்டாக் பண்ணப் போன நேரத்துலதான் இரண்டு பேர் என்னைக் காப்பாத்தினாங்க.”

என்று அவள் சொல்ல, யாழ்வேந்தனின் உடல்மொழியே மாறிப்போனது.

“என்ன? சொல்லுற யாழி!”

“ஆமாம். நீ கேட்டது நிஜம்.”

“உனக்கு ஒண்ணும் ஆகலையே?” என்றான் பதற்றமாக.

அவனுடைய குரலில் இருந்த பதற்றத்தைப் பார்த்து சுனையாழி மெதுவாகத் தலையைக் குனிந்தாள்.

“இல்ல. என்னைத் தாக்குறதுக்கு முன்னாடியே அவங்க என்னைக் காப்பாத்திட்டாங்க. அன்னைக்கு முழுக்க என்னோட இருந்தாங்க. நான் தனியா போகக்கூடாதுன்னு பார்த்துக்கிட்டாங்க. கடைசில என்னை வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுட்டுத்தான் போனாங்க.”

அவள் சொன்னபோது, அவளுடைய குரலில் அவர்களைப் பற்றிய நன்றியும் நம்பிக்கையும் இருந்தது.

யாழ்வேந்தனுக்கு அப்போதும் சுனையாழி மீது சிறு வருத்தம் இருந்தது.

எனக்கு லீவ் கிடைக்கிறவரை இவ வெயிட் பண்ணியிருந்தா என்ன? என்பது போல அவன் மனம் எண்ணியது.

“இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியுமா?”

“இல்ல.”

“அம்மாவுக்குக்கூட தெரியாதா?”

“அம்மாகிட்ட சொன்னேன்... ஆனா முழுசா சொல்லல. அப்பாவுக்கு அதுகூட தெரியாது.”

“ஏன்?”

சுனையாழி அவனைப் பார்த்தாள்.

“அம்மாவுக்குத் தெரிஞ்சா இனிமேல் என்னைத் தனியா காட்டுப் பக்கம் போகவே விட மாட்டாங்க.”

யாழ்வேந்தன் பெருமூச்சு விட்டான்.

அவள் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்கும் புரிந்தது.

“அதுக்காக இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறைக்கலாமா?”

“நான் மறைக்கணும்னு நினைக்கல அண்ணா.”

அவளுக்குக் காரியம் ஆகணும்னா இந்த ‘அண்ணா’ என்ற வார்த்தை தாராளமாக வந்து விழும்.

பிறகு என்ன?

அண்ணன் என்று அழைக்கப்பட்டவன் தங்கையின் பக்கம் நின்றுவிடுவான்.

இப்போதும் அப்படித்தான்.

“உன் தேவைக்குன்னா இந்த அண்ணான்ற வார்த்தை வந்து குதிச்சுடுமே.”

அவன் குரல் இப்போது சற்று மென்மையாக இருந்தது.

“உனக்கு ஏதாவது ஆகியிருந்தா?” என்றான்.

அந்தக் கேள்விக்கு சுனையாழியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

யாழ்வேந்தன் தொடர்ந்தான்.

“நீ எவ்வளவு தைரியமா இருந்தாலும், எல்லா நேரமும் நம்மால நம்மள காப்பாத்திக்க முடியாது. அதுவும் காட்டுக்குள்ள...”

“எனக்குப் புரியுது.”

“இல்ல. புரிஞ்சிருந்தா இப்பவரை அந்தச் சம்பவத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க மாட்ட.”

என்றவனைப் பார்த்து சுனையாழி இப்போது முறைத்தாள்.

“இரண்டு நாளுக்கு முன்னாடிதான் இது நடந்தது. நேத்து நான் வீட்டுல இருந்தேன். நீ ஹாஸ்பிட்டல்ல இருந்த. இன்னைக்கு நான் டூட்டிக்குக் கிளம்பும்போது நீ வர... அப்பவும் உன்கிட்ட தகவல் சொல்லிட்டு இருக்கேன். என்னமோ வாரக்கணக்குல, மாசக்கணக்குல உன்கிட்ட சொல்லாம விட்ட மாதிரி பேசிட்டு இருக்க!”

என்று அவள் சொல்லவும், சில நொடிகள் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது.

யாழ்வேந்தனே பேச்சை மாற்றினான்.

“சரி... அந்தக் காடு எப்படி இருக்கு?”

சுனையாழி அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

“எதுக்குக் கேக்குற?”

“இல்ல. நீ போயிட்டு வந்திருக்க. போன இடத்துல உன் சொந்தக்காரன வேற பார்த்திருக்க. இன்னமும் அந்தக் காடு நல்லா இருக்கும்னு நம்புற.”

என்றான் சிரிப்பை மென்றபடியே.

“இரு. அடுத்த முறை போகும்போது உன்னையும் கூட்டிட்டுப் போய் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.”

என்றபடியே அவனை அடிக்கத் துரத்தினாள்.

“ம்ம்ம்... அதுவரை அவன் அங்க இருப்பானா? அவனைத் தவிர புதுசா வேற சொந்தக்காரங்களைப் பார்த்தியா?”

என்றான், அவள் கைக்கு சிக்காமல் நகர்ந்தபடியே.

சுனையாழி சட்டென நின்றாள்.

“டேய் அண்ணா... சொல்ல மறந்துட்டேன். இப்போ போன காட்டுல ஒரு அருவியைப் பார்த்தேன்டா.”

“நிஜமாவா?”

இப்போது யாழ்வேந்தனின் குரலில் ஆர்வம் பிறந்திருந்தது.

“அடுத்த தடவை நாம போறோம். அங்க குளிக்கிறோம். தாத்தா சொன்ன மூலிகை ஏதாவது கிடைக்குதான்னும் பார்க்கிறோம்.”

என்றாள் சுனையாழி.

யாழ்வேந்தன் சிறிது நேரம் கழித்து தலையசைத்தான்.

“என்ன அவ்வளவு ஆர்வமா கேட்டுட்டு இவ்வளவு ஸ்லோவா தலையாட்டுற?”

எனவும்,

“இல்ல. தாத்தா சுவடிதான் இப்போ உன்கிட்ட இல்லையே.”

“அதைத் தான் நான் வந்த டாக்ஸி ஓனர் எடுத்து வச்சிருக்காரே. மறுபடி போகும்போது அவர் டாக்ஸியையே புக் பண்ணிப்போம். எனக்குத் தெரிஞ்சு அவருக்கு அந்தக் காடு நல்லா பழக்கம்னு நினைக்கிறேன். அவர்தான் அந்த அருவிக்குக் கூட்டிட்டுப் போனது.”

என்று சுனையாழி சொல்லவும்,

“ம்ம்ம்... அவர் நம்பர் வச்சிருக்கியா?” என்றான்.

“இருக்கு. கார்டு கொடுத்திருக்கார்.”

என்று சொல்லியபடியே தன் கைப்பையைத் துலாவி, மாறனின் விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் சுனையாழியிடமிருந்த அந்த விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டான்.

“அவருக்குப் போன் பண்ணிப் பார்க்கிறேன்.”

“இப்பவா? எனக்கு டூட்டிக்கு டைம் ஆகுது.”

“நான்தான் பேசப் போறேன். உன்னைப் பேசச் சொல்லல.”

என்று சிரித்தபடியே எண்ணை அழுத்தினான்.

அழைப்பு சென்றது.

சில நொடிகளுக்குப் பிறகு, மறுமுனையில்,

“ஹலோ...” என்று கணீரென்ற குரல் கேட்டது.

“ஹலோ... மாறன் ட்ராவல்ஸுங்களா?”

மறுமுனையில் இருந்து பதில் வந்தது.

“ஆமா. நீங்க?”

“நான் சுனையாழியோட அண்ணன் பேசுறேன்.”

சுனையாழி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு நொடி யோசித்தவன்,

“ஓ... டாக்டர் மேடமா?”

என்றான்.

“ஆமா. நான் அவங்க அண்ணன் யாழ்வேந்தன்.”

“தெரியுமே. நீங்களும் டாக்டர்தானே? டாக்டர் மேடம் சொல்லியிருக்காங்க. சொல்லுங்க சார், என்ன விஷயமா கால் பண்ணியிருக்கீங்க?”

என்றான் மறுமுனையில் மாறன்.

“யாழி சொன்னா... இப்பதான் அங்க ஆபத்து நேரத்துல நீங்கதான் காப்பாத்தினீங்கன்னு.”

“சார், அவங்களைக் காப்பாத்தினது நான் இல்லை. அது முகில் சார்தான். அவருக்கு நான் உதவினேன்.”

“முகிலா? இது யாரு புதுசா?”

என்று எதிரில் நின்றிருந்த யாழியையும் பார்த்தபடியே கேட்டான்.

மறுமுனையில் இருந்து மாறன் தொடர்ந்தான்.

“முகில்வர்மன் சார்தான் அன்னைக்கு அங்க ட்ரெக்கிங் போக என்னைப் புக் பண்ணியிருந்தார். நாங்க போன நேரம்தான் டாக்டரைப் பார்த்தோம். முகில் சார்தான் குயிக்கா செயல்பட்டு அவங்களைக் காப்பாத்தினாங்க. நான் அவருக்கு உதவினேன்.”

என்றவனிடம்,

“அப்போ நான் அவருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும். இப்ப உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன். அவரோட நம்பர் இருந்தா குடுங்க.”

என்றான் யாழ்வேந்தன்.

“ஓகே. அவர் நம்பரை உங்களுக்கு மெசேஜ் பண்ணுறேன்.”

“இன்னொரு விஷயம்... ஓலைச்சுவடி உங்ககிட்ட இருக்கிறதா சொன்னா?”

“ஆமா. கார்ல விழுந்துடுச்சு போல. என்கிட்டதான் இருக்கு. பத்திரமாத்தான் இருக்கு.”

மறுமுனையில் இருந்து வந்த பதிலைக் கேட்ட பிறகு, அவனுடைய முகத்தில் இருந்த சுனக்கம் முற்றிலும் குறைந்தது.

“சரி. நன்றி.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் பேசினான்.

“இன்னொரு விஷயம் சொல்லணும்.”

“சொல்லுங்க சார்.”

“அவளைக் காப்பாத்தினதுக்கும், வீட்டுக்குப் பத்திரமா கொண்டு வந்து விட்டதுக்கும் நன்றி.”

மறுமுனையில் இருந்து மாறன் ஏதோ சொல்ல, யாழ்வேந்தன்,

“இல்ல... நன்றி சொல்லணும்னு தோணிச்சு. அதான் சொன்னேன்.”

என்றான்.

அந்தப் பேச்சு சில நிமிடங்கள் தொடர்ந்தது.

பிறகு அழைப்பு முடிந்தது.

அதே நேரத்தில் அமுதரசியும் அங்கு வருவது சரியாக இருந்தது.

“இன்னமும் ரெண்டு பேரும் பேசி முடியலையா?” என்றார் அதட்டலாக.

அம்மாவைக் கண்டதும் இருவரும்,

“இதோ கிளம்பிட்டோம்!”

என்று சொல்லிவிட்டு, வேந்தன் உள்ளேயும், யாழி வெளியேயும் சிட்டாகப் பறந்துவிட்டார்கள்.


அதே நேரத்தில்...
வீரசேகரனின் வீட்டில் குடும்ப ஜோசியர் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

முகில்வர்மனின் ஜாதகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அதை அமுதவல்லியிடம் கொடுத்தார்.

“சரிங்கம்மா. நான் கிளம்புறேன்.”

“சரிங்க ஜோசியரே.”

வீரசேகரனும் அவரை வாசல் வரை அழைத்துச் சென்றார்.

முகில்வர்மன் அங்கேயே நின்றிருந்தான்.

ஜோசியர் வாசலைக் கடந்து செல்லும் அந்த நேரத்தில், சில நிமிடங்களுக்கு முன்பு அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் அவன் நினைவுக்குள் வந்தன.

‘அந்தப் பெண்ணுக்காகத்தான் உங்க பையன் பிறப்பு.’

அந்த வார்த்தை ஏனோ அவனுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது.

இதுவரை திருமணம் என்ற பேச்சையே விரும்பாமல் ஒதுக்கி வந்தவன்.

அம்மா எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்.

‘வேண்டாம்.’

அவனுடைய வாழ்க்கையில் இப்போது அதற்கு இடமில்லை என்றுதான் நினைத்திருந்தான்.

ஆனால்...

இன்று, யாரென்றே தெரியாத ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் அவன் மனம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

அவள் யார்?

எங்கே இருக்கிறாள்?

தன்னுடைய வாழ்க்கைக்குள் அவள் எப்படி வரப்போகிறாள்?

அவனுக்குப் பதில் தெரியவில்லை.

முகில்வர்மன் மெதுவாகத் திரும்பினான்.

அப்போது அவன் பார்வை அவனுடைய கைபேசியில் படிந்தது.

மாறனிடம் இருந்து அவனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு போட்டோ மெசேஜ் வந்திருந்தது.

புதிய ஓலைச்சுவடி...

அதில் இருந்த எழுத்துகள்...

ஜோசியர் சொன்ன வார்த்தைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

மின்னலென ஒரு எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

அடுத்த நொடியே அதை அவனே ஒதுக்கினான்.

‘சம்பந்தமே இல்லாம இது என்ன யோசனை?’

ஆனால் அந்த எண்ணம் அவனை விட்டு விலகவில்லை.

‘அவளுக்காகத்தான் என் பிறப்பு...’

அவன் மனதுக்குள் அந்த வார்த்தை மீண்டும் ஒலித்தது.

இந்தச் சுவடி...

சுவடிக்குச் சொந்தக்காரி சுனையாழி...

இது என்ன? என் எண்ணம் ஏன் இப்படிப் போகுது?

முகில்வர்மன் குழம்பியபடியே நின்றான்.

அதே நேரத்தில்...

முகில்வர்மன் கையில் இருந்த போன் அடித்தது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya