• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 17

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 17

தேடலின் முதல் புள்ளி!

“யார் இந்த முகில்வர்மன்?!”


பிரதாப் ராஜ் சொன்ன அந்த வார்த்தைகள் அவன் காதுக்குள் மீண்டும் ஒலித்தன.

“அவனைப் பற்றி மட்டும் விசாரிக்காதே... அவனுக்கு முன்னாடி இருந்தவர்களைப் பற்றியும் விசாரி.”

வசீகரனின் புருவங்கள் சற்றே சுருங்கின.

அவன் மெதுவாக முன்பக்கம் நிமிர்ந்து அமர்ந்தான்.

மேசையின் மீது இருந்த கைபேசியை எடுத்தான்.

சில நொடிகள் யோசித்தவன், யாரோ ஒருவரின் எண்ணை அழுத்தினான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு,

“சொல்லுங்க சார்...” என்ற குரல் கேட்டது.

“வேலை ஒண்ணு இருக்கு.”

“எப்ப ஆரம்பிக்கணும்? எவ்வளவு நாளுக்குள்ள வேணும்?” என்ற குரலுக்கு,

வசீகரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பின்னர்,

“முகில் டெக் சொலியூஷன் முதலாளி முகில்வர்மனைப் பற்றி விசாரிக்கணும்.”

“ஓகே டன்.”

“நான் இன்னும் முடிக்கல... அவனைப் பற்றி மட்டும் விசாரிக்கக்கூடாது.”

மறுமுனையில் இருந்தவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அவனோட குடும்பத்தைப் பின்னோக்கிப் போய் விசாரி.

முதல்ல அவனோட அப்பா வீரசேகரன். அங்கிருந்து அவரோட அப்பா... அதுக்கு முன்னாடி இருந்தவர்... இப்படியே தலைமுறை தலைமுறையா போ.”

வசீகரனின் குரல் இப்போது சற்றுத் தாழ்ந்தது.

“அவங்க பூர்வீகம் எங்கிருந்து ஆரம்பிச்சது, எந்தெந்த இடங்கள்ல வாழ்ந்திருக்காங்க, பழைய நிலங்கள்... சொத்துகள்... குடும்பத்துல நடந்த முக்கியமான சம்பவங்கள்... எல்லாத்தையும் தேடு.”

என்றவனின் குரலுக்கு, எதிர்முனையில் இருந்து வந்த ஆச்சரியம் கலந்த அதிர்ந்த குரல் வசீகரனுக்குமே புரியத்தான் செய்தது.

“சார்... இரண்டு மூணு தலைமுறைகளை விசாரிக்கிறது கஷ்டம் இல்லை... ஆனா இந்தத் தேடலுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.”

என்றது எதிர்முனை பதில்.

“எடுத்துக்கோ. டைம் எடுத்துக்கோ. ஆனா எல்லாத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செக் பண்ணிட்டு, பிறகு தகவல் என் கைக்கு வரணும்.

முக்கியமா... முகில்வர்மன் பிறந்த வருடம், இடம், நேரம் கிடைச்சா அதையும் தெரிஞ்சுக்கோ. அவன் பிறந்த காலத்துல அந்தக் குடும்பத்துல ஏதாவது விசித்திரமான சம்பவம் நடந்திருக்கா என்பதையும் பாரு.”

“ஓகே சார்.”

“தகவல் எதுவும் வெளியே போகக்கூடாது. நீ விசாரிக்கிறது யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பா வீரசேகரனுக்கோ... முகில்வர்மனுக்கோ தெரியவே கூடாது.”

“சரி சார்.”

“எனக்கு தகவல் மட்டும் அனுப்பு. கவனம்.”

“சரி சார்.”

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

வசீகரன் மீண்டும் நாற்காலியில் சாய்ந்தான்.

அவனது முகத்தில் இப்போது ஒரு மெல்லிய புன்னகை.

எனக்குத் தெரிஞ்சு, என்னோட அப்பா பிரதாப் ரொம்ப கூலான ஆள். அவரையே உன் பெயர் இவ்வளவு ஜெர்க்காக வைக்குது...

நிஜத்துல நீ யார்டா?

அப்படி என்ன உன் குடும்பத்தில் மறைந்திருக்கிறது?

அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் பயணம் அன்றிரவே ஆரம்பித்துவிட்டது.

---

சென்னை.

இரவு நேரம்.

தன் வீட்டின் முன்பாக காரை நிறுத்திய முகில்வர்மன்...

உடனே கதவைத் திறந்து இறங்கவில்லை.

ஸ்டீயரிங் மீது கைகளை ஊன்றியபடி, நெற்றிப்பொட்டைப் அழுத்திக் கொண்டு இருந்தான்.

அவன் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று.

அந்தக் கோடு.

பழைய ஓலைச்சுவடியில் வரையப்பட்டிருந்த அந்த வளைந்த கோடு.

அதன் அருகே இருந்த இலை போன்ற குறியீடு.

அதற்குப் பக்கத்தில் சென்றிருந்த இன்னொரு மெல்லிய கோடு...

அவன் எத்தனை முறை நினைத்தாலும் அந்த வடிவம் அவனது நினைவிலிருந்து அகலவில்லை.

அதை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லை.

ஆனால்...

அதைப் பார்த்தபோது ஏன் பரிச்சயமான உணர்வு?

அவன் கண்களை மூடினான்.

அந்தக் கோடு மீண்டும் மனதுக்குள் தோன்றியது.

மூடிய கண்களுக்குள்ளேயே அந்தக் கோடுகளைப் பார்க்க முடிந்தது போல இருந்தது.

“எங்கயாவது நான் பார்த்து மறந்துட்டேனா?”

என்று அவன் தனக்குள் மெதுவாக முணுமுணுத்தான்.

அப்போது...

டக்... டக்...

கார் கதவில் தட்டும் சத்தம் கேட்டது.

முகில்வர்மன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

வெளியே அமுதவல்லி நின்றிருந்தாள்.

அவன் உடனே கண்ணாடியை இறக்கினான்.

“என்னம்மா?”

“கார் வந்து எவ்வளவு நேரமாச்சே, இன்னும் பையனைக் காணோமேன்னு வந்தேன்... வந்து பார்த்தாதான் தெரியுது... இன்னும் காருக்குள்ளேயே உட்கார்ந்திருக்கன்னு? ஏன், காரை நிறுத்திட்டு இறங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”

முகில்வர்மன் நொடியில் தன்னை ஆக்கிரமித்திருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவன்,

“இல்ல... நல்ல சாப்பாடு சாப்பிடணும்... அவசரப்பட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டோமேன்னு யோசிக்கிறேன்மா.”

அமுதவல்லி நிதானமாக அவனைப் பார்த்தார்.

“நல்ல சாப்பாடு?”

“ஆமா... நல்ல சாப்பாடு.”

என்றவாறே கார் கதவைத் திறந்தான்.

“சிக்கன் குருமா வெச்சு சப்பாத்தி சுடலாமேன்னு இப்பவரை முடிவு பண்ணி இருந்தேன்... ஆனா, இப்ப என்னோட முடிவை மாத்திட்டேன்.

உனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச உப்புமா ரெடி பண்ணறேன். சீக்கிரம் வா.”

என்றவாறே அமுதவல்லி உள்ளே சென்றாள்.

முகில்வர்மனும் காரிலிருந்து அவசரமாக இறங்கி, அவர் பின்னோடு ஓடினான்.

“ம்மா... உங்களைப் பத்தித் தெரிஞ்சும் வாயைவிட்டது என் தப்புதான். தெய்வமே, மன்னிச்சுக்கோங்க... பழி வாங்கிடாதீங்க...

நேத்து போன ட்ரெக்கிங் பத்தி யோசித்தபடி கார்ல உட்காந்துட்டேன்.”

என்றவனைப் பார்த்து,

“இந்தக் காட்டுப் பைத்தியம் உன்னை எப்பதான் விடும்னு தெரியல. சரி, போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வா. டின்னர் ரெடி பண்ணறேன்.”

என்றவரிடம்,

“ம்மா... அப்பா வந்துட்டாரா?” எனக் கேட்டுக்கொண்டே மாடியேறினான்.

---

சில நேரம் கழித்து...

முகில்வர்மன் மேல்மாடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாகிக் கீழே இறங்கி வந்தான்.

டைனிங் டேபிளில் வீரசேகரன் ஏற்கனவே அமர்ந்திருந்தார். இரவு உடையில்.

அமுதவல்லி சமையலறையிலிருந்து ஒவ்வொரு பாத்திரமாக வேலைக்காரி எடுத்துவர, அதை வாங்கி டைனிங் டேபிளில் வைத்துக்கொண்டிருந்தார்.

“ஹாய் ப்பா... இரண்டு நாளா வேலை எல்லாம் எப்படி போச்சு? நான் இல்லாம ஹாப்பியா இருந்திருப்பீங்களே?”

என்றான் சிறு புன்னகையோடு.

“ரொம்பலாம் இல்ல... கொஞ்சம் கம்மியாதான் ஹாப்பியா இருந்தேன்.”

என்றார் அவரும் அதே புன்னகையோடு.

“ரெண்டு பேரும் பேசினது போதும். சாப்பிடுங்க...”

என்றார் அதட்டலாக.

அவருக்குத் தெரியாது... இவர்களைப் பற்றிய இந்தப் பேச்சு இரண்டு நாளைப் பற்றி நீண்டுகொண்டே போகுமென்று.

அவர்களும் கப்சிப் என்று சாப்பிட அமர்ந்துவிட,

அமுதவல்லி ஆரம்பித்தார்.

“காலையில நம்ம ஜோசியரை வரச் சொல்லி இருந்தேன். முகில் ஜாதகத்தைப் பார்க்க... அவர் காலையில வர்றேன்னு சொல்லியிருக்கார். இரண்டு பேரும் அவர் வந்து போன பிறகு ஆபீஸ் கிளம்புங்க.”

எனச் சொல்லியபடியே அவரும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்.

அமுதவல்லிக்கு அப்பொழுது தெரியவில்லை...

முகில்வர்மனின் குழப்பத்தைத் தீர்த்து வைத்து, அவனுக்கான தேடலைத் தொடங்குவதற்கான தொடக்கப்புள்ளியை வைக்கப் போகிறார் என்பதும்...

---

இளமாறன் டிராவல்ஸ் அலுவலகத்தை மூடிவிட்டு, அந்தப் பழைய லெதர் பாக்ஸைக் கையில் எடுத்துக்கொண்டான்.

அலுவலகத்தின் பின்புறம் இருந்த தனது வீட்டுக்குள் அதை எடுத்துச் சென்றான்.

அதைப் பாதுகாப்பாக வைக்க ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது,

“மாறா...”

என்று அவனது அம்மா வசந்தியின் குரல் கேட்டது.

மாறன் திரும்பிப் பார்த்தான்.

“என்னம்மா?”

“கையில என்ன அது?”

“இது நேத்து வந்த ஒரு கஸ்டமரோட பாக்ஸும்மா... கார்ல தவறவிட்டுட்டாங்க. இன்னைக்கு போன் பண்ணி எடுத்து வைக்கச் சொன்னாங்க. அதான் பத்திரமா வைக்கணுமேன்னு வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்.”

எனவும்,

வசந்தியின் பார்வை அந்தப் பெட்டியில் நிலைத்தது.

பழைய லெதரால் செய்யப்பட்டிருந்தாலும், அதில் ஏதோ ஒரு வித்தியாசமான அழகு இருந்தது.

“பார்க்க அழகா இருக்கே...”

என்று சொல்லியவள் அதை வாங்கிப் பார்த்தார்.

மாறன் எதுவும் சொல்லவில்லை.

வசந்தி அந்தப் பெட்டியைத் தன் கைகளில் வைத்தபடி, மெதுவாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

அவளது விரல்கள் அந்தப் பழைய லெதரின் மேல் மெதுவாகத் தடவின.

“நகைப்பெட்டியா இருக்குமா மாறா? இவ்வளவு வெட்டா இருக்கு...”

என்றார் திருப்பிப் பார்த்தபடியே.

அவர் சொல்லியதைக் கேட்ட மாறன் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

சிரிப்பினூடே,

“அம்மா... அது ஓலைச்சுவடி இருக்கிற பாக்ஸ் மா.”

என்றான்.

“என்னது?! ஓலைச்சுவடியை இப்படிக்கூட பாக்ஸ்ல போட்டு வைப்பாங்களா?”

என்றவர், நொடியும் யோசிக்காமல்,

“நீயும் தான் போன வருஷம் எங்கையோ கிடைச்சதுன்னு ஒரு ஓலைச்சுவடியை எடுத்துட்டு வந்த... அதை இப்படியா பத்திரப்படுத்தி வச்சிருக்க? உன் ரூம்ல மேல் சிலாப்புல கிடக்கு.”

என்று மகன் வாயைத் தோள்பட்டையில் இடித்தவாறே நகர்ந்துவிட்டார்.

வசந்திக்கே அப்போது தெரிந்திருக்காது...

தான் ஒரு தேடலுக்கான இரண்டாவது புள்ளியை வைத்திருக்கிறோம் என்று.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya