• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கடைசிச் சுவடு -13

lisa

SH Crystal Member
அத்தியாயம் – 13

அறியாமல் கடந்த உண்மை!

அரண்மனையின் பெரிய ஹாலில் இருந்த கடிகாரம், தன் கனமான ஊசலாட்டத்தோடு ‘டிக்... டிக்...’ என ஒலித்துக் கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதாப் ராஜின் கண்கள், எதிரில் நின்றிருந்த மகனின் முகத்தையே தீர்க்கமாக ஆராய்ந்தன.

அவர் குரலை உயர்த்தாமல், ஆனால் அதிகாரம் சிறிதும் குறையாத குரலில் கேட்டார்.

“தேடிப் போன காரியம் என்னாச்சு, வசீகரா...?”

வசீகரன் தந்தையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்து, “பப்பா... அது—” எனப் பதிலளிக்கத் தொடங்கிய அந்த நொடி, வசீகரனின் கூர்மையான பார்வை அந்த இடத்தையே அலசி ஆராய்ந்தது.

மாளிகையின் உள்பகுதியிலிருந்து வெள்ளி மணி ஒலிக்கும் மெல்லிய ஓசை எழுந்தது.

அம்மா எப்போதும் வரக்கூடிய சாத்தியம் இருப்பதால், “பிறகு பேசலாம் ப்பா” என்று சொல்லி முடிக்கவும், பூஜையறையின் கதவுகள் மெதுவாகத் திறக்கவும் சரியாக இருந்தது.

கையிலிருந்த வெள்ளித் தட்டிலிருந்து கிளம்பிய சாம்பிராணிப் புகையோடு வெளியே வந்தார் மாலினிதேவி.

நெற்றியில் தகதகவென மின்னிய பெரிய குங்குமப் பொட்டும், சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும் வயதிலும் குறையாத அந்த ராஜ தோரணையும், அவர் இந்த மாளிகையின் மகாராணி என்பதை உரக்கச் சொன்னது.

வந்தவர், பிரதாப் ராஜின் தலையில் அட்சதையிட்டு, நெற்றியில் திலகமிட்டார். பிறகு வசீகரனின் பக்கம் திரும்பி, அன்பும் அதிகாரமும் கலந்த பார்வையோடு அவனை எதிர்கொண்டார்.

“ஒரு வழியா வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுடுத்து போல?” குரலில் அத்தனை நக்கல்.

“ம்... ம்மா.” அவருக்கு மகனாயிற்றே அவனும்.

“க்கும்...” என்று சலித்தவர்,

“பயணம் எப்படி இருந்தது, வசீ? முகமெல்லாம் ஒரே சோர்வா இருக்கு?”

வசீகரன் தன் உதடுகளின் ஓரத்தில் கம்பீரமான புன்னகையை வரவழைத்துக் கொண்டான்.

“வழக்கம்போலத்தான், ம்மா,” என்று முடித்துவிட,

அப்போதுதான் மாளிகையின் பிரம்மாண்ட தேக்குமரப் படிக்கட்டில் காலடிகள் அதிர, கையிலிருந்த லேப்டாப்போடு இறங்கி வந்தான் இளையமகன் தீரன் ராஜ்.

“க்கும்... அண்ணன் காலடி எடுத்து வச்சதும் வீட்டில் சின்ன பையன் ஒருத்தன் இருக்கானே, அப்படின்ற ஞாபகம் என்ன அம்மாவுக்கு இருக்காதே!” என்று குறுஞ்சிரிப்போடு வம்புக்கு இழுத்தான்.

மாலினிதேவி மகனைப் பார்த்துச் சலிப்பாகப் புன்னகைத்தபடி,

“ஏழுகழுதை வயசாகி, இரண்டு பேருக்கும் இப்பவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறது சின்னப் பசங்கதான் நீங்க... இனியும் உங்களோட என்னால மல்லுக்கட்ட முடியாது. இப்ப வாங்க, சாப்பாடு ஆறப்போகுது,” என்று சொல்லிவிட்டு உணவறை நோக்கி நகர்ந்தார்.

பிரதாப் ராஜும் தன் சாய்வு நாற்காலியிலிருந்து நிமிர்ந்து எழுந்து அவர்களோடு சென்றார்.

---

நீண்ட தேக்குமர மேஜையில் குடும்பமே கூடி அமர்ந்தது. ஆவி பறக்கும் சுடச்சுட உணவுகளை மாலினிதேவி பரிமாறிக் கொண்டிருக்க...

“வசீ... எப்பதான்...” என்று அவர் ஆரம்பிக்கும் போதே,

“இப்ப நான் சாப்பிடணுமா, வேணாமா?” எனவும் அவர் வாய்க்குள்ளேயே புலம்பத் தொடங்கினார்.

தீரன் உடனே,

“நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு, பாருங்க... உங்களுக்கு இன்னொரு மகனும் இருக்கான். அவனிடமும் கல்யாணத்தைப் பற்றி பேசணும்னு தோணுதாம்மா...” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு வம்பிழுத்தான்.

“அதானே... ம்மா, அவன்தான் ரெடியா இருக்கானே! அவனுக்குப் பொண்ணு பார்க்கலாம் இல்ல!” என்று வசீகரன் தன் தம்பியைப் பார்த்து நக்கலான குரலில் கூறினான். அவனுக்குத் தெரியாத என்ன? தன் தம்பியைப் பற்றி.

அம்மா, பிள்ளைகள் மூவருமாய் அந்த உணவு மேஜையில் கலகலத்தபடி இருக்க, பிரதாப் ராஜ் மட்டும் அமைதியாகவே இருந்தார். அவர் கைகள் உணவைத் தொட்டதே தவிர, பார்வை முழுக்க வசீகரனின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதிலேயே நிலைத்திருந்தது.

---

காலை உணவு முடிந்து மாலினிதேவி சமையலறைக்குள் நுழைய, தீரனும் தன் லேப்டாப்பை மூடி வைத்தபடி அண்ணன் அருகில் அமர்ந்தான்.

இதுவரை இருந்த விளையாட்டு, குறும்பெல்லாம் மறைந்து, அவனிடமும் ஒரு ஆளுமை வந்து அமர்ந்தது.

ஹாலில் மீண்டும் ஒருவித மௌனம் சூழ்ந்தது. பிரதாப் ராஜ் தன் காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு, கம்பீரமாக மகனை நோக்கித் திரும்பினார்.

“இப்போ சொல்லு, வசீகரா...”

வசீகரனின் முகத்தில் இருந்த லேசான புன்னகை மறைந்து, மீண்டும் அந்தத் தீவிரமான தோற்றம் வந்து அமர்ந்துகொண்டது.

“கிடைக்கலப்பா.”

“என்ன சொல்ற?”

“நான் போன இடம் சரியான இடம்தானா என்பதிலேயே எனக்கு இப்போ சந்தேகமா இருக்கு.”

பிரதாப் ராஜின் கூர்மையான புருவங்கள் சுருங்கின.

“அப்போ... அந்த வரைபடம்?”

“அது முழுமையில்லப்பா.” வசீகரன் தன் பையிலிருந்த பழமை படிந்த காகிதத்தைச் சுருள் நீக்கி மேஜை மீது விரித்தான். “இதுல இருக்கற அந்த அருவியைத் தான் நான் பார்த்ததுனு முதலில் தோணுச்சு. ஆனா, இதுல இருக்கற எந்தக் குறியீடும் அங்க எனக்குக் கிடைக்கல, ப்பா,” என்றான் அப்பாவையும் தம்பியையும் பார்த்தபடி.

பிரதாப் ராஜ் அதை வாங்கித் தன் கூர்மையான பார்வையால் ஆராய்ந்தார்.

“வேற எந்தத் தகவலும் உனக்குக் கிடைக்கலையா?”

வசீகரன் ஒரு நொடி யோசித்துவிட்டு,

“ப்பா... இப்ப போனதோட நான் ஐந்தாவது முறையா அந்தக் காட்டுக்கு போயிருக்கேன். ஆனா, இந்த அருவியை நான் பார்க்கல...” என்று சற்று இடைவெளி விட்டவன், “இரண்டு பசங்க ட்ரெக்கிங் வந்திருந்தாங்க. அப்புறம் ஒரு பொண்ணு பச்சிலையைத் தேடி வந்தா. அதே ஒருத்தன்தான் இந்த அருவிக்கு மத்த ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போனான்...” என்றவனை இடைமறித்து,

“ம்மா... அண்ணா, அவங்கள போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்தாங்க. அவங்க யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி...” என்று அன்றைய நிகழ்வுகளைத் தீரன் சொல்ல,

“இதுல இன்னொரு விஷயம் இருக்குப்பா. முகில்வர்மன்... Tech Solutions தெரியும் தானே, ப்பா? அவன்தான் அங்க ட்ரெக்கிங் வந்தது. ஒரு பொண்ணு வந்தான்னு சொன்னேனே... அவ டாக்டர். அதுவும் Internal Medicine Specialist,” என்றான் தந்தையைப் பார்த்தபடியே.

“அவங்களுக்கு நம்ம தேடலைப் பற்றி ஏதாச்சும் தெரியுமா?” என்று பிரதாப் கேட்டார்.

“தெரியாதுப்பா... ஆனா, முகில்வர்மனை நான் தங்கியிருந்த ஹோட்டல்லயும் பார்த்தேன்.”

‘முகில்வர்மன்’ என்ற பேரைக் கேட்டதும், அந்தப் பழைய காகிதத்தைப் பிடித்திருந்த பிரதாப் ராஜின் விரல்கள் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றன.

“அவன் உன்னை கவனிச்சானா?”

“இல்லப்பா.”

“அப்படின்னா, அவனைக் கண்டுக்காம விட்டுடு. நம்ம தலைமுறைத் தேடல் வெளியில் கசியக் கூடாது. அடுத்த தடவை போறப்போ வெறும் தகவலோட மட்டும் திரும்பி வராதே, வசீகரா!”

“ம்ம்... ப்பா.”

---

அதே நேரத்தில்...

திருநெல்வேலி நகரத்தின் பரபரப்பான காலை வேளையில், மாறனின் டிராவல்ஸ் அலுவலகத்தின் முன் அந்த மெர்சிடீஸ் பென்ஸ் கார் வந்து நின்றது.

தொடரும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya