• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு - 15

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 15

மறைந்த சுவடு!

“சார்…”

என்று சுரேஷ் அழைத்தபடியே, கையில் ஒரு பையுடன் மாறனின் அருகில் வந்து நின்றான்.

“சார்… நேத்து நீங்க எடுத்துட்டுப் போன கார்ல இந்தப் பை இருந்தது.”

அவன் வார்த்தை முடியும் முன்பே, மாறனின் கைபேசி ரிங்டோன் எழுப்பியது.

மாறன் கைபேசியை எடுத்து நிதானமாகப் பார்த்தான். சேமிக்கப்படாத எண்…

“சார்… ஒரு நிமிஷம்.”

என்று முகிலிடம் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றான்.

“ஹலோ… மாறன் டிராவல்ஸ்.”

மறுமுனையில் பெண்ணின் குரல் கேட்டது.

“நான் சுனையாழி பேசுறேன் மாறன்…”

“ஓ! டாக்டர் மேடம்… சொல்லுங்க.”

என்றான், அவளை ஏற்கனவே தெரிந்தவனாக.

“மாறன், என்னோட லெதர் பாக்ஸ் ஒண்ணு மிஸ் பண்ணிட்டேன். லாஸ்ட்டா நான் கார்ல இருக்கும்போது பார்த்த ஞாபகம் இருக்கு. மேபி கார்ல விழுந்து இருந்திருக்கலாம்… கொஞ்சம் பார்க்கிறீங்களா, இருக்கான்னு?”

அவள் கேட்கும்போதே, சுரேஷிடம் இருந்த பையை வாங்கியிருந்தான் மாறன்.

அந்தக் குட்டிப் பையைத் திறந்து பார்த்தான்.

அதில் சுனையாழி சொன்ன லெதர் பாக்ஸ் இருந்தது.

“இப்பதான் டாக்டர்… டிரைவர் காரைக் கிளீன் பண்ணும்போது எடுத்துட்டு வந்து ஒரு குட்டிப் பை கொடுத்தார். அதுல நீங்க சொன்ன பாக்ஸ் இருக்கு.”

“இப்ப இந்தப் பாக்ஸை உங்களுக்கு கொரியர் பண்ணிவிடவா? இல்ல நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா?”

என்று மாறன் அடுத்தடுத்த கேள்விகளை சுனையாழி முன் வைத்தான்.

“ஈஸி மாறன்… நான் மறுபடியும் அந்தக் காட்டுக்குப் போக வருவேன். அப்ப வந்து வாங்கிக்கிறேன். ஆனா கேர்ஃபுல் மாறன்… அது எங்க தாத்தாவோட பொக்கிஷம்னே சொல்லலாம். அவரோட மருத்துவக் குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடி…”

என்றாள்.

“ஓ! நீங்க தேடிவந்த பச்சிலை குறிப்பும் இந்தச் சுவடியில்தான் இருக்கா?”

“ஆமாம்.”

“ஓகே டாக்டர். சேஃபா எடுத்து வச்சிடுறேன்.”

என்று கூறிவிட்டு போனை கட் செய்தான் மாறன்.

முகில்வர்மன் இருவரின் உரையாடலையும் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்திருந்தான்.

அவன் கைபேசியைக் கீழே வைத்ததும், முகில் அமைதியாக அவனைப் பார்த்தான்.

“சுனையாழி?”

“ஆமாம் சார்.”

“நாம நேத்து பார்த்த டாக்டர் சுனையாழி, அவங்க தாத்தாவோட மருத்துவ ஓலைச்சுவடியைக் கார்ல மிஸ் பண்ணிட்டாங்க போல. அதைத்தான் இப்போ போன் பண்ணிக் கேட்டாங்க.”

“மருத்துவக் குறிப்பேட்டு ஓலைச்சுவடியா, மாறன்?”

முகிலின் கேள்வியில் ஆர்வம் இருந்தது.

“ஆமாம் சார். தாத்தா விட்டுட்டுப் போன சுவடி இருக்காம் சார். ரொம்ப முக்கியமானதுன்னு சொன்னாங்க. பத்திரமா வச்சிருக்கச் சொன்னாங்க.”

மாறன் சொல்லி முடிப்பதற்குள், முகிலின் பார்வை அந்தப் பையின் மீது பதிந்தது.

“கொடுங்க… நம்மளால படிக்க முடியுதான்னு பார்ப்போம்.”

என்றான்.

மாறன் கையில் வைத்திருந்த பையை முகிலிடம் நீட்டினான்.

அந்தப் பையின் மீது அவனது விரல்கள் பதிந்த அந்த நொடியிலேயே, அவனுக்குள் ஏதோ அறியாத உணர்வு எழுந்தது.

முகில் மிக மிருதுவாக அந்த லெதர் பாக்ஸைத் திறந்தான்.

அதன் உள்ளே ஐந்துக்கும் மேற்பட்ட பனை ஓலைக் கட்டுகள் இருந்தன. பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டதன் அடையாளமாக, அவை அடர்ந்த பழுப்பு நிறத்தில் மாறியிருந்தன.

சில இறுக்கமான எழுத்துகளும் அவன் பார்வையில் பட்டன.

முகிலின் கண்கள் சற்றே சுருங்கின.

எதையோ பார்த்தது போல…

எங்கோ பார்த்தது போல…

அவனுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு.

அதே நேரத்தில்—

பிரதாப் ராஜின் முன் அமர்ந்திருந்த வசீகரனும் தீரனும்,

“முகில்வர்மனை உங்களுக்கு தெரியுமா, ப்பா?”

என ஒரே குரலில் கேட்க…

சில நொடிகள் அமைதியாக இருந்த பிரதாப் ராஜ், திடீரென வசீகரனைத் தன் பார்வையால் அருகே அழைத்தார்.

“வசீகரா…”

“சொல்லுங்க, ப்பா.”

“முகில்வர்மன்…”

என்ற பெயரை உச்சரித்தவுடன், பிரதாப் ராஜின் பார்வை கூர்மையானது.

“அவனைப் பற்றி கொஞ்சம் விசாரி.”

வசீகரன் சற்றே குழப்பத்துடன்,

“உங்களுக்கு அவனை முன்பே தெரியுமா, ப்பா?”

என்று கேட்டான்.

“நீ காட்டிய போட்டோல இருக்கறது வீரசேகரன் பையன் முகில்வர்மன் தானே…”

என்று தொடங்கிய பிரதாப் ராஜ்,

“அவனோட மெயின் ஆபிஸ் மும்பையில்தான் இருக்கு. ‘முகில் டெக் சொல்யூஷன்ஸ்’… அது அவனோடதுதான்.

நான் அவனை நேர்ல பார்த்திருக்கேன். அதனால நீ போட்டோ காட்டியதும் எனக்குத் தெரிஞ்சது.

இப்பவரை அவனோட பெயர் மட்டும் தான் நிறைய பேருக்குத் தெரியும். ஆள் யாருன்னு இப்பவரை யாருக்கும் தெரியாது.”

என்றார்.

அவரின் பேச்சைக் கேட்டிருந்த தீரனும்,

“எஸ், அண்ணா… அப்பா சொல்றது நிஜம்தான்.

நீங்க போட்டோ அனுப்பி, ‘இவனைப் பத்தி விசாரி’ன்னு சொல்லும்போது… இவனைப் பத்தி விசாரிக்கத்தான் அவ்வளவு நேரமாச்சு.”

என்றான்.

இருவரின் பேச்சையும் கேட்ட வசீகரன்,

“இதுல நான் என்னப்பா பண்ணணும்?”

என்றான்.

“அவன் இப்போ என்ன பண்றான், எங்கே இருக்கான் என்பதெல்லாம் வேண்டாம். அவனோட குடும்பம்… அவனோட முன்னோர்கள்… அவனோட பூர்வீகம்… இதைப் பற்றி மட்டும் விசாரி.”

என்றார் பிரதாப் ராஜ்.

“சரி, ப்பா.”

என்று வசீகரன் சொல்ல,

“இல்ல… தீரா, உனக்கு வேற வேலை இருக்கு.”

என்று பிரதாப் ராஜ் குரலைத் தாழ்த்தினார்.

“இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் கொடுக்காத. நீயே விசாரி.”

என்றார்.

வசீகரன் அமைதியாகத் தலையசைத்தான்.

“ஓகே, ப்பா.”

பிரதாப் ராஜின் பார்வை ஒரு நொடிக்கும் குறைவாக வசீகரனின் மீது நிலைத்தது.

அவரின் மண்டைக்குள்…

முகில்வர்மன்…

என்ற பெயர் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

தொடரும்…
 
Back
Top
Developed and maintained by – Akeshya